யார் அந்த சார் என முழங்கிய எடப்பாடி பழனிசாமி! “பொள்ளாச்சியை பேசுவோமா?” முதல்வர் பதிலடி
சென்னை: மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் யார் அந்த சார்? என அதிமுகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி இதே கேள்வியை பிரதிபலித்த நிலையில், முதல்வர் பொள்ளாச்சி விவகாரத்தை சுட்டிக்காட்டி பதிலடி கொடுத்திருக்கிறார்.
சட்டமன்றத்தில் முதல்வர் பேசியதாவது, "பேரவை தலைவர் அவர்களே நாங்கள் திரும்ப திரும்ப சொல்கிறோம் எந்த காரணத்தைக் கொண்டும் நாங்கள் யாரையும் காப்பாற்ற முயற்சிக்க மாட்டோம். அது எங்களுக்கு தேவையும் அல்ல. குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை வாங்கி கொடுப்பதுதான் எங்களுடைய கடமை. அதில் எந்த மாற்றமும் கிடையாது. ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் திரும்பத்திரும்ப இதையே பேசிக் கொண்டிருக்கிறார். இப்படியே போனால் நான் பொள்ளாச்சி சம்பவத்திலிருந்து விஷயத்தை தொடங்க வேண்டியது இருக்கும்.

பொள்ளாச்சி வழக்கை பொறுத்தவரையில் புகார் வந்தவுடன் உடனடியாக எஃப் ஐ ஆர் போடவில்லை. அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை பொருத்தவரையில் புகார் கொடுத்த உடனே எஃப் ஐ ஆர் போடப்பட்டு சம்பந்தப்பட்ட நபர் அடுத்த நாளே கைது செய்யப்பட்டு இருக்கிறார். ஆனால் நீங்கள் ஆட்சியில் இருந்தபோது பொள்ளாச்சி விவகாரத்தை பொருத்த வரையிலே எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டு 15 நாட்கள் கழித்து தான் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த 12 நாட்களில் நடந்தது என்ன, குற்றச்சாட்டை பெற்றவர்களை காப்பாற்ற முயற்சித்தீர்கள் என்பதே எங்களுடைய விமர்சனம்.
இதை மூடி மறைத்து தவறான தகவலை எதிர்க்கட்சித் தலைவர் இங்கே பதிவு செய்திருக்கிறார் நான் இப்போது கூறியது தான் உண்மையான தகவல். பெண்கள் பாதுகாப்பில் இந்த அரசு முழுமையான அக்கரையை கொண்டிருக்கிறது சுமார் 86 சதவீத வழக்குகளில் 60 நாட்களுக்குள் காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது.
சத்யா என்ற பெண் ரயிலில் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனையை பெற்றுக் கொடுத்த அரசும் இந்த அரசுதான். அனைத்து பெண்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் அரசாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. பெண்களுக்கு இழக்கப்படும் பாலியல் வன்கொடுமை என்பது யாராலும் மன்னிக்க முடியாத குற்றம். இந்த செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு வழங்கப்படும் தண்டனையானது இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபட நினைப்பவர்களுக்கு வழங்கப்படும் எச்சரிக்கையாக இருக்கப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.
மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட நபர் அடுத்த நாளே கைது செய்யப்பட்டபோதும், எதிர்க்கட்சிகள் இந்த சம்பவத்தை கண்டித்து போராட்டத்தை அறிவித்திருந்தன. குறிப்பாக அதிமுகவினர் "யார் அந்த சார்" என்கிற ஹாஷ் டேகை ட்ரெண்டிங் செய்தனர். போலீசார் இந்த சம்பவத்திலிருந்து யாரையோ காப்பாற்ற முயல்வதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அதிமுக இந்த பிரசாரத்தை முன்னெடுத்திருந்தது.












Click it and Unblock the Notifications