Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வகுப்பறைக்குள்ளே குட்டி விஞ்ஞானிகள்! - ரூ.25 கோடியில் ஸ்டாலின் கொடுத்த அதிரடி டுவிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாம் அறிவியல் உலகத்தில் வாழ்கிறோம். தொழில்நுட்பம் தெரியாதவர்கள் இந்தக் காலத்தில் எந்தத் தொழிலையும் செய்ய முடியாது. அந்தளவுக்கு அறிவியல் துறையின் வளர்ச்சி வேகம் எடுத்திருக்கிறது. இந்தியாவிலேயே உயர்கல்விச் சேர்கையில் விகிதாச்சார அடிப்படையில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக இருக்கிறது.

 வானவில் மன்றம்

வானவில் மன்றம்

அறிவியல் துறையின் வளர்ச்சியை உணர்ந்து, 'வானவில் மன்றம்' என்ற திட்டத்துக்கு உயிர்கொடுத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். வெறும் ஏட்டுப் படிப்பை ஏழைக்குத் தருவதில் பலன் இல்லை என்பதை உணர்த்தவே இந்தத் திட்டம் செயல்வடிவம் பெற்றுள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்கள் அறிவியலை அனுபவப்பூர்வமாக கற்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். இனி அரசுப் பள்ளிகளில் அறிவியலும் கணிதமும் அடுத்த பாய்ச்சலுக்குத் தயாராகி வருகிறது.

ஆறாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை இந்த 'வானவில் மன்றம்' ஊக்குவிக்கும். ரூ. 25 கோடி செலவில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளை நோக்கி இந்த மன்றம் நடைபோட்டுள்ளது. இதற்காக நடமாடும் 100 அறிவியல் மற்றும் கணித ஆய்வக வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்மூலம் பள்ளி மாணவர்கள், தங்களின் அன்றாட வாழ்வில் நடைபெறும் அறிவியல் செயல்பாடுகளை சோதனைத் திறன் மூலம் நேரடியாகச் சோதித்து அறிந்து கொள்ள முடியும். அறிவியல் என்பது செயல் வடிவில் எப்படி உள்ளது என்பதைக் கற்றுக் கொள்ளும் மாணவர்கள், மிகத் தெளிவான சிந்தனை ஆற்றலைப் பெற்று புதிய கண்டுபிடிப்புகளுக்கு வித்திடும் விஞ்ஞானிகளாக வரும் காலத்தில் உருவெடுப்பார்கள் என்பதற்காகவே இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

 பயன்பெற்ற 13 ஆயிரத்து 210 பள்ளிகள்

பயன்பெற்ற 13 ஆயிரத்து 210 பள்ளிகள்

தமிழ்நாடு முழுமைக்குமான இத்திட்டத்தினை திருச்சி காட்டூரில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். மொத்தம் 13 ஆயிரத்து 210 பள்ளிகளில் இது செயல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் பள்ளி மாணவர்கள் கணித வகுப்புகளை செயல்வடிவில் கற்பதற்கான சில கருவிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

'வானவில் மன்றம்' குறித்துப் பேசிய இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாமலை, ''கிட்டத்தட்ட 20 லட்சம் மாணவர்கள் இதன்மூலம் பயனடைய உள்ளனர். இது ஒரு சிறப்பான திட்டம்" என்கிறார்.

நடிகர் மணிகண்டனோ, "தனக்குள் எழுகின்ற எல்லா கேள்விகளுக்கும் விடையைத் தேடிக் கொண்டிருப்பதே மாணவப் பருவம். அந்த மாணவப் பருவத்துக்கான கேள்விக்கு விடையளிக்கும் திட்டம்தான் இது. அறிவுத்தாகத்துக்கு இம்மன்றம் சரியான தீர்வு" என்கிறார்.

தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவக்குமார் பேசும்போது, ''பொதுவாக நமது கல்விமுறை எப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது? ஓர் ஆசிரியர் வகுப்பறையில் பாடம் எடுப்பார். அதை அப்படியே மாணவர்கள் கேட்பார்கள்.

அதன்மூலமாக மட்டுமே அவர்களின் கற்றல் அறிவு செயல்படும் வகையில் கடந்த காலங்களில் நமது கல்விமுறை இருந்தது. அதில் சில மாணவர்கள் தங்களின் சொந்த ஆர்வத்தின் அடிப்படையில் ஆராய்ந்துக் கற்றுக் கொள்வார்கள். மற்றவர்கள் அப்படியே வகுப்பறையில் கேட்பதை மட்டுமே கல்வி அறிவாகக் கொண்டிருப்பார்கள்.

 கணிதமும் அறிவியலும்

கணிதமும் அறிவியலும்

அவ்வாறு பழைய முறையின் அடிப்படையில் அறிவியல் மற்றும் கணிதத்தை மாணவர்கள் கற்பது போதாமையை ஏற்படுத்தும் என்பதை அரசு உணர்ந்ததால், அவர்கள் செய்முறை விளக்கத்துடன் இந்தப் பாடங்களை முழுமையாகக் கற்க வேண்டும் என்பதற்காக 'வானவில் மன்றம்' என்பதைத் தொடங்கியுள்ளனர்" என்கிறார்.

செயல்முறைக் கல்வியை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள புனிதா, "அறிவியலையும் கணிதத்தையும் வெறும் பாடமாக இல்லாமல் செயல்முறையில் எளிமையாகவும் ஆழமாகவும் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்கான பயிற்சியை அரசு வழங்கி உள்ளது. நாங்கள் நேரடியாக சோதனைகளைச் செய்து காட்டுவதால், மாணவர்களும் சில புதிய கேள்விகளைக் கேட்பார்கள். அதை விளக்குவதன் மூலம் அவர்களின் அறிவு ஆழமாகும்" என்கிறார்.

''ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அறிவியல் மற்றும் கணிதத்தைப் படிக்கிறார்கள். அதைவைத்து எழுதுகிறார்கள். ஆனால், செயல்முறைப் பாடம் என்பது ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு வரும்போதுதான் இருக்கிறது.

 உயர்கல்வியில் உயர்ந்த தமிழ்நாடு

உயர்கல்வியில் உயர்ந்த தமிழ்நாடு

ஆகவேதான், அறிவியலின் அடிப்படை அறிமுகத்தை செயல்முறையாக முன்பே கற்றுத்தர 'வானவில் மன்றம்' என்ற திட்டத்தை முதலமைச்சர் உருவாக்கிக் கொடுத்துள்ளார். இதன்மூலம், ஒரு பொருளைப் பார்ப்பதுடன் மட்டும் நின்றுவிடக் கூடாது, அதைத் தொட்டு அதற்கான அனுபவத்தைப் பெற்றுப் புரிந்துகொள்ள வேண்டும். இதன் அடிப்படையே ஒரு மாணவரை அனுபவரீதியாக யோசிக்க வைப்பதுதான்" என்கிறார் செயல்முறைக் கற்றல் பயிற்சியளிக்கும் தேன்மொழி என்பவர்.

"ஒரே வரியில் சொன்னால் 'வானவில் மன்றம்' என்பது 'நான் முதல்வன்' திட்டத்தை அடுத்து வந்த மிகப் பிரம்மாண்டமான திட்டம். இன்றைய உலகம் என்பது தொழில்நுட்ப உலகம். வருங்கால அறிவியல் உலகில் பல சாதனைகள் நடக்க போகின்றன. அதற்கேற்ப, நமது பள்ளி மாணவர்களின் எதிர்காலத்துக்குத் தேவையான அறிவியல், கணிதம் ஆகியவற்றை நன்கு போதிக்கக்கூடிய கல்விமுறை அவசியம்.

அதற்காக எட்டாம் ஒன்பதாம் வகுப்பு படிக்கின்றபோதே, அந்த மாணவர்களை அறிவியல் மற்றும் தொழில்நுட்பரீதியாகத் தயார் செய்வது அவசியமாகிறது. அதற்கான அடித்தளமாக 'வானவில் மன்றம்' அமையும்'' என்கிறார், மூத்த கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி.

தொடர்ந்து நம்மிடம் பேசிய அவர், ''பள்ளிப்படிப்பிலேயே கணிதம், அறிவியல் தொடர்பான செயல்முறை அறிமுகத்தை அடையும் மாணவர்கள் கல்லூரி படிப்பை நோக்கி வருகின்றபோது அவர்களுக்கு இவற்றின் புரிதல் என்பது கூடுதலாக இருக்கும். பொறியியல் போன்ற பல படிப்புகள் கணிதம் மற்றும் அறிவியலை அடிப்படையாகக் கொண்டவை. அதை மாணவர்கள் மிக எளிமையாகப் புரிந்து கொள்வதற்கு 'வானவில் மன்றம்' வழி ஏற்படுத்தித் தரும்.

 அரசுப் பள்ளி மாணவர்களின் திறமைகள்

அரசுப் பள்ளி மாணவர்களின் திறமைகள்

அரசுப்பள்ளி மாணவர்களிடம் திறமைகள் ஒளிந்து கொண்டிருக்கும். அதை வெளியே கொண்டுவருவதற்கான பொறியைப் பற்ற வைக்கவேண்டும். கண்டுபிடிப்பு என்பது எப்போது உருவாகிறது என்றால் ஒரு சவாலை சந்திக்கும்போதுதான். அந்தச் சவால் அரசுப் பள்ளி மாணவர்களின் வாழ்க்கையில் அதிகம். அப்படி சவாலை எதிர்கொள்ளும்போது புதிய யோசனைகள் உதிக்கும்.

இந்தியாவிலேயே உயர்கல்விச் சேர்கையில் விகிதாச்சார அடிப்படையில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக இருக்கிறது. அது ஏறக்குறைய 51.4 சதவீதம். இது பெரிய சாதனை. 'வானவில் மன்றம்' போல புதிய பாய்ச்சல் கல்வித்துறையில் நடக்கும்போது பெரிய அளவில் மாற்றத்தைக் கொண்டு வரும் என்பது உறுதி" என்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+