தமிழகத்தில் மதவாத சக்திகளை அரசு வளரவிடாது.. நாங்கள் மதங்களுக்கு எதிரி அல்ல.. முதல்வர் ஸ்டாலின்
சென்னை: தமிழகத்தில் மதவாத சக்திகளை வளரவிடமாட்டோம், நாங்கள் மதங்களுக்கு எதிரி அல்ல என்றும் முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் தெரிவித்தார்.
இந்த ஆண்டின் முதல் தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடர் கடந்த 9ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்த நிலையில் நேற்று முதல் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடந்து வருகிறது.
அந்த வகையில் இன்றைய தினம் முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து உரையாற்றினார். அப்போது அவர் தனது உரையில் நாங்கள் மதவாதத்தைத்தான் எதிர்க்கிறோம் மதங்களை எதிர்ப்பதில்லை. தமிழகத்தில் மதவாத , இனவாத, தீவிரவாத சக்திகளை வளரவிடமாட்டோம்.

அமைதிப்பூங்கா
தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது. அதனால்தான் முதலீட்டாளர்கள் தமிழகத்தை தேடி வருகிறார்கள். நாங்கள் நாத்தீகர்கள் என்பதால் கோயில்களை சீரமைக்கவில்லை என எங்கள் மீது சிலர் வதந்தியை பரப்பி வருகிறார்கள். மீண்டும் கூறுகிறேன், நாங்கள் மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல. பள்ளி வாசல்களுக்கான மானியம் ரூ. 6 கோடியிலிருந்து ரூ. 10 கோடி உயர்த்தி வழங்கப்படுகிறது.

திமுக ஆட்சி
திமுக ஆட்சிக்கு வந்த ஒன்றரை ஆண்டுகளில் ரூ 3500 கோடி மதிப்பிள்ள கோயில் சொத்துகள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டது. தமிழ்நாட்டில் பணிபுரிந்து வரும் வடமாநிலத்தவர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அனைத்து பள்ளிகளிலும் தமிழ் மொழி கற்பிக்கப்படுவதை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் கடன் குறைவு
அதிமுக ஆட்சியை காட்டிலும் திமுக ஆட்சியில் அதிகளவிலான கடனை பெற்றுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருந்தார். அதிமுக ஆட்சியின் இறுதியில் அதாவது 2020- 2021 ஆம் ஆண்டு அவர்கள் வாங்கியிருந்த கடன் ரூ 83 ஆயிரம் கோடி. ஆனால் திமுக ஆட்சியில் வாங்கிய கடன் ரூ 79 ஆயிரம் கோடி. அதாவது அதிமுகவை காட்டியிலும் திமுக ஆட்சியில் ரூ 4 ஆயிரம் கோடி குறைவுதான்.

தமிழ்நாடு முதலிடம்
இந்தியாவில் உள்ள பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது சாதாரண விஷயமல்ல. காலை சிற்றுண்டி உண்ணும் குழந்தைகள் முகத்தில் தினமும் உதயசூரியன் உதிக்கிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் அவர் தனது உரை தொடங்கி போது கூறுகையில் நாள்தோறும் அல்ல என்பார்கள். ஆனால் நான் நொடிக்கு நொடி ஓடிக் கொண்டு இருக்கிறேன். இது பாராட்டுக்காக அல்ல. இதுதான் எனது இயல்பு.

திராவிட மாடல்
தமிழ்நாட்டில் வீரத்துடன் விவேகத்துடன் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது. 20 மாதங்களில் இமாலய சாதனைகளை செய்து மக்கள் நலனை சிந்தனையில் கொண்டு ஆட்சி நடைபெறுகிறது. சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல் ஆகிய கொள்கைகளை உள்ளடக்கிய திராவிட மாடல் ஆட்சி வீரத்துடனும், விவேகத்துடன் நடைபெற்று வருகிறது என்பதை தமிழ்நாடு மட்டுமல்ல, இந்திய துணை கண்டமே இப்போது உணர்ந்துவிட்டது. தமிழ்நாடு முழுவதும் 2 ஆண்டுகளில் 10,000 கி.மீ நீள சாலைகள் ரூ. 4,000 கோடியில் தரம் உயர்த்தப்படும்.

உலக முதலீட்டாளர் மாநாடு
உலக முதலீட்டாளர் மாநாடு அடுத்த ஆண்டு ஜனவரி 10,11 தேதியில் சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தப்படும். தொழில் தொடங்குவதற்கான சிறந்த மாநிலங்கள் பட்டியலில் 14 ஆவது இடத்தில் இருந்து 3 இடத்திற்கு தமிழ்நாடு அரசு முன்னேறியுள்ளது. உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டம் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது. இதில் அவரவர் தொகுதியில் நிறைவேற்றப்படாத பல முக்கிய கோரிக்கைகளை அந்தந்த மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர்களிடம் கேட்டு கொண்டிருந்தேன் என முதல்வர் தெரிவித்திருந்தார்.


Click it and Unblock the Notifications
