அரசு ஊழியர்களின் நலன் காப்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறேன்! சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
சென்னை: அரசு ஊழியர்களின் நலன் காப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புதிய நிதி ஆதாரத்தை திரட்டுவதுதான் தங்கள் முன்னால் உள்ள மிகப்பெரிய சவால் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு பதிலுரை ஆற்றிய போது இதனைக் கூறினார். மேலும் இது தொடர்பாக அவர் பேசியதாவது;

நிதி உரிமைகள் பறிப்பு
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாநில அரசுகளின் வரி உரிமைகள், நிதி உரிமைகள் பலவும் ஏற்கெனவே பறிக்கப்பட்டுவிட்டன. நிதிக்காக ஒன்றிய அரசை சார்ந்திருக்க வேண்டிய நிலை கடந்த 8 ஆண்டுகளில் மேலும் அதிகமாகிவிட்டது. அனைத்து நிதிகளையும் கேட்டுக் கேட்டு வாங்க வேண்டிய நிலைமையே இருக்கிறது.

பெரும் சுமை
கட்டணம் உயர்த்தினால்தான் சலுகைகள் வழங்கப்படும் என ஒன்றிய அரசு தொடர்ந்து வலியுறுத்துகிறது. இப்படிப்பட்ட நிலையிலும், தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும் சுமையைத் தந்துவிடக் கூடாது என்று பெரும்பாலான சுமையை அரசே தாங்கிக் கொண்டு, சிறிய அளவிலான கட்டண சீர்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டிய நிலையில் அந்த நடவடிக்கைகள் நடுத்தர வர்க்கத்தினரை பாதிக்காத வகையில் மேற்கொள்ளப்பட்டன.

பெரிய சவால்
புதிய நிதி ஆதாரத்தை திரட்டுவதுதான் எங்கள் முன்னால் உள்ள மிக முக்கியமான, பெரிய சவாலாக இருக்கிறது என்பதையும் நான் மனம் திறந்து ஒப்புக்கொள்கிறேன்.மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இத்தகைய சூழலிலும் அரசு ஊழியர்களுக்கு இந்த ஆட்சி அமைந்ததில் இருந்து பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

கண்ணும் கருத்துமாக
அரசு ஊழியர்களின் நலன் காப்பதில் திராவிட முன்னேற்றக் கழக அரசு எந்தளவிற்கு கண்ணும் கருத்துமாகச் செயல்படும் என்பதை அரசு ஊழியர்கள் நன்கு அறிவார்கள். அரசு நலத் திட்டங்களையும், பல்வேறு சேவைகளையும் மக்களிடம் சிறப்பாக கொண்டு சேர்க்கும்விதமாக 10 ஆயிரத்து 338 புதிய பணியிடங்கள் பல்வேறு துறைகளில் அரசால் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications