தங்கப் பத்திர திட்டம், கோவில் தங்கம்.. திடீரென பரவும் தகவல் உண்மையா? மத்திய அரசு விளக்கம் பாருங்க
சென்னை: நாடு முழுவதும் உள்ள பல்வேறு கோவில் அறக்கட்டளைகள் மற்றும் மத நிறுவனங்கள் வசம் பாதுகாப்பாக இருக்கும் தங்க இருப்புகளை பணமாக்கும் புதிய திட்டம் ஒன்றை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளதாக சமீபத்தில் சில தகவல்கள் வெளியாகின.. சோஷியல் மீடியாவில் பரவிய இந்த விவகாரம் பொதுமக்கள் மற்றும் ஆன்மீக பக்தர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், இந்தத் தகவல்களுக்கு மத்திய நிதியமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ மறுப்பை இப்போது தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள பல்வேறு கோவில்களில் பக்தர்களால் பல நூற்றாண்டுகளாகச் செலுத்தப்பட்ட காணிக்கைகள் மூலம் பெருமளவில் தங்கம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

தங்கப் பத்திர திட்டம்
உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள ஒரு புள்ளிவிவர மதிப்பீட்டின்படி, நாடு முழுவதும் உள்ள கோவில்களின் பாதுகாப்பறைகளில் மட்டும் சுமார் 3,000 முதல் 4,000 டன்கள் வரை தங்கம் இருப்பு உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.. இந்த தங்க இருப்புகளுக்குப் பதிலாக, மத்திய அரசு தங்க பத்திரங்களை வழங்கப் போவதாக அண்மையில் சமூக வலைத்தளங்களில் சில செய்திகள் தீயாய் பரவின.
இந்த விவகாரம் மக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியதையடுத்து, மத்திய நிதியமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தற்போது விளக்கம் அளித்துள்ளது.
தங்க இருப்புகள்
அதன்படி கோவில்களின் தங்க இருப்புகளுக்கு ஈடாக மத்திய அரசு கோவில்களுக்குத் தங்கப் பத்திரங்களை வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும், கோவில்களின் தங்க இருப்புகளைப் பணமாக்குவதற்கான ஒரு முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது..
மேலும், இத்தகைய செய்திகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்று மத்திய நிதியமைச்சகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.. அதுமட்டுமல்ல இது போன்ற தேவையற்ற வதந்திகளைப் பொதுமக்கள் யாரும் நம்பவோ அல்லது மற்றவர்களுக்குப் பரப்பவோ கூடாது என்றும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.. உண்மைத்தன்மை சரிபார்க்கப்படாத தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்புவது மக்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் நிதியமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
அரசு திட்டங்கள் - கோவில் தங்கம்
அரசு திட்டங்கள் தொடர்பான எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும், அரசின் இணையதளங்கள் மற்றும் முறையான பத்திரிகை செய்தி குறிப்புகள் வாயிலாக மட்டுமே பொதுமக்களுக்கு வெளியிடப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. உலக தங்க கவுன்சில் மதிப்பீட்டின்படி கணக்கிடப்பட்டுள்ள 3,000 முதல் 4,000 டன்கள் வரையிலான தங்கம் அனைத்தும் அந்தந்த கோவில்களின் பாதுகாப்பறைகளிலேயே தொடர்ந்து சேமிக்கப்பட்டு வருகிறது..
இதனிடையே, சமூக வலைதளங்களில் பரவும் சரிபார்க்கப்படாத இத்தகைய போலிச் செய்திகள் குறித்துப் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் தரப்பிலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.. அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தவிர்த்துப் பகிரப்படும் வதந்திகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது..
மத்திய அரசு விளக்கம்
மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த நேரடி விளக்கத்தின் மூலம், சமூக வலைத்தளங்களில் நிலவி வந்த பல்வேறு குழப்பங்களுக்கும், விவாதங்களுக்கும் தற்போது தெளிவான விளக்கம் கிடைத்துள்ளது..!!!
இதுபோன்ற உணர்வுபூர்வமான விவகாரங்களில் சமூக வலைத்தள பயனர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களும் சுட்டிக்காட்டுகிறார்கள்.
குறிப்பாக, வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மத நிறுவனங்களின் சொத்துக்கள் தொடர்பான செய்திகளை ஷேர் செய்யும்போது, அதன் நம்பகத்தன்மையை அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனங்கள் மூலமாக உறுதி செய்த பிறகே மற்றவர்களுக்கு அனுப்ப வேண்டும்.. சரிபார்க்கப்படாத வதந்திகள் பொது அமைதியை கெடுக்கும் என்பதால், இணையதளங்களில் போலி செய்திகளை உருவாக்குபவர்கள் மற்றும் அதனைப் பரப்புபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் எச்சரிக்கப்படுகிறது..!!












Click it and Unblock the Notifications