நா + நயம் மிக்க தலைவர் கருணாநிதி.. வரலாற்றை கூறி நாணய வெளியீட்டு விழாவில் உணர்ச்சி பொங்க பேசிய ஸ்டாலின்!
சென்னை: மறைந்த முதல்வர் கருணாநிதியின் நினைவாக 100 ரூபாய் நினைவு நாணயத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னையில் இன்று வெளியிட்டார். அதனை முதல்வர் ஸ்டாலின் பெற்று கொண்டார். இந்த விழாவில் கருணாநிதியின் பெருமை மற்றும் வரலாற்றை கூறி முதல்வர் ஸ்டாலின் உணர்ச்சிப்பூர்வமாக பேசினார்.
தமிழக முன்னாள் முதல்வரும், திமுகவின் தலைவருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது நினைவை போற்றும் வகையில் 100 ரூபாய் நினைவு நாணயம் இன்று வெளியிடப்பட்டது. சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் 100 ரூபாய் நினைவு நாணயத்தை வெளியிட்டார். அதனை முதல்வர் ஸ்டாலின் பெற்று கொண்டார்.

அதன்பிறகு இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: என் உணர்வுகள் எப்படி இருக்கிறது என்று சொல்ல முடியாத வகையில் நான் நின்று கொண்டிருக்கிறேன். நம்மை ஆளாக்கிய தலைவருக்கு சிறப்பு செய்யும் வகையில் நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.
நா + நயம் மிக்க தலைவருக்கு நாணயம் வெளியிடுவது மிக மிக பொருத்தமானது. நூற்றாண்டு விழா நாயகருக்கு 100 ரூபாய் நாணயம் வெளியிடப்படுகிறது. இதுவரை தலைவரை நாம் கொண்டாடி வந்தோம். இன்று இந்தியாவே கொண்டாடுகிறது என்பது தான் இந்த விழா. இதுபோன்ற எத்தனையோ வகையான சிறப்புக்கு தகுதியானவர் தான் கலைஞர். இது உலகம் ஒப்பு கொண்டுள்ள உண்மை.
கலைஞர் நினைவடைந்த நாள் முதல் அவர் புகழை தான் போற்றி வருகிறோம். ஓராண்டு காலமாக அவரது நூற்றாண்டு விழாவை கொண்டாடி அவரது சாதனை சொல்லும் நிகழ்ச்சிகளை நடத்தினோம். பல்வேறு முக்கிய திட்டங்களை செயல்படுத்தினோம். கிண்டியில் கலைஞர் உயர் சிறப்பு மருத்துவமனை, மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம், ஒரு கோடியே 15 லட்சம் மகளிருக்கு உரிமை தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் , கிளாம்பாக்கத்தில் கலைஞர் நினைவு நூற்றாண்டு பேருந்து முனையம் தொடங்கப்பட்டது. இந்த பெருமைக்கெல்லாம் மகுடமாக கலைஞர் உருவம் தாங்கிய நாணயம் வெளியிடப்படுகிறது.
இன்று நாம் பார்க்கும் நவீன தமிழகத்துக்கான சிற்பி கலைஞர் தான். அவரது சாதனைகளை சொல்ல ஒருநாள் போதாது. தாய்மொழிக்கு செம்மொழி தகுதியை பெற்று தந்தார். மெட்ராஸை சென்னையாக மாற்றினார். 44 அணைக்கட்டுகள், ஏராளமான கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை உருவாக்கினார். சென்னையை சுற்றி மட்டும் ஏராளமான பாலம், செம்மொழி பூங்கா, டைடல் பார்க், தலைமை செயலகமாக கட்டப்பட்டு இன்று பெரிய அரசு மருத்துவமனையாக செயல்படும் ஓமந்தூரார் மருத்துவமனை, மெட்ரோ ரயில், அடையாறு ஐடி காரிடார், நாமக்கல் கவிஞர் மாளிகை என அனைத்தும் கலைஞரால் உருவாக்கப்பட்டது. அதனை யாராலும் மறைக்க முடியாது.
கடந்த 15ம் தேதி நம் நாட்டின் 78ம் ஆண்டு விடுதலை விழாவை கொண்டாடினோம். நான் மட்டுமல்ல நம் நாட்டின் அனைத்து முதல்வர்களும் கொடியேற்றினர். அதற்கான உரிமையை பெற்று கொடுத்தவர் கலைஞர் தான். இப்படி இன்று அகில இந்தியா போற்றும் தலைவராக உள்ளார். செயல்படுவதும், செயல்பட வைப்பதும் அரசியல் என்ற இலக்கணத்துக்கு சாட்சியாக இருந்தவர் கலைஞர். கட்சியின் தலைவராகவும் நாட்டின் தலைவராகவும் சிந்தித்து செயல்பட்டார்.
இந்தியாவை பாகிஸ்தான் அச்சுறுத்தியபோது தமிழக சட்டசபையில் பாகிஸ்தான் படையெடுப்பு கண்டன தீர்மானம் நிறைவேற்றினார். 1972 பாகிஸ்தான் போரின்போது நாட்டின் பாதுகாப்புக்காக ரூ.6 கோடி நிதி, போரில் மரணமடைந்த வீரர்களின் குடும்பத்துக்கு நிதி மற்றம் நிலம் வழங்கப்பட்டது. கார்கில் போரின்போது இந்தியாவில் அதிக தொகையை 3 தவணையாக ரூ.50 கோடி வழங்கியவர் வாஜ்பாயிடம் வழங்கியவர் கலைஞர்.
மாநில உரிமைக்காக குரல் கொடுத்த கலைஞர் நாட்டின் பாதுகாப்புக்கும் கைகொடுத்தவர் தான் கலைஞர். நாணயம் என்பதற்கு இன்னொரு பொருளும் உள்ளது. கொடுத்த வாக்கை காப்பாற்றுவதும் நாணயம் தான். சொன்னதை செய்வோம், செய்வதை தான் சொல்வோம் என சொல்லி சொன்னதையெல்லாம் செய்த காட்டியது தான் கலைஞரின் நாணயத்துக்கு அடையாளம். அவரது வழியில் திராவிட மாடல் அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது.
சட்டசபையை அதிகாரமிக்க அமைப்பாக இன்றி மக்களுக்கு சேவை செய்யும் அமைப்பாக இருக்க வேண்டும் என்றார் பெரியார். இது எனது அரசு அல்ல. நமக்கான அரசு. இது ஒரு கட்சியின் அரசு அல்ல. இது ஒரு இனத்துக்கான அரசு. அந்த வகையில் கலைஞரே இயக்கி கொண்டு இருக்கிறார். மனிதனின் வாழ்க்கை மரணத்துக்கு பிறகு கணக்கிட வேண்டும் என்று கூறியவர் கலைஞர். இன்று அவரது முகம் தாங்கிய நாணயத்தில் தமிழ் வெல்லும் என்ற சொல்லும் இடம்பெற்றிருப்பது என்றால் அதுவும் கலைஞரின் சாதனை தான். அவரது சாதனை வாழ்க்கையால் தலைவர் கலைஞரின் புகழ் வாழ்க. தமிழ்நாடு மக்கள் சார்பாக ராஜ்நாத் சிங்கிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்'' என்றார்.












Click it and Unblock the Notifications