5வது நாளாக மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின்.. உடல்நிலை எப்படி இருக்கு?
சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த 21 ஆம் தேதி முதல் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார். நேற்று அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஸ்டாலினுக்கு தலைசுற்றல் ஏற்பட்டதற்கு, அவரது இதய துடிப்பு சீரற்று இருந்ததே காரணம் என மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜூலை 21 ஆம் தேதி காலையில் வழக்கமான நடை பயிற்சி மேற்கொண்ட போது, அவருக்கு லேசான தலை சுற்றல் ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கூடுதல் பரிசோதனைக்காக அடுத்த நாள் தேனாம்பேட்டை அப்பல்லோ மருத்துவமனைக்கும் சென்று திரும்பினார்.

3 நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், மருத்துவமனையில் இருந்தபடியே அரசு அலுவல்களை முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். கடந்த ஜூலை 23 ஆம் தேதியன்று'உங்களுடன் ஸ்டாலின்' திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.அழகு மீனா, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர் ஆகியோருடன் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, முதல்வர் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில் மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும், முகாம்களுக்கு மனுக்களை அளிக்க வரும் மக்களுக்குத் தேவையான வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியதோடு, இதுவரை அந்த மாவட்டங்களில் நடத்தப்பட்ட முகாம்களின் எண்ணிக்கை, பெறப்பட்ட மனுக்களின் விவரங்கள் போன்றவை குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் கேட்டறிந்தார்.
அத்துடன் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் மனுக்கள் அளிக்க வருகை தந்த பயனாளிகளிடம் முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக கலந்துரையாடி, அவர்களது கோரிக்கைகளின் விவரங்கள் குறித்து கேட்டறிந்து, அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில், நேற்று காலையும் முதல்வர் ஸ்டாலினுக்கு கூடுதல் பரிசோதனைகள், சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. நேற்று காலை ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து அப்பல்லோ மருத்துவமனை மருத்துவ சேவைகள் இயக்குநர் பி.ஜி.அனில் நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
முதல்வர் ஸ்டாலினுக்கு தலைசுற்றல் ஏற்பட்டதற்கு, அவரது இதய துடிப்பு சீரற்று இருந்ததே காரணம் என மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. இதய இடையீட்டு சிகிச்சை நிபுணர் மருத்துவர் ஜி.செங்கோட்டுவேலு தலைமையிலான மருத்துவர் குழுவின் பரிந்துரைப்படி, முதல்வருக்கு இதய துடிப்பை சீராக்குவதற்கான சிகிச்சை ஜூலை 24 ஆம் தேதி காலை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோ பரிசோதனையில், வேறு பாதிப்புகள் எதுவும் இல்லை என்பது உறுதியானது. முதல்வர் நலமுடன் உள்ளார். அடுத்த 2 நாட்களில் அவர் தனது இயல்பான பணிக்கு திரும்புவார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
முதல்வர் ஸ்டாலின் விரைந்து நலம்பெற்று வீடு திரும்ப பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசுகையில், முதல்வர் ஸ்டாலின் இன்னும் 2 நாட்களில் வழக்கமான பணிகளுக்குத் திரும்புவார் எனத் தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "உங்கள் ஒவ்வொருவர் முகத்திலும் இருக்கும் உற்சாகம் எனக்கும் தொற்றிக் கொண்டது. வரும் வழி எல்லாம் தாய்மார்கள் எனது கையைப் பற்றிக்கொண்டு அண்ணா, அப்பா எப்படி இருக்கிறார்? என்று ஒரு குடும்ப உறுப்பினரை விசாரிப்பது போல விசாரித்தார்கள். நம் தலைவர் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார், மருத்துவத்தால் மட்டுமல்ல, உங்கள் பேரன்பால் இன்னும் இரண்டு நாட்களில் பணிக்கு திரும்புவார். மருத்துவமனையில் இருந்து பணி செய்யும் முதல்வர் என்றால் அது நம் முதல்வர் தான்" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications