சாப்பாடு எப்டிமா இருக்கு? 8 வயது “பாலஸ்தீன” செஸ் வீராங்கனையிடம் பாசமாக விசாரித்த முதல்வர் ஸ்டாலின்
சென்னை: மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வரும் அரங்கிற்கு நேரில் சென்று ஏற்பாடுகளை கவனித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாலஸ்தீன் செஸ் வீராங்கனை ராண்டா செடாரை பாசமாக விசாரித்தார்.
Recommended Video
44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் கடந்த 28 ஆம் தேதி தொடங்கியது. மாமல்லபுரத்தில் ஆகஸ்டு 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 186 நாடுகளை சேர்ந்த 2,000-க்கும் அதிகமான செஸ் வீரர்கள் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர்.
பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கும் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்தும் தமிழ்நாடு அரசின் சிறப்பான ஏற்பாடுகள் பற்றியும் சர்வதேச நாடுகளின் செஸ் வீரர்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

சிறப்பான ஏற்பாடு
இதில் இந்தியாவை பொறுத்தவரை மொத்தம் 6 அணிகள் விளையாடுகின்றன. இதில் 3 ஆண்கள் அணிகளும், 3 பெண்கள் பெண்கள் அணிகளும் விளையாடி வருகின்றன. செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த செய்திகள் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து இருக்கின்றன. வெளிநாட்டு வீரர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பான ஏற்பாடுகள், தமிழ்நாடு குறித்து அவர்கள் பதிவிடும் கருத்துக்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

முதலமைச்சர் ஆய்வு
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்று வரும் அரங்கிற்கு சென்று நேரில் பார்வையிட்டார். தற்போது 3 வது சுற்று போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், போட்டி ஏற்பாட்டாளர்கள், உள்நாட்டு வெளிநாட்டு வீரர்களிடம் உரையாடிய மு.க.ஸ்டாலின் நிறை குறைகள் குறித்து விசாரித்தார்.

வெளிநாட்டு வீரர்களுடன் பேச்சு
குறிப்பாக உணவு, தங்குமிடங்கள் குறித்து அவர் கேட்டறிந்தார். அத்துடன் பாலஸ்தீனை சேர்ந்த இளம் வீராங்கனை ராண்டாவை சந்தித்து பாசமாக கைகுலுக்கி பேசினார். அவரிடம் உணவு எப்படி இருக்கிறது என்று கேட்ட முதலமைச்சர் நன்றாக விளையாடுமாறு வாழ்த்து தெரிவித்தார். இதனை தொடர்ந்து நிறைவு விழாவையும் அங்கேயே நடத்துவது தொடர்பாக அவர் ஆலோசனை மேற்கொண்டார்.

பாலஸ்தீன் வீராங்கனை
செஸ் ஒலிம்பியாட்டில் விளையாடும் மிகவும் இளம் வயது வீராங்கனையான ராண்டா செடாரின் புகைப்படங்கள் நேற்றிலிருந்தே சமூக வலைதளங்களில் வைரலாகின. கடும் போர்கள், இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு மத்தியில் பாலஸ்தீனில் இளம் வயதிலேயே செஸ் போட்டிகளில் அசத்திய ராண்டா தேசிய அளவில் தலைசிறந்த வீராங்கனைகளை வீழ்த்தி இந்த தொடரில் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications