வக்பு சட்ட வழக்கில் வந்த முக்கியமான உத்தரவு.. உச்ச நீதிமன்றத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி
சென்னை: வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றத்திற்கு தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
மத்திய பாஜக அரசு கொண்டு வந்த வக்ஃப் திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது. அதற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் வழங்கியதையடுத்து சட்டமானது. வக்ப் சட்டத்துக்கு எதிராக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. திமுக சார்பில் ஆ.ராசா எம்.பி வழக்கு தொடர்ந்திருந்தார்.

வக்பு சட்டம் - சுப்ரீம் கோர்ட் விசாரணை
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீது இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணை நடைபெற்றது. அப்போது, அடுத்த விசாரணை நடைபெறும் வரை அதிகாரப்பூர்வ பதிவு ஆவணங்கள் இல்லாமல் நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் வக்ஃப் சொத்துக்கள் முதல் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட, அறிவிக்கப்பட்ட சொத்துக்கள் வரை அனைத்து வக்ஃப் சொத்துக்களும் ரத்து செய்யப்படவோ மாட்டாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.
மேலும், இந்த வழக்கு விசாரணை நடைபெறும் காலக்கட்டத்தில் மத்திய வக்ஃப் கவுன்சில் மற்றும் மாநில வக்ஃப் வாரியங்கள் ஆகியவற்றில் முஸ்லிம் அல்லாதோர் நியமிக்கப்பட மாட்டார்கள் என மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
இடைக்கால தடை
மத்திய அரசு தரப்பின் உத்திரவாதத்தை பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வக்பு சட்டத்தின் படி வக்பு கவுன்சிலில் எந்த உறுப்பினர் நியமனமும் இருக்கக் கூடாது. மேலும், ஏற்கனவே வக்பு என பதிவு செய்யப்பட்ட சொத்துக்களின் மீது எந்த புதிய நடவடிக்கையும் எடுக்கக் கூடாது" என உத்தரவிட்டார்.
மேலும் வக்பு சட்ட திருத்தம் விவகாரத்தில் ஒரு வாரத்தில் மத்திய அரசு எழுத்துப் பூர்வ விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் அதன் மீது அடுத்த ஐந்து நாட்களுக்குள் எதிர்மனுதாரர்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் அதையும் பதிவு செய்யலாம் எனவும் தெரிவித்தனர்.
முக்கிய உத்தரவு
மேலும் நூற்றுக்கணக்கான மனுக்கள் தற்போது தாக்கல் செய்யப்பட்டு இருப்பதால் அவை அனைத்தையும் விசாரிக்க முடியாது என்றும் ஏதாவது ஐந்து வழக்கை மட்டுமே விசாரணைக்கு உகந்ததாக எடுத்துக்கொண்டு மற்ற வழக்குகள் அனைத்தையும் இடைக்கால நிவாரணம் கோரிய மனுக்களாக கணக்கில் எடுத்துக்கொண்டு முடித்து வைப்போம் எனவும், எந்த ஐந்து மனுக்களை விசாரிக்க வேண்டும் என்பதை மனுதாரர்களை கலந்தாலோசித்து முடிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தனர். மேலும், வழக்கின் விசாரணையை மே 5 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
முதல்வர் ஸ்டாலின் நன்றி
இந்நிலையில், வக்ஃப் சட்டத்திற்கு இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றத்திற்கு நன்றி.
இஸ்லாமிய சமூகத்தை குறிவைத்து, இந்த தீங்கிழைக்கும் திருத்தச் சட்டம் ஒன்றிய அரசால் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் பல பிற்போக்குத்தனமான விதிளை மறு ஆய்வு செய்து நீதித்துறை இடைக்கால தடை விதித்ததில் மகிழ்ச்சி. இந்த இடைக்கால தடை மூலம் வக்ஃப் உடைமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. எங்கள் சிறுபான்மை சகோதரர்களின் அரசியலமைப்பு உரிமையை பாதுகாக்க எந்த வாய்ப்பையும் நழுவ விடமாட்டோம்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications