4 சீனியர் வக்கீல்களுக்கு ‘விருந்து’ கொடுக்கும் முதல்வர் ஸ்டாலின்.. சென்னையில் ஸ்பெஷல் ஏற்பாடு!
சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு சார்பாக சுப்ரீம் கோர்ட்டில் வாதாடி தீர்ப்பை பெற்றுத் தந்த 4 வழக்கறிஞர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி தேநீர் விருந்து அளிக்க உள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவிக்கும், ஆளும் திமுக அரசுக்கும் பல்வேறு விவகாரத்தில் மோதல் போக்கு நிலவி வருகிறது. தமிழ்நாடு சட்டப் பேரவையில் இரண்டு முறை தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை கிடப்பில் போட்டு வைத்திருந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
இந்த வழக்கின் மீது ஏற்கனவே உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விரிவான விசாரணைகள் நடைபெற்று வந்தன. தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையில் உச்ச நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினர்.
ஆளுநருக்கு எதிராக தீர்ப்பு
அப்போது, "ஆளுநரிடம் செல்லும் மசோதாக்களுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றே பல்வேறு தீர்ப்புகள் கூறுகின்றன. ஆளுநருக்கு வீட்டோ அதிகாரம் இல்லை. அரசியலமைப்பு சாசனம் 200-ஆவது பிரிவின் படி ஆளுநர் செயல்பட வேண்டும். மசோதாக்கள் அனுப்பி வைக்கப்படும் போது ஆளுநருக்கு முன் உள்ள வாய்ப்புகளை பயன்படுத்தலாம். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்த முடியாது. இரண்டாவது முறையாக அனுப்பி வைக்கப்படும் மசோதா மாறுபட்டிருந்தால் மட்டுமே ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைக்க முடியும். 10 மசோதாக்களை நிறுத்தி வைத்தது சட்டவிரோதம்" என்று தீர்ப்பு அளித்தனர்.
குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்த 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்கிறோம் என உச்சநீதிமன்றத்திற்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கும் சட்டப்பிரிவு 142ன் படி உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியது. "எங்களுக்கு இதை விட்டால் வேறு வழி தெரியவில்லை" என குறிப்பிட்டு மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் உடனடியாக ஒப்புதல் வழங்கியது.
நாடு முழுவதும் கவனம் பெற்ற தீர்ப்பு
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மூலம் பல்கலைக்கழகங்களின் வேந்தரானார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டத் திருத்த (2வது) மசோதா உட்பட 10 மசோதாக்களுக்கு உச்சிநீதிமன்றம் ஒப்புதல் அளித்திருப்பதால் ஆளுநருக்கு பதிலாக மாநில முதல்வர் மு.க.ஸ்டாலின் இனி பல்கலைக்கழகங்களின் வேந்தராக செயல்படுவார்.
உச்ச நீதிமன்றம் அளித்த இந்தத் தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் கவனம் பெற்றது. தமிழக அரசு சார்பில் இந்த வழக்கைத் தொடுத்து, ஆளுநரின் அதிகாரங்களை வரையறுத்த முயற்சிக்காக தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.
4 சீனியர் வழக்கறிஞர்கள்
தமிழக அரசு சார்பில் இந்த வழக்கில் 4 சீனியர் வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதிட்டனர். அவர்கள் எடுத்து வைத்த சிறப்பான வாதங்கள், சட்ட நுணுக்கங்களின் அடிப்படையிலேயே இந்த வழக்கில் தமிழக அரசு வெற்றி பெற்றதாக கருதப்படுகிறது. தீர்ப்பு வந்த நாளிலேயே முதல்வர் ஸ்டாலினுக்கும், வழக்கறிஞர் பி.வில்சனுக்கும் திமுகவினர் வாழ்த்து தெரிவித்து கொண்டாடினர்.
டீ பார்ட்டி அளிக்கும் ஸ்டாலின்
இந்நிலையில், ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பாக வாதிட்டு வெற்றி பெற்றதற்கு வழக்கறிஞர்கள் முகுல் ரோஹத்கி, அபிஷேக் சிங்வி, ராக்கேஷ் திவேதி, பி.வில்சன் ஆகிய 4 பேருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேநீர் விருந்து ஏற்பாடு செய்துள்ளார். வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில், இந்த தேநீர் விருந்து நிகழ்ச்சி நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications