நேரில் சென்று பார்த்த முதல்வர் ஸ்டாலின்.. வணக்கம் சொன்னதும் புரிந்து பதில் வணக்கம் சொன்ன நல்லகண்ணு
சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நலன் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று கேட்டறிந்தார். முதல்வர் ஸ்டாலின் வணக்கம் சொன்னதும் புரிந்துகொண்டு பதிலுக்கு வணக்கம் கூறியுள்ளார் நல்லகண்ணு.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான நல்லகண்ணுவுக்கு 100 வயதைக் கடந்து விட்டது. கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி அவரது வீட்டில் கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டு, தலையில் தையல் போடப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைகள் வழங்கப்பட்டது.

கடந்த 24 ஆம் தேதி அன்று மாலை அவர் உணவருந்தும்போது உணவுக்குழாயில் புரை ஏறியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, இரவு 10.30 மணிக்கு மேல் சிகிச்சை தேவைப்பட்ட நேரத்தில், உடனடியாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயது மூப்பின் காரணமாக அவரது உடலில் ஏற்பட்டுள்ள மற்ற சில பிரச்சனைகளுக்கும் சிகிச்சைகள் அளிக்க நரம்பியல் நிபுணர், நுரையீரல் நிபுணர், இருதய நிபுணர், தீவிர சிகிச்சைப் பிரிவு றிபுணர் ஆகியோர் அடங்கிய சிறப்பு மருத்துவர் குழு ஏற்படுத்தப்பட்டு, அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இன்று சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடல்நலன் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று கேட்டறிந்தார். மருத்துவர்களிடமும் அவரது உடல்நலன் குறித்து விசாரித்து உயர் சிறப்பு சிகிச்சைகள் வழங்குமாறு அறிவுறுத்தினார்.
முதல்வர் ஸ்டாலின் நல்லகண்ணுவை நேரில் பார்த்து விசாரித்தது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், "நல்லகண்ணு உடல்நலன் குறித்து முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து விசாரித்துக் கொண்டிருந்தார். அமைச்சர் மா.சுப்பிரமணியனிடமும், மருத்துவமனை டீனிடமும், என்னிடமும் தொடர்ந்து விசாரித்துக் கொண்டிருந்தார். இன்று நேரடியாக வந்து பார்த்துவிட்டுச் செல்லவேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வந்திருந்தார்.
நல்லகண்ணுவைப் பார்த்து முதலமைச்சர் ஸ்டாலின் வணக்கம் தெரிவித்தபோது, அவரும் அதை புரிந்து பதிலுக்கு வணக்கம் சொன்னார். மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. நேற்று இருந்ததை விட நல்லகண்ணுவின் உடல் நிலையில் இன்று நல்ல முன்னேற்றம் உள்ளது. இயல்பாக சுவாசிக்கிறார். படிப்படியாக நலம் பெற்று நல்ல உடல்நலத்துடன் மீண்டு வருவார் என எதிர்பார்க்கிறோம்." எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நேற்று, முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், "உடல்நலிவுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தகைசால் தமிழர் தோழர் நல்லகண்ணு அய்யா உடல்நலன் குறித்து தோழர் முத்தரசன், அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோரிடம் தொடர்ந்து நலன் விசாரித்து வருகிறேன். நல்லகண்ணு அய்யா விரைந்து நலம் பெற விழைகிறேன்." எனக் குறிப்பிட்டிருந்தார்.












Click it and Unblock the Notifications