சாதி மறுப்பு திருமண குற்றங்கள்.. விரைந்து நடத்திட சிறப்பு வழக்கறிஞர்கள்! முதலமைச்சர் அறிவிப்பு
சென்னை: சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்த காரணத்தால் நெல்லையில் சிபிஎம் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், சாதி மறுப்புத் திருமணம் தொடர்பான குற்ற வழக்குகளை விரைந்து நடத்திட அரசு தரப்பில் சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங் கோட்டை, நம்பிக்கை நகரைச் சேர்ந்த மதன் குமார் (வயது 28) என்பவரும், பாளையங்கோட்டை பெருமாள்புரத்தைச் சேர்ந்த உதய தாட்சாயினி (வயது 23) என்பவரும் கடந்த 6 வருடமாக காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற நிலையில், ஜூன் 13ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். அடுத்த நாள் (ஜூன் 14) மேலப்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத் திருமணம் செய்ய முன்பதிவு செய்திருந்தனர்.

இதனை பெண் வீட்டார் தரப்பில் தடுத்த நிலையில், பாதுகாப்பு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை அணுகியுள்ளனர். காவல்துறை அனுமதியோடு திருமணத்தை பதிவு செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முயற்சி மேற்கொண்ட நிலையில் பந்தல்ராஜா மற்றும் ஜெயக்குமார் உள்ளிட்ட 25 பேர் கொண்ட கும்பல் திருநெல்வேலி, வினோபா நகரில் உள்ள கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்திற்குள் நுழைந்து மேஜை, நாற்காலி, கண்ணாடி, கதவு, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.
தாக்குதலைத் தடுக்க முயன்ற கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்கள் 2 பேர் உட்பட மூன்று பேரை தாக்கியுள்ளனர். காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் சிலரைப் பிடித்துள்ளனர். இந்த சம்பவம் திருநெல்வேலி மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சாதி மறுப்பு திருமணத்தை செய்து வைத்தால் தாக்குவதா? என்று பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பந்தல் ராஜா உட்பட 14 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இருப்பினும் பந்தல் ராஜா போல ஏராளமான குண்டர்கள் இருக்கிறார்கள் என்றும், சாதி மறுப்பு திருமணம் செய்வோரை பாதுகாக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சியனர், முற்போக்கு அமைப்பினர் வலியுறுத்தியிருந்தனர்.
இதனையடுத்து இன்று சட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட் அலுவலகம் தாக்குதல் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தற்போது நடைமுறையில் உள்ள சட்டப்பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. இதன்படி விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.
மேலும், "சாதி மறுப்புத் திருமணம் தொடர்பான அனைத்து வகை குற்றங்களுக்கும் வழக்குகளை விரைந்து நடத்திட அரசு தரப்பில் சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவார்கள்" என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications