இனி இது நடக்கவே கூடாது.! கண்கள் சிவந்த விஜய்.. தவெக நிர்வாகிகளுக்கு கொடுத்த அதிரடி வார்னிங்
சென்னை: தமிழ்நாடு முதல்வராக விஜய் பதவியேற்று இருக்கும் நிலையில், தனது கட்சி நிர்வாகிகளுக்கு முக்கியமான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது தவெகவினர் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களிலோ அல்லது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலோ எங்கும் பேனர்கள் வைக்கக் கூடாது என்றும் மீறினால் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
தமிழக அரசியலில் பல ஆண்டுகளாக இருக்கும் சிக்கலான கலாச்சாரம் 'பேனர் கலாச்சாரம்'தான். தலைவர்களின் பிறந்தநாள் என்றாலும் சரி, வீட்டு விசேஷங்கள் என்றாலும் சரி, போக்குவரத்து சிக்னலே தெரியாத அளவுக்குப் பேனர்களை வைத்துத் திணறடிப்பது இங்கே வாடிக்கை. இதனால் கடந்த காலங்களில் பல அப்பாவி உயிர்களும் கூட போய் இருக்கிறது.

எச்சரிக்கை
இதற்கிடையே இப்போது, தமிழகத்தின் புதிய முதலமைச்சராக வந்துள்ள விஜய், இந்தக் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். தவெக தலைமை வெளியிட்டுள்ள அந்தச் செய்திக்குறிப்பில் தங்கள் தொண்டர்களுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
புஸ்ஸி ஆனந்த்
இது தொடர்பாக தவெக தலைமை நிலையச் செயலகம் சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கழகத் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம். தமிழ்நாட்டு மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தொடங்கப்பட்டது தான் தமிழக வெற்றிக் கழகம். தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த நம்பிக்கையைப் பெற்ற, தமிழ்ச் சொந்தங்களின் குடும்பத்தில் ஒருவராக இருக்கக்கூடிய வெற்றித் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மிகப் பெரிய பொறுப்பை நமக்குக் கொடுத்திருக்கிறார் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். அதை நோக்கியே நாம் பயணிக்க வேண்டும்.
பேனர் வைக்கக் கூடாது
எனவே கழகத் தோழர்கள் யாரும் பிறந்தநாள் விழா மற்றும் குடும்ப விழாக்கள் தொடர்பாகப் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளிலோ, மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களிலோ அல்லது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலோ எங்கும் பேனர்கள், பதாகைகள் உள்ளிட்டவற்றைக் கண்டிப்பாக வைக்கக் கூடாது. பொதுமக்களுக்கு இடையூறாக எவ்விதக் கொண்டாட்டங்களிலும் யாரும் கண்டிப்பாக ஈடுபடக் கூடாது.
பேனர்கள், கொண்டாட்டங்கள் உள்ளிட்ட எவற்றின் வாயிலாகவும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் யாரேனும் நடந்துகொண்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைக் கழகத் தலைவர் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.
நீதிமன்றம்
கடந்த காலங்களில் பிரதானக் கட்சிகளின் பேனர்களால் பல விபத்துக்கள் நடந்துள்ளன. நீதிமன்றமே பலமுறை எச்சரித்தும் கட்டுப்படாத இந்தக் கலாச்சாரத்தை, விஜய் தனது கட்சியின் தொடக்கத்திலேயே கிள்ளி எறிய நினைப்பது ஒரு நல்ல மாற்றத்தின் அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது. அதேநேரம் இதை அவரது கட்சித் தொண்டர்களும் ரசிகர்களும் எந்தளவுக்குப் பாலோ செய்கிறார்கள் என்பதை நாம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
விஜய்
முன்னதாக விஜய் தனது பதவியேற்பு விழாவிலேயே தொண்டர்களுக்கு எச்சரிக்கை கொடுத்திருந்தார். அதாவது, "ஜெயிச்சிட்டோம்னு ஆட்டம் ஆடி பாக்கலாம்னு அப்படி நினைக்கக்கூடாது.. அப்படி எதாவது உங்க மனசுல இருந்தால உடனே அழிச்சுடுங்க.. இங்கு அங்கு ஒரு பவர் சென்டர்.. இங்கு ஒரு பவர் சென்டர் என இல்லை.. ஒரே பவர் சென்டர் தான். அது நான் தான்" எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications