20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்
சென்னை: நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி இன்று வயது மூப்பு காரணமாக மரணமடைந்தார். தாயாரின் இறுதி சடங்கில் பங்கேற்க நடிகர் அஜித்குமார் இன்று இரவு துபாயில் இருந்து சென்னை திரும்பினார். அஜித்குமார் சென்னை வந்த நிலையில் முதல்வர் விஜய் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று அஜித்குமாரின் தாயார் மோகினியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியதோடு, அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி. இவருக்கு வயது 85. வயது மூப்பு காரணமாக ஏற்படும் உடல் உபாதையால் அவர் பாதிக்கப்பட்டு இருந்தார். மருத்துவமனையில் அவ்வப்போது சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் தான் இன்று காலையில் மோகினி காலமானார். அஜித் குமார் தனது தாயை சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டிலேயே வைத்து பார்த்து கொண்டார்.
இந்நிலையில் தான் அஜித் குமார் கார் ரேஸ்க்காக துபாயில் இருந்த நிலையில் தாயார் மறைந்த செய்தியை கேட்டு சென்னை புறப்பட்டார். இன்று இரவு சுமார் 9 மணியளவில் அஜித் குமார் சென்னை வருகை தந்தார். அதன்பிறகு அவர் காரில் தனது இல்லத்துக்கு சென்றார். அஜித்குமார் வீடு திரும்பியதை அறிந்ததும் முதல்வர் விஜய் தனது வீட்டில் இருந்து காரில் புறப்பட்டார்.
ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித்குமாரின் வீட்டுக்கு விஜய் நேரில் சென்று அவரது தாயாரின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு விஜய் ஆறுதல் கூறினார். சுமார் 20 நிமிடங்கள் வரை அஜித் குமாரின் வீட்டில் இருந்த விஜய் அதன்பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

அஜித்குமாரின் தாயார் மோகினியின் உடலுக்கு நாளை காலை 8.30 மணிக்கு பெசன்ட் நகர் மயானத்தில் இறுதி சடங்கு நடைபெற உள்ள நிலையில் இன்று விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். முன்னதாக முதல்வர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து இருந்தார். அதில், ''அருமை நண்பர் அஜித் குமார் அவர்களின் தாயார் மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் அஜித் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' என பதிவிட்டுள்ளார்.
அஜித்தின் தந்தை பிஎஸ் மணி என்கிற சுப்பிரமணியம் கடந்த கடந்த 2023ம் ஆண்டு மறைந்தார். அவரது மறைவை தொடர்ந்து இன்று தாய் மோகினி காலமாகி உள்ளார். அஜித்தின் தாய் மோகினி மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர். மோகினியின் மறைவுக்கு திரையுலகத்தை சேர்ந்த இயக்குநர்கள், நடிகர், நடிகைகள், அரசியல் கட்சி தலைவர்கள் என்று பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications