இதை கவனிச்சீங்களா? சென்னை மெட்ரொ ரயில் நிலைய பெயர் அறிவிப்பில் ‘மேஜர்’ மாற்றம்.. இனி குழப்பம் இல்லை!
சென்னை: சென்னையில் நாள்தோறும் சுமார் 3 லட்சம் பேர் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்து வரும் நிலையில், முக்கிய ரயில் நிலையங்களுக்கு நீண்ட பெயர் அறிவிப்பு செய்யப்பட்டது பயணிகளிடையே குழப்பங்களை ஏற்படுத்தியது. இந்நிலையில், மெட்ரோ ரயில் நிர்வாகம் முக்கிய மாற்றத்தைச் செய்துள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கோயம்பேடு - ஆலந்தூர் வழித்தடங்களில் 7 மெட்ரோ நிலையங்கள் திறக்கப்பட்டன. 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விமான நிலையம் முதல் சின்னமலை வரையிலான வழித்தடத்திலும், ஆலந்தூர் முதல் பரங்கிமலை வரையிலும் 6 மெட்ரோ நிலையங்கள் திறக்கப்பட்டன.

பின்னர் படிப்படியாக நீட்டிக்கப்பட்டு, தற்போது விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரை, பரங்கிமலை முதல் சென்ட்ரல் வரை என 2 வழித்தடங்களில் 54 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினமும் சராசரியாக 2.60 லட்சம் முதல் 3 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர்.
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அதாவது, 61,800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேலும் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட இருக்கின்றன. 116 கிலோ மீட்டர் தொலைவில் 118 ரயில் நிலையங்களுடன் புதிய சேவை தொடங்குவதற்கான பணிகளை 2028ஆம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக மெட்ரோ நிர்வாகம் பல்வேறு வசதிகளையும் ஏற்படுத்தித் தந்துள்ளது. சைக்கிள், இ-பைக் சேவையும் மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து வழங்கப்படுகின்றன. முக்கிய ரயில் நிலையங்களில் இருந்து சிற்றுந்து சேவையும் இயக்கப்படுகிறது. பார்க்கிங் வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. முக்கிய நாட்களில் கூடுதல் நேரமும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னை சென்ட்ரல் மெட்ரோ, கோயம்பேடு மெட்ரோ, ஆலந்தூர் மெட்ரோ நிலையங்கள் மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் இடமாக உள்ளன. சென்னை சென்ட்ரல் மெட்ரோ நிலையத்திற்கு புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ என்றும், ஆலந்தூர் மெட்ரோ என்பது அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ என்றும், புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ என்பதை புரட்சித்தலைவி டாக்டர் ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ என்றும் கடந்த 2020ஆம் ஆண்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
அதன்படி, இந்த ரயில் நிலையங்களில் ரயில்கள் நிற்கும்போது, நீண்ட பெயர் வாசிக்கப்படும். இது பயணிகளுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வந்தது. உதாரணமாக, ஒரு பயணி, செண்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கி வேறு பிளாட்ஃபார்ம் மாற வேண்டும் என்றால், சென்ட்ரல் ரயில் மெட்ரோ நிலையம் வரும்போது "புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்க வேண்டிய பயணிகள்..." என நீண்ட அறிவிப்பு செய்யப்படும்.

மெட்ரோ ரயில் நிலையங்களில் சில விநாடிகளே ரயில்கள் நிற்கும் சூழலில் ரயில் நிலைய பெயர் அறிவிப்பே நீளமாக வாசிக்கப்படும். ஆலந்தூர், சென்ட்ரல், கோயம்பேடு புறநகர் மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகள் இந்த நீண்ட பெயர் வாசிப்பால் குழப்பங்களுக்கு ஆளாகி வந்தனர். பலர் குழம்பி, தாங்கள் இறங்க வேண்டிய ரயில் நிலையத்தைக் கடந்து சென்று, மீண்டும் திரும்பி வரவேண்டிய நிலையும் ஏற்பட்டது.
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக, ரயில் அறிவிப்பில், இந்த நீண்ட பெயர்கள் பயன்படுத்தப்படுவதில்லை. புரட்சித் தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ தற்போது வெறும் 'சென்ட்ரல் மெட்ரோ' என்றே அறிவிக்கப்படுகிறது. 'ஆலந்துர் மெட்ரோ', புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ என்றும் அறிவிக்கப்பட்டு வருகிறது. நேரடியாக இடத்தின் பெயர் அறிவிக்கப்படுவது பயணிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications