திருச்செந்தூருக்கே அடிக்கப் போகுது யோகம்.. வரப் போகுது வந்தே பாரத்! அமைச்சர் எல்.முருகன் குட் நியூஸ்
தூத்துக்குடி: திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு கூடுதல் ரயில் சேவையும், கோவைக்கு புதிய ரயில் சேவையும் இயக்குவது குறித்து பரிசீலனை நடைபெற்று வருகிறது. அதேபோல், திருச்செந்தூருக்கு வந்தே பாரத் ரயில் சேவையை இயக்குவது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் அம்ரித் பாரத் திட்டப் பணிகளை மத்திய இணை அமைச்சர் எல். முருகன் இன்று நேரில் ஆய்வு செய்தார். பணிகளின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அவர், திட்டங்களை விரைந்து முடிக்க தேவையான ஆலோசனை வழங்கினார்.
ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எல். முருகன், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 12 ஆண்டுகளில் ரயில்வே உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை நாடு முழுவதும் விரிவாக மேம்படுத்தி வருகிறது.

எல் முருகன்
தமிழகத்தில் மட்டும் 77 ரயில் நிலையங்கள் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. சென்னை ரயில் நிலையத்தில் சுமார் 800 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல், திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் 16 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தப் பணிகளில் திருச்செந்தூர் முருகன் கோவிலின் கட்டிடக் கலை, சிற்ப மரபு மற்றும் அந்தப் பகுதி மக்களின் வாழ்வியல் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைப்புகள் இடம்பெற உள்ளது.
ரயில்வே திட்டங்கள்
திருச்சி உள்ளிட்ட பிற முக்கிய ரயில் நிலையங்களிலும் அந்தந்த பகுதியின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருச்செந்தூர் ரயில் நிலையத்திற்கு தினமும் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இதனால், பயணிகளுக்குத் தேவையான கூடுதல் அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
வந்தே பாரத்
மேலும், திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு கூடுதல் ரயில் சேவையும், கோவைக்கு புதிய ரயில் சேவையும் இயக்குவது குறித்து பரிசீலனை நடைபெற்று வருகிறது. அதேபோல், திருச்செந்தூருக்கு வந்தே பாரத் ரயில் சேவையை இயக்குவது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்திற்கு ஒன்பது முக்கிய ரயில்வே திட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை - நாகர்கோவில் இரட்டை ரயில் பாதை மற்றும் மின்மயமாக்கல் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளது. நாடு முழுவதும் ரயில்வே மின்மயமாக்கல் பணிகளும் 100 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது.
ரயில்வே துறை
ரயில்வே துறைக்கான நிதி ஒதுக்கீட்டிலும் தமிழகத்திற்கு கணிசமான உயர்வு ஏற்பட்டுள்ளது. முன்பு ஆண்டுக்கு சுமார் 800 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது ஆண்டுதோறும் 6,000 முதல் 7,000 கோடி ரூபாய் வரை தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனுடன், தேசிய நெடுஞ்சாலைகள், நான்கு வழி, ஆறு வழி மற்றும் எட்டு வழிச் சாலைகள், விமான நிலையங்கள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு திட்டங்களும் வேகமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி விமான நிலையம்
தூத்துக்குடி விமான நிலையத்தில் நீளமான ஓடுபாதை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அங்கு கப்பல் கட்டும் தளமும் உருவாக்கப்பட உள்ளது. மேலும், சென்னை - பெங்களூரு, பெங்களூரு - ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களை இணைக்கும் அதிவேக ரயில் திட்டங்கள் குறித்து ஆய்வுகள் நடைபெற்று வரும் நிலையில், அடுத்த ஆண்டு அகமதாபாத் - மும்பை இடையேயான புல்லட் ரயில் சேவை தொடங்கப்படும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.














Click it and Unblock the Notifications