கிரிக்கெட் ரசிகர்களுக்கு ‘செம’ சர்ப்ரைஸ்.. IND vs AUS போட்டியை காணச் செல்வோருக்கு ‘மெட்ரோ’ இலவச பஸ்!
கிரிக்கெட் ரசிகர்களுக்காக செம அறிவிப்பை வெளியிட்டுள்ளது சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்.
சென்னை : சென்னையில் கிரிக்கெட் ரசிகர்களுக்காக நாளை ஒருநாள் மட்டும் இலவச மினி பஸ் சேவை வழங்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் நாளை இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது.
போட்டியை காண வசதியாக ரசிகர்களுக்கு இலவச மினி பஸ் வசதி வழங்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஒருநாள் கிரிக்கெட் போட்டி
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. முதல் போட்டியில் இந்தியாவும், 2வது போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் வெற்றி பெற்று ஒருநாள் தொடர் சமநிலையில் உள்ளது. கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இலவச மினி பஸ் சேவை
சென்னை சேப்பாக்கம் மைதானம் சீரமைக்கப்பட்டு நீண்ட நாட்களுக்கு பின்னர் முதல் முறையாக சர்வதேச போட்டி நடைபெறவுள்ளதால் இப்போட்டியைக் காண ரசிகர்கள் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்திய நேரப்படி நாளை பகல் 1.30 மணிக்கு தொடங்கி பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது. இந்நிலையில், இந்தப் போட்டியை காண வரும் ரசிகர்களுக்காக சென்னை மெட்ரோ நிர்வாகம் ஒரு ஸ்பெஷல் ஆஃபரை அறிவித்துள்ளது.

கவர்ன்மெண்ட் எஸ்டேட் - சேப்பாக்கம்
மெட்ரோ நிர்வாகம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், நாளை காலை 11 மணி முதல் போட்டி நிறைவடையும் வரை சென்னை அரசினர் தோட்டம் முதல் சேப்பாக்கம் மைதானம் வரை கிரிக்கெட் ரசிகர்களுக்கு இலவச மினி பேருந்து வசதி செய்து கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஹ்மான் கான்செர்ட்
முன்னதாக, சென்னை சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்திற்கு அருகில் நேரு உள்விளையாட்டு அரங்கில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சியையொட்டி சென்னையில் மார்ச் 19ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, சென்னை மெட்ரோ ரயிலின் அனைத்து முனையங்களிலும் 12 மணி வரை ரயில்கள் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications