வேலையில்லாத இளைஞர்கள் கரப்பான் பூச்சிகளை போன்றவர்கள்.. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பேச்சால் சர்ச்சை!
டெல்லி: வேலையில்லாத, தொழிலில் சரியான இடம் கிடைக்காத சில இளைஞர்கள் கரப்பான்பூச்சிகள் போலச் செயல்படுகிறார்கள் என்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சமூக ஊடகங்களில் நீதித்துறையைத் தரக்குறைவாக விமர்சிக்கும் இளம் வழக்கறிஞர்கள் மற்றும் போலியான சமூக ஆர்வலர்கள் குறித்து நீதிபதி இந்த கருத்தை தெரிவித்திருக்கிறார்.

மூத்த வழக்கறிஞர்
டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் சஞ்சய் துபே என்பவர், தனக்கு மூத்த வழக்கறிஞர் அந்தஸ்து வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது, அந்த வழக்கறிஞர் கடந்த காலங்களில் பேஸ்புக்கில் நீதித்துறைக்கு எதிராகப் பதிவிட்ட அவதூறு கருத்துக்களை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். குறிப்பாக நீதிபதி சூர்யகாந்த் மிகக் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தினார்.
வேலையில்லா இளைஞர்கள்
"வேலையில்லாத, தொழிலில் சரியான இடம் கிடைக்காத சில இளைஞர்கள் கரப்பான்பூச்சிகள் போலச் செயல்படுகிறார்கள். அவர்கள் ஊடகம், சமூக ஊடகம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஆர்வலர்கள் அல்லது இதர சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் ஒட்டுண்ணிகளாக மாறி, ஒட்டுமொத்த அமைப்பையும் தாக்கத் தொடங்குகிறார்கள். நீங்களும் அவர்களோடு கைகோர்க்கப் போகிறீர்களா?" என்று மனுதாரரைச் சாடினார்.
சிபிஐ விசாரணை
அதேபோல போலி வழக்கறிஞர்கள் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார். டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் கறுப்பு அங்கி அணிந்து கொண்டு, சமூக ஊடகங்களில் நீதிபதிகளுக்கு எதிராக வசைபாடும் பல வழக்கறிஞர்களின் சட்டம் பயின்ற பட்டங்கள் போலியானவையாக இருக்கலாம் என்று நீதிமன்றம் சந்தேகம் எழுப்பியுள்ளது.
பார் கவுன்சில்
"ஆயிரக்கணக்கான போலி நபர்கள் கறுப்பு அங்கி அணிந்து சுற்றுகிறார்கள். அவர்களின் பட்டங்கள் மீது எங்களுக்குப் பலத்த சந்தேகம் உள்ளது. இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நேரிடும்" என்று நீதிபதி சூர்யகாந்த் எச்சரித்தார். வழக்கறிஞர்களின் ஓட்டுகள் தேவைப்படுவதால் இந்திய பார் கவுன்சில் இத்தகைய போலி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது என்றும் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.
வழக்கு வாபஸ்
நீதிபதி ஜாய்மால்யா பாக்சி மனுதாரரைப் பார்த்து, "மூத்த வழக்கறிஞர் அந்தஸ்து என்பது நீதிமன்றங்களாகப் பார்த்து உங்களுக்கு வழங்கும் கௌரவம். அதை நீங்களாகத் தேடி ஓடக் கூடாது. அது உங்கள் தகுதிக்கு அழகல்ல" என்று அறிவுறுத்தினார்.
மேலும் கோபமடைந்த தலைமை நீதிபதி, "உயர் நீதிமன்றமே உங்களுக்கு அந்த அந்தஸ்தை வழங்கினாலும், நாங்கள் அதை ரத்து செய்வோம்" என்று கூறினார். நிலைமையைப் புரிந்துகொண்ட வழக்கறிஞர் சஞ்சய் துபே, தனது மனுவைத் திரும்பப் பெற்றுக் கொள்ள அனுமதி கோரினார், நீதிமன்றமும் அதற்கு அனுமதியளித்தது.












Click it and Unblock the Notifications