சென்னை ஓஎம்ஆரில் 13.39 ஏக்கர் ஆபீஸ்.. 1000 கோடி மதிப்பு.. பிரபல நிறுவனத்திற்கு விற்கும் காக்னிசண்ட்
சென்னை: உலகின் பிரபலமான ஐடி நிறுவனங்களில் ஒன்றான காக்னிசண்ட் நிறுவனம் நாடு முழுவதும் அதன் சில சொத்துக்களை பணமாக்க திட்டமிட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள 13.39 ஏக்கர் பரப்பளவிலான தனது ஐடி அலுவலகத்தை விற்பனை செய்வதற்கு காக்னிசண்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. இதன் இன்றைய சந்தை மதிப்பு 1000 கோடி ரூபாய் ஆகும்.
இந்தியாவில் அதிக ஊழியர்களைக் கொண்ட அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஐடி நிறுவனமான காக்னிசண்ட், 2024 ஆம் ஆண்டில் அதன் மொத்த அலுவலக இடத்தை சுமார் 10 சதவீதம் குறைத்திருக்கிறது.இதன் அலுவலகம் சென்னையிலும் செயல்படுகிறது. இந்த நிறுவனம் சென்னையில் துரைபாக்கம் பிரைம் பெசிலிட்டி மையத்தை விற்க முடிவு செய்துள்ளது. 13.39 ஏக்கர் பரப்பளவிலான அந்த இடத்தை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஆறு மாதங்களில் ஹாடோஸ் சாலையில் உள்ள ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு நிறுவனத்தின் சொத்து விற்பனைக்கு, சென்னையில் விற்பனைக்கு வைக்கப்படும் இரண்டாவது சொத்து இதுவாகும், இந்த சொத்துக்கள் ஒவ்வொன்றும் சுமார் ₹1,000 கோடி மதிப்புள்ளவை என்று தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சொத்தை "வாங்க விரும்பும்" நபர்களின் சார்பாக வெள்ளிக்கிழமை செய்தித்தாள்களில் ஒரு பொது அறிவிப்பு வெளியிடப்பட்டது. வாங்குபவர் பெங்களூரைச் சேர்ந்த மிகப்பெரிய ரியல் எஸ்டேட் டெவலப்பராக இருக்கலாம் என்று ரியல் எஸ்டேட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள முக்கியமான இடத்தில் 5.60 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட கட்டிடத்துடன் கூடிய, 13.39 ஏக்கர் நிலம், வணிக மற்றும் குடியிருப்பு நோக்கங்களுக்காக ஏற்றதாக இருக்கும் என்று தொழில்துறை வட்டாரங்கள் கூறுகின்றன
தமிழ்நாட்டில் காக்னிசண்டின் முழுமையாகச் சொந்தமான முதல் வளாகம் என்றால் துரைப்பாக்கம் கட்டிடம் தான். புனேவுக்குப் பிறகு இந்தியாவில் இரண்டாவது வளாகமாக துரைப்பாக்கம் அலுவலகம் இருந்தது. அப்போது இது கிட்டத்தட்ட 50 உரிமையாளர்களைக் கொண்ட ஒரு 'சிக்கலான' சொத்து ஒப்பந்தம் உள்ளதாக கருதப்பட்டது.
எனினும் கடந்த 20 ஆண்டுகளில் சென்னை துரைப்பாக்கத்தில் காக்னிசண்ட் அமைந்துள்ள வளாகத்தில் பல மாற்றங்கள் நடந்துள்ளன. 2007ம் ஆண்டு இந்த அலுவலகம் திறக்கப்பட்டது. அப்போதைய தலைமை நிர்வாக அதிகாரி பிரான்சிஸ்கோ டி'சோசா இதனை திறந்து வைத்தார். காக்னிசண்ட் நிறுவனத்தின் உலகளாவிய துணைத் தலைவர் லட்சுமி நாராயணன் உள்பட பல மூத்த தலைமைக் குழுவும் துரைப்பாக்கத்தில் தான் செயல்பட்டது. 2 மில்லியன் சதுர அடிக்கும் அதிகமான இடம் கடந்த சில மாதங்களில் மட்டும் குறைந்துள்ளது.

காக்னிசண்ட் நிறுவனம் 2024ம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி, 22 மில்லியன் சதுர அடிக்கும் அதிகமான சொந்த மற்றும் குத்தகைக்கு விடப்பட்ட இடங்களை கொண்டிருந்தது. டிசம்பர் 2023 நிலவரப்படி 24 மில்லியன் சதுர அடி இடங்களை கைவசம் வைத்திருந்தது. அதேபோல் , டிசம்பர் 2022 நிலவரப்படி 28 மில்லியன் சதுர நிலத்தை கைவசம் வைத்திருந்தது. ஒவ்வொரு ஆண்டும் எண்ணிக்கை படிப்படியாக குறைந்துள்ளது.
டிசம்பர் 2024 நிலவரப்படி, காக்னிசண்ட் சென்னையில் 8 மில்லியன் சதுர அடி, ஹைதராபாத்தில் 3 மில்லியன் சதுர அடி மற்றும் புனே, பெங்களூரு மற்றும் கொல்கத்தாவில் தலா 2 மில்லியன் அலுவலக இடத்தை சொந்தமாகவோ அல்லது குத்தகைக்கோ எடுத்து வைத்திருந்தது. மீதமுள்ள இடங்கள் அமெரிக்கா, பிலிப்பைன்ஸ், கனடா, மெக்சிகோ மற்றும் ஐரோப்பாவில் இருக்கிறது.


Click it and Unblock the Notifications
