சென்னைக்கு நேசக்கரம் நீட்டிய கோவை மக்கள்! டன் கணக்கில் பிரட், பால் பவுடர், காய்கறிகள் அனுப்பி வைப்பு
சென்னை: மிக் ஜாம் புயலின் கோரத்தாண்டவத்தால் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக சென்னை மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் சூழலில், கோவை மக்கள் நேசக்கரம் நீட்டி உணவுப்பொருட்களை தன்னார்வமாக சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சென்னையில் கடந்த திங்கள்கிழமை முழுவதும் பெய்த பெருமழையால் ஊரே வெள்ளக்காடானது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டனர். மழை ஓய்ந்து 3 நாட்கள் ஆன பிறகும் சென்னையின் முக்கியப் பகுதிகளில் வெள்ளம் வடிந்தபாடில்லை. மாநகராட்சி தரப்பில் மோட்டார் பம்பு செட் வைத்து வெளியேற்றப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சென்னை மக்களுக்கு பலரும் தன்னார்வமாக நிவாரண உதவிகள் செய்து வருகின்றனர். அந்த வகையில் கோவையை சேர்ந்த என்.ஜி.ஓ. அமைப்புகளும், பொதுமக்களும் நேற்று முதல் சென்னை மக்களுக்கு பல்வேறு நிவாரணப் பொருட்களை லாரிகளில் அனுப்பி வருகின்றனர். ரெடி டூ ஈட் என்று சொல்லப்படும் பிரட் பாக்கெட்கள், பால் பவுடர்கள், உள்ளிட்ட பொருட்களுடன் காய் கறிகள், பெட்ஷீட்கள், மெழுகுவர்த்திகள், என அடிப்படை தேவைகளுக்கு உரிய பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
அதேபோல் 2 டன் வாட்டர் பாட்டில்கள் கோவையிலிருந்து சென்னைக்கு 2 விமானங்களில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சென்னை மக்களின் துயர் துடைக்கும் நிகழ்வில் இண்டிகோ விமான நிறுவனமும் தனது பங்களிப்பை செலுத்தும் வகையில் கட்டணமின்றி கோவையிலிருந்து தண்ணீர் பாட்டில்களையும், பிரட் பாக்கெட்களையும் கொண்டு சென்றிருக்கிறது.
கோவையிலிருந்து வரும் நிவாரணப் பொருட்களை ரிசீவ் செய்து அதனை சென்னையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரித்துக் கொடுப்பதற்காக அரசு சார்பில் தனி டீம் செயல்பட்டு வருகிறது. கோவையை போலவே வேலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து பால் பாக்கெட் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications