"கோவை மக்களுக்கு ரோசம் அதிகம்.. பாஜகவுக்கு பாடம் புகட்டுவார்கள்.." குறுக்கே புகுந்த ஜெயக்குமார்
சென்னை: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்து அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் மன்னிப்பு கேட்டது சர்ச்சையான நிலையில், இதற்கு முன்னாள் அமைச்சரும் அதிமுக மூத்த தலைவருமான ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் தவறாகப் பேசாத போதிலும் அவரை அழைத்து மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்துள்ளதாகச் சாடியுள்ளார்.
நேற்று முன்தினம் கோவையில் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடந்தது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில், பல்வேறு தொழிலதிபர்கள் கலந்து கொண்டு பேசினர். ஜிஎஸ்டி குறித்து தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.

சீனிவாசன்: இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட கோவை அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் ஜிஎஸ்டி குறித்துப் பேசியிருந்தார். ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு ஜிஎஸ்டி இருப்பதால் சிக்கல் நிலவுவதாகத் தெரிவித்தார். இனிப்பிற்கு ஒரு ஜிஎஸ்டி, காரத்திற்கு ஒரு ஜிஎஸ்டி என இருப்பதால் கம்ப்யூட்டரே திணறி விடுவதாகப் பேசியிருந்தார். கொங்கு பாணியில் அவர் பேசிய இந்த பேச்சு இணையத்தில் டிரெண்டானது.
பலரும் இதைப் பகிர்ந்த நிலையில், நேற்றைய தினம் அவர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டிருந்தார்.. இந்த வீடியோ இணையத்தில் வெளியானதே சர்ச்சைக்குக் காரணமாகும். பாஜக மிரட்டியே அவரை மன்னிப்பு கேட்க வைத்தாகப் பலரும் விமர்சித்தனர். ராகுல் காந்தியும் இந்த விவகாரத்தில் பாஜகவை விமர்சித்த நிலையில், தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீடியோ வெளியானது குறித்து மன்னிப்பு கேட்டிருந்தார்.
ஜெயக்குமார்: இந்தச் சம்பவத்திற்குப் பலரும் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்து வரும் நிலையில், முன்னாள் அமைச்சரும் அதிமுக மூத்த தலைவருமான ஜெயக்குமாரும் இந்த விவகாரத்தில் பாஜகவை விமர்சித்துள்ளார்.. அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் தவறாகப் பேசவில்லை என்ற ஜெயக்குமார், அவரை அழைத்து மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்திருப்பது தமிழ்நாட்டு மக்களையே கேவலப்படுத்தும் செயல் என்றும் இனி எந்த காலத்திலும் தமிழ்நாட்டிலும் கோவையிலும் மக்கள் பாஜகவை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்றும் விமர்சித்துள்ளார். இதை அவர் #FascistBJP என்ற ஹேஷ்டேக்குடன் பதிவிட்டுள்ளார்.
கடும் விமர்சனம்: ஜெயக்குமார் தனது ட்விட்டரில், "அதிகார மமதையில் ஆளும் பாசிச பாஜக அரசு! மத்திய நிதி அமைச்சர் பங்குபெற்ற கூட்டத்தில் பேசிய அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் எந்தவிதத்திலும் தவறாக பேசவில்லை. தங்கள் தொழிலில் சந்திக்கும் சில பிரச்சினைகளை கோரிக்கையாக முன் வைத்தார்.
அதற்காக அவரை அழைத்து மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்திருப்பது தமிழ்நாட்டு மக்களையே கேவலப்படுத்தும் செயல்! அதை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டிருப்பது பாசிசத்தின் உச்சம்! கோயம்புத்தூர் மக்கள் பாசத்தில் மட்டுமல்ல ரோசத்திலும் அதிகமானவர்கள் தான்! இனி எந்த காலத்திலும் தமிழ்நாட்டிலும் கோவையிலும் மக்கள் பாஜக-வை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்! இந்த செயலால் இன்னுமொரு நூறாண்டு ஆனாலும் பாஜக இதற்காக வருந்தும்!" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications