சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம். சுந்தரை மணிப்பூர் ஹைகோர்ட் நீதிபதியாக்க கொலீஜியம் பரிந்துரை
சென்னை: மேற்கு வங்கம், பீகார், மணிப்பூர் ஆகிய மூன்று மாநில உயர்நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகளை நியமிக்க கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக உள்ள எம். சுந்தரை மணிப்பூர் தலைமை நீதிபதியாக நியமிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதிக்கு அடுத்தபடியாக 2-வது மூத்த நீதிபதியாக இருப்பவர் எம். சுந்தர். இவரை மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்து, உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

தற்போது மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருப்பவர் செப்டம்பர் 14 ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். அதையடுத்து அந்த பதவிக்கு நீதிபதி எம். சுந்தர் நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது. கொலீஜியத்தின் பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததும், அதிகாரப்பூர்வமாக இது பற்றி அறிவிப்பு வெளியாகும்.
உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியாக உள்ள எம். சுந்தர், 1966-ம் ஆண்டு ஜூலை 19-ந்தேதி சென்னையில் பிறந்தார். சென்னை சட்டக் கல்லூரியில் படித்து, 1989-ம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்தார். சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் அவர் ஆஜராகி வந்தார்.
கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி நிரந்தர நீதிபதியாக பதவி ஏற்றார். இந்த நிலையில்தான் தற்போது மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இவரைத் தவிர தற்போது பீகார் மாநிலம் பாட்னா உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருக்கும் பவன்குமார் பஜன்திரியை அதே நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கவும், கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சவுமியா சென்அயை மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கவும் கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.












Click it and Unblock the Notifications