தலைவர் பதவியே போச்சி.. ஒதுங்கி நின்ற அண்ணாமலை.. பார்த்ததும் அமித்ஷா காட்டிய சைகை.. என்ன அர்த்தம்?
சென்னை: தமிழக பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி ஒருமனதாக தேர்வாவது உறுதியாகி விட்டது. இதன்மூலம் பாஜக தலைவர் பொறுப்பு அண்ணாமலையிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் தலைவர் பதவி கையைவிட்டு போகும் நிலையில் ஒதுங்கி நின்ற அண்ணாமலையை பார்த்து அமித்ஷா கொடுத்த ரியாக்ஷன் தொடர்பான வீடியோ வெளியாகி வேகமாக பரவி வருகிறது. அமித்ஷாவின் இந்த சிக்னல் கிடைத்ததும் சோகமாக நின்ற அண்ணாமலை, உற்சாகமானதும் வீடியோவில் பதிவாகி உள்ளது. அப்படி என்ன நடந்தது? அமித்ஷா என்ன சிக்னல் காண்பித்தார்? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
தமிழக பாஜக மாநில தலைவராக அண்ணாமலை செயல்பட்டு வருகிறார். அண்ணாமலைக்கு கட்சி மேலிடத்திடம் நல்ல பெயர் இருந்தது. இதனால் 2026 சட்டசபை தேர்தல் வரை அண்ணாமலை தான் பாஜக மாநில தலைவர் பொறுப்பில் இருப்பார். அவர் தலைமையில் தான் பாஜக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் என்ற தகவல்கள் வெளியாகின.

ஆனால் இப்போது அதில் பெரிய ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது. கடந்த 15 நாளில் நிலைமை மொத்தமாக மாறிவிட்டது. பாஜக மாநில தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட உள்ளார். புதிய மாநில தலைவராக திருநெல்வேலி பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் ஒரு மனதாக தேர்வாகிறார்.
இது இன்று உறுதியாகிவிட்டது. பாஜக மாநில தலைவர் பதவிக்கு விருப்ப மனுவை நயினார் நாகேந்திரன் மட்டுமே இன்று செய்துள்ளார். கட்சி அறிவுரையின்படி அவர் மனு தாக்கல் செய்தார். மற்றவர்கள் யாரும் செய்யவில்லை. இதனால் அண்ணாமலைக்கு பதில் அடுத்த பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வாவது உறுதியாகிவிட்டது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை மாற்ற பாஜகவில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக நேற்று சென்னை வந்தார். அவர் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக்கு பிறகே நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வர உள்ளது. இதற்கிடையே தான் இன்று அமித்ஷா - அண்ணாமலை இடையே ஒரு சுவாரசிய சம்பவம் நடந்தது.
அதாவது சென்னை வந்த அமித்ஷா இன்று முன்னாள் ஆளுநரும், தமிழக பாஜகவின் மாஜி தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் வீட்டுக்கு சென்று அவரது தந்தை குமரி அனந்தன் மறைவுக்கு ஆறுதல் கூறினார். வீட்டில் இருந்த குமரி அனந்தனின் பேனருக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். முன்னதாக தமிழிசை சவுந்தரராஜன் வீட்டுக்கு காரில் அமித்ஷா சென்றார். முன் இருக்கையில் அமித்ஷா இருந்தார். பின் இருக்கையில் அண்ணாமலை அமர்ந்து பயணித்தார்.
சாலி கிராமத்தில் தமிழிசை சவுந்தரராஜன் வீடு வந்தவுடன் கார் நின்றது. அண்ணாமலை, அமித்ஷா ஆகியோர் காரில் இருந்து இறங்கினர். பின் இருக்கையில் இருந்து இறங்கிய அண்ணாமலை அதே இடத்தில் நின்றார். முன் இருக்கையில் இறங்கிய அமித்ஷாவை, தமிழிசை சவுந்தராஜன் வணக்கம் கூறி வீட்டுக்குள் அழைத்து சென்றார். அப்போது அண்ணாமலை தன் அருகே இல்லை என்பதை அமித்ஷா உணர்ந்தார். இதையடுத்து அவர் சிறிது இடைவெளி விட்டு நின்ற அண்ணாமலையை பார்த்து ‛‛பக்கத்தில் வாருங்கள்'' என்பது போல் கையை அசைத்து சைகை காட்டினார். இதையடுத்து அண்ணாமலை வேகமாக அமித்ஷாவின் அருகே சென்றார். அதன்பிறகு அமித்ஷா அருகிலேயே அண்ணாமலை சென்று கொண்டிருந்தார்.
முன்னதாக மாநில தலைவர் அண்ணாமலை மாற்றம் செய்வது தொடர்பான பாஜக மேலிடத்தின் இந்த திடீர் மாற்றத்துக்கு கடந்த மாதம் நடந்த அமித்ஷா - அதிமுக தலைவர்கள் சந்திப்பு தான் காரணம் என்று கூறப்படுகிறது. 2021 சட்டசபை தேர்தல் வரை அதிமுக - பாஜக கூட்டணியாக இருந்தன. அதன்பிறகு கூட்டணி முறிந்தது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக தனித்தனியாக கூட்டணி அமைத்து களமிறங்கின. இதனால் இரு கூட்டணிகளும் தோற்றது. கடந்த மாதம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக தலைவர்கள் டெல்லியில் அமித்ஷாவை சந்தித்தனர்.
இதன்மூலம் மீண்டும் 2026 சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி அமைகிறது என்ற தகவல்கள் வெளியாகின. அதோடு மாநில தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலையை நீக்க கோரிக்க வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அதன்படி தற்போது பாஜக மாநில தலைவர் பொறுப்பு அண்ணாமலையிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது. புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வாக உள்ளார். இதன்மூலம் தமிழகத்தில் மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி அமைவது உறுதியாகி உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications