Exclusive: PF வட்டியை இஷ்டத்துக்கு குறைக்க நீங்கள் யார்? மத்திய அரசு மீது பாயும் டி.ராஜா!
சென்னை: 2021 -2022 -ஆம் ஆண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை 8.5% -ல் இருந்து 8.1% -ஆக குறைத்ததற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியின் வட்டியை இஷ்டத்துக்கு குறைக்க நீங்கள் யார் என மத்திய அரசை அவர் வினவியுள்ளார்.
இ.பி.எஃப். வட்டி குறைப்பு தொடர்பாக சிறப்புப் பேட்டி மூலம் ஒன் இந்தியா தமிழிடம் டி.ராஜா பகிர்ந்து கொண்ட தகவல் வருமாறு;

தொழிலாளர் விரோதம்
''ஊழியர்களின் உரிமைகளையும், தொழிற்சங்க உரிமைகளையும் பறிக்கும் வகையில் தொழிலாளர் விரோத சட்டங்களை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றிக் கொண்டது மோடி அரசு. இதைக் கண்டித்து தான் இப்போது ஆங்காங்கு வேலை நிறுத்தப் போராட்டங்கள் கூட நடந்தப்பட்டு வருகின்றன. தொழிலாளர்களுக்கு எதிரான மோடி அரசின் நடவடிக்கைகளில் முதன்மையானது இது. இரண்டாவது விஷயம் என்னவென்றால் பென்ஷன் விவகாரம்.''

ஓய்வூதிய திட்டம்
''பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு பதில் புதிய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த முனைகிறது ஒன்றிய அரசு. தொழில் நிறுவனங்களின் பங்களிப்போ, அரசின் பங்களிப்போ புதிய ஓய்வூதிய திட்டத்தில் இருக்காது. இதனால் தான் இதனையும் தொழிலாளர்கள் இன்று எதிர்த்து வருகிறார்கள். நாங்களும் புதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து வருகிறோம். இந்த இரண்டு பிரச்சனை போதாது என்று இப்போது இ.பி.எஃப். விவகாரத்திலும் கையை வைத்துள்ளது ஒன்றிய அரசு.''

யார் தந்த அதிகாரம்?
''தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியின் வட்டியை இஷ்டத்துக்கு குறைக்க ஒன்றிய அரசு யார், அவர்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது. சம்பளத்திற்கு வேலை பார்க்கக் கூடிய கோடிக்கணக்கான தொழிலாளர்களை ஒன்றிய அரசு நேரடியாக வஞ்சிக்கும் செயல் இது. தொழிலாளர்கள் மாதம்தோறும் செலுத்தும் தொகை இது, அதற்கு வட்டியை குறைக்க இவர்கள் யார் என்பது தான் எனது கேள்வி. 2021 -2022 -ஆம் ஆண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டியை 8.5% -ல் இருந்து 8.1% -ஆக குறைக்கப்பட்டதற்கு எனது கண்டனத்தை பதிவு செய்து கொள்கிறேன்.''

நியாயம் வேண்டாமா?
''தொழிலாளர் வருங்கால வைப்புத் தொகை வட்டி மீது கைவைத்ததற்கு பிரதமர் மோடி அவமானப்பட வேண்டும். இனியும் இ.பி.எஃப். வட்டியை குறைக்கக் கூடாது என நான் கூறவில்லை, இதுவரை குறைத்ததற்கு என்ன காரணம், ஒரு நியாயம் வேண்டாமா என்று தான் கேட்கிறேன்.'' இவ்வாறு PF வட்டி குறைப்பு தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.












Click it and Unblock the Notifications