கிளம்பாக்கத்தில் திருச்சி பஸ் இல்லை.. விடிய விடிய காத்திருந்த பயணிகள் கொதிப்பு,. நள்ளிரவில் மறியல்
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்ல போதுமான பேருந்துகள் கிடைக்கவில்லை என்று பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். நள்ளிரவில் பயணிகள் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னைக்கு வரும் புலம் பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் கணிசமாக அதிகரித்து வருகிறது. எனவே சென்னை பெருநகரத்தின் மக்கள் தொகை 1 கோடியை கடந்திருக்கிறது. இவர்களில் பெரும்பாலானோர் தென் மாவட்டங்களிலிருந்து வருகின்றனர். அதேபோல விழா நாட்களில், பண்டிகை தினங்களில் இம்மக்கள் பெரிய அளவில் சொந்த ஊரை நோக்கி படையெடுக்கின்றனர்.

ஆனால் இவர்களுக்கான முறையான போக்குவரத்து வசதி செய்து கொடுக்கப்படவில்லை என்று தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. தாம்பரம், திருவான்மியூர் போன்ற புறநகர் பகுதிகளில் தென் மாவட்டங்களுக்கு செல்ல பேருந்துகள் இயக்கப்பட்டாலும், அவை குறைந்த எண்ணிக்கையில்தான் இயக்கப்படுகின்றன. எப்படி இருந்தாலும் கோயம்பேடு வந்தால்தான் பஸ் கிடைக்கும் என்கிற சூழல் இருக்கிறது. அப்படியே கோயம்பேடு வந்து பஸ் புடிச்சாலும் பெருங்களத்தூரை தாண்டுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது.
இந்த பிரச்னையை சமாளிக்கத்தான் வண்டலூரையடுத்த கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையத்தை கட்டுவது என்று கடந்த அதிமுக ஆட்சியில் முடிவெடுக்கப்பட்டது. இதன்படி 88 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி ரூ.400 கோடியில் கடந்த 2019ம் ஆண்டு பேருந்து நிலையம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. இவை முடியும்போது திட்டமிட்டதைவிட கூடுதலாக 25 சதவிகிதம் செலவை இழுத்தன. இருப்பினும் ஒரு வழியாக பேருந்து நிலையம் கட்டப்பட்டு இந்த ஆண்டு பொங்கலை ஒட்டி அது பயன்பாட்டுக்கு வந்தது.
தென்மாவட்டங்களுக்கு செல்லும் எஸ்இடிசி பேருந்துகள் கிளாம்பாக்கத்திலிருந்துதான் இயக்கப்பட்டு வருகிறது. வார இறுதி நாட்கள் என்பதால் அதிக அளவில் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நேற்றிரவு குவிந்திருக்கின்றனர். ஆனால், பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு பேருந்துகள் இயக்கப்படாதது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
திருச்சிக்கு செல்ல பேருந்துகள் கிடைக்கவில்லை என்றும், இரவு 9 மணிக்கு தொடங்கி அதிகாலை 3 மணி வரை சுமார் 5-6 மணி நேரம் வரை பேருந்துக்கு காத்திருப்பதாகவும் பயணிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். வேலைக்காக செல்வோர், ஒரு நாள் லீவில் குடும்பங்களை பார்க்க செல்வோர், சுப காரியத்திற்கு செல்வோர், என அனைத்து தரப்பு பயணிகளும் பேருந்துகள் கிடைக்காததால் ஆத்திரமடைந்து சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டால், ஓட்டுநர்கள் போதிய அளவுக்கு இல்லை என்று சொல்வதாக கூறியுள்ளனர். கடந்த சில நாட்களாகவே போதிய பேருந்துகள் கிடைக்காமல் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருவது பெரும் பிரச்னையாக வெடித்திருக்கிறது. இதற்கு அதிகாரிகள் உரிய தீர்வை காண வேண்டும் என்றும் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications