சூர்யா மன்னிப்பு கேட்டால் ரூ.1 லட்சம் மணியார்டர்.. பாமகவின் புதிய திட்டம்?
ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்களை அவமானப்படுத்தியதாக பாமகவினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில் சூர்யா அதுகுறித்து எந்த ரியாக்ஷனும் காட்டாத நிலையில் அடுத்தக்கட்டமாக மாநிலம் முழுவதும் சூர்யா மீது புகார் அளிக்க பாமக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மாநிலம் முழுவதும் பாமகவினர் புகார் அளிக்க தொடங்கியுள்ளனர். இதனிடையே சூர்யா தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டால் அவருக்கு உடனடியாக ரூ.1 லட்சம் மணியார்டர் அனுப்ப தயார் என பாமக நிர்வாகி ஒருவர் அறிவித்துள்ளார்.

சர்ச்சை கிளப்பிய ஜெய்பீம் திரைப்படம்
சூர்யா தயாரித்து அவரது நடிப்பில் வெளியான ஜெய்பீம் படம் ஓடிடி தளத்தில் வெளியாகி முன்னர் வெளியான படங்களின் சாதனையை முறியடித்துள்ளது. தமிழக முதல்வர் முதல் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் படத்தைப்பார்த்து பாராட்டி வருகின்றனர். படம் எடுக்கப்பட்ட விதம், காட்சி அமைப்பு கதை அனைத்தையும் பாராட்டி வருகின்றனர். அதே நேரம் பாராட்டு அளவுக்கு சர்ச்சையயும் படம் சந்தித்து வருகிறது.

கோபமான பாமக, வழக்கு, மிரட்டல், கடிதம்
படத்தில் வன்னியர் சமூகத்தை இழிவுப்படுத்தும் காட்சி அமைக்கப்பட்டதாக கொந்தளித்த பாமகவினர் சூர்யாவுக்கு எதிராக கடும் விமர்சனத்தை வைத்து வருகின்றனர், சூர்யா மன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அன்புமணி ராமதாஸ் சூர்யாவுக்கு கடிதம் எழுத தமிழ் திரையுலகினர் சூர்யாவுக்கு ஆதரவாக கருத்துச் சொல்ல பெரும் விவாதப்பொருளாக ஜெய்பீம் மாறியுள்ளது.

மாநிலம் முழுவதும் புகார் அளிக்கும் முடிவு
சூர்யா மீது விமர்சனம், வழக்கு என ஒருபக்கம் செயல்படும் பாமக மறுபுறம் தியேட்டர் உரிமையாளர்களை மிரட்டுவது, சூர்யா தங்கள் ஊருக்குள் வரக்கூடாது என மிரட்டுவது என்கிற செயலில் இறங்கியுள்ளது. இதனால் சூர்யா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சூர்யா வீட்டுமுன் 10,000 பேர் திரண்டால் 5 போலீஸாரால் என்ன செய்ய முடியும் என காடுவெட்டி குருவின் மகன் பேட்டி அளித்துள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அடுத்தக்கட்ட நகர்வாக மாநிலம் முழுவதும் காவல் நிலையங்களில், காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் சூர்யா மீது புகார் அளிக்க அசைன் மெண்ட் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மாநிலம் முழுவதும் புகார் அளிக்கும் முடிவு
சூர்யா மீது விமர்சனம், வழக்கு என ஒருபக்கம் செயல்படும் பாமக மறுபுறம் தியேட்டர் உரிமையாளர்களை மிரட்டுவது, சூர்யா தங்கள் ஊருக்குள் வரக்கூடாது என மிரட்டுவது என்கிற செயலில் இறங்கியுள்ளது. இதனால் சூர்யா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சூர்யா வீட்டுமுன் 10,000 பேர் திரண்டால் 5 போலீஸாரால் என்ன செய்ய முடியும் என காடுவெட்டி குருவின் மகன் பேட்டி அளித்துள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அடுத்தக்கட்ட நகர்வாக மாநிலம் முழுவதும் காவல் நிலையங்களில், காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் சூர்யா மீது புகார் அளிக்க அசைன் மெண்ட் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சூர்யா மீது குவியும் புகார்கள்
திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் பிரின்ஸ் தலைமையில் பாமகவினர் புகார் அளித்தனர், புகார் மனுவில், ''சமீபத்தில் வெளியிடப்பட்ட 'ஜெய்பீம்' திரைப்படம் கடந்த 1995-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை பின்னணியாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.இந்தப் படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தை தயாரித்த நடிகர்கள் சூர்யா, ஜோதிகா மற்றும் இயக்குநர் ஞானவேல் ஆகியோர் மீது சாதி பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் படம் எடுத்ததற்காக வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும்'' என கேட்டுள்ளனர்.
இந்த பிரச்சினைக்கு உடனடியாக நடிகர் சூர்யா தீர்வு காணாவிட்டால் இனி அவர் நடித்த படம் திருச்சி மாவட்டத்தில் திரையிட முடியாது என தெரிவித்துள்ளனர்.

சென்னையிலும் புகார்
சென்னை அம்பத்தூர் இணை ஆணையர் அலுவலகத்தில் மாநில துணைப் பொதுச் செயலாளர் கே. என். சேகர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பாமகவினர் நேற்று திரண்டனர். அங்கு காவல் இணை ஆணையர் இல்லாததால் துணை ஆணையர் மகேஷிடம் புகார் மனுவை அளித்தனர்.
புகாருக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய மாநில துணைப் பொதுச் செயலாளர் சேகர், "தமிழகத்தில் அமைதி நிலவவும் கலவரத்தை தடுக்கவும் நடிகர் சூர்யா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் அப்படி கேட்கும் பட்சத்தில் என்னுடைய சார்பாக 1 லட்ச ரூபாய் மணியார்டர் சூர்யாவுக்கு அனுப்புகிறேன்" எனத் தெரிவித்தார். இதே போல் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே சூர்யா, ஜோதிகா, ஞானவேல் மீது புகார் அளிக்கப்படுகிறது.

தியேட்டர் அதிபர்களிடம் பகீரங்க கோரிக்கை வைத்த சேலம் பாமக எம்.எல்.ஏ
சேலம் சட்டப்பேரவை உறுப்பினர் அருள் சேலம் மாவட்ட திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் "ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்களை தவறாக சித்தரித்து உள்ளது. அது இளைஞர்களிடத்தில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே வரும் காலங்களில் சூர்யா மற்றும் அவரை சார்ந்தவர்களது திரைப்படங்களை சேலம் மாவட்ட திரையரங்குகளில் தயவு செய்து வெளியிட வேண்டாம் " என அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

கலக்கத்தில் தியேட்டர் உரிமையாளர்கள்
சட்டமன்ற உறுப்பினர் ஒருவரே பகீரங்கமாக இப்படி கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளது தியேட்டர் அதிபர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேப்போன்று சில மாவட்டங்களில் தியேட்டர் உரிமையாளர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் சூர்யா மீதும் படக்குழுவினர் மீது குவியும் புகாரால் சட்டப்பிரச்சினை
மாநிலம் முழுவதும் சூர்யா மற்றும் படக்குழுவினர் மீது குவியும் புகார்களால் சட்டப்பிரச்சினை ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக புகாரை போலீஸார் பதிவு செய்தால் ஊர் ஊராக அலையும் நிலை சூர்யாவுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. இதேப்போன்ற நிலை முன்னர் விசிக புகாரால் குஷ்புவுக்கு ஏற்பட்டது. பின்னர் அவர் நீதிமன்றத்தை நாடி புகார்களை ஒரே புகாராக மாற்றக்கோரி நிவாரணம் பெற்றார்.












Click it and Unblock the Notifications