விசிக ஆதவ் நிறுவனத்தில் குழப்பம்! வெளியேறிய டீம்.. திமுகவுக்கு எதிராக நுழைந்த புதிய டீம்
சென்னை: திமுகவுக்கு எதிராக தொடர்ந்து ஆதவ் அர்ஜுனா செயல்பட்டுவருவதற்கான காரணம், அவரது நிறுவனத்தில் புதியதாக பணிக்கு அமர்த்தப்பட்டுள்ள ஆலோசனைக் குழு தரும் தவறான யோசனைகள்தான் என்று முன்பு அவரிடம் வேலைப் பார்த்த சில ஊழியர்கள் தெரித்துள்ளனர்.
விசிகவில் இணைந்த சில மாதங்களிலேயே ஊடக கவனத்தை தன்பக்கம் இழுத்திருக்கிறார் ஆதவ் அர்ஜுனா. இவர் பேசும் கருத்துகளை விசிகவில் உள்ள மூத்த தலைவர்களே மறுத்துப் பேசிவருகின்றனர். குறிப்பாக விசிக தொடங்கப்பட்ட காலம் தொட்டு அக்கட்சியின் கருத்தியல் முகமாக இயங்கி வந்த எம்பி ரவிக்குமார், 'முதிர்ச்சியற்ற கருத்துகள்’ என ஆதவ் பேச்சுக்களைக் கூறி இருந்தார்.

அதேபோல், விசிகவில் இணைவதற்கு முன்பு இருந்தே திருமாவளவனின் ஆதரவு குரலாக ஒலித்து வந்த ஆளூர் ஷாநவாஸ், திருமாவின் கருத்துதான் கட்சியின் கருத்து என்றும் ஆதவ் அர்ஜுன் பேச்சுகள் அவரது சொந்த கருத்துகள் என்றும் கூறி வருகிறார்.
குறிப்பாக விசிகவில் எம்.எல்.ஏ. மற்றும் எம்பி எனப் பொறுப்பில் இருப்பவர்கள் திமுகவைப் பற்றிய ஆதவ் அர்ஜுனா விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. திருமாவளவன், 'ஆதவ் அர்ஜுனா பேச்சு அவசரப்பட்டு முன்கூட்டியே சொல்லப்பட்டவை’ என்று ஒரே வரியில் சொல்லிவிட்டுக் கடந்து போய் இருந்தார். இந்தச் சர்ச்சை தொடர்பாக ஆதவ் அர்ஜுனாவிடம் விளக்கம் கேட்கப்பட்டபோது, அவர் வருத்தம் தெரிவித்துவிட்டார் என்று ஒரு தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்திருந்தார்.
அப்படி இருந்தும் ஆதவ் அர்ஜுனா தொடர்ந்து திமுக அரசின் நிலைப்பாட்டை விசிகவின் வேறு தலைவர்களைவிட அதிகம் விமர்சித்து வருகிறார். அவரது எக்ஸ் தளத்தில் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் மற்றும் மெரினா விமானப் படை மரணங்கள் ஆகியவற்றில் திமுக அரசின் நிலைப்பாடு ஏற்கும்படி இல்லை என்றே எழுதி வருகிறார்.
அதேபோல் கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்டுபேசிய ஆதவ், 'ராஜாஜி ஆட்சியில் சமூகநீதி ஏற்படவில்லை என்பதால்தான் திராவிட கட்சிகளை மக்கள் ஆட்சியில் அமர்த்தினார்கள். அப்படி இருந்தும் சாதி சார்ந்த ஒடுக்கு முறைகள் இருக்கவே செய்கின்றன’ என்ற தொனியில் பேசி விமர்சித்திருக்கிறார். இந்த விமர்சனங்கள் பின்பாக ஆதவ் அர்ஜுனாவின் தனிப்பட்ட பகை உணர்வு இருப்பதைப் பற்றி பலரும் சுட்டிக்காட்டிப் பேசிவிட்டனர். அவருக்கு பொதுத் தொகுதியில் எம்பி சீட் கொடுக்காததால்தான் இவ்வாறு நடந்து கொள்கிறார் என சில பத்திரிகையாளர்கள்கூட கருத்து கூறிவருகின்றன.
உண்மையில் ஆதவ் அர்ஜுனாவை சுற்றி என்ன நடக்கின்றன? அவர் ஏன் இப்படி திமுகவுடன் ஒரு மோதல் போக்கைக் கடைப்பிடிக்கிறார்? என்று விசாரித்ததில் சில உண்மைகள் தெரியவந்துள்ளது. முதலில் திமுகவில் தான் ஒரு தேர்தல் வியூக வகுப்பாளராக ஆதவ் இருந்ததாகச் சொல்லும் கருத்தை திமுகவின் முதல் குடும்ப வட்டாரமே மறுக்கிறது. தேர்தல் பேச்சுவார்த்தை தொடர்பான திமுக குழுவில் பலர் இருந்தனர். அதில் ஒருவராக ஆதவ் அர்ஜுனா இருந்தார். அப்போது அவர் ஆதவ் அர்ஜுனா இல்லை. ஆதர் ரெட்டிதான் என்கிறார்கள்.
திமுக முதல் குடும்பத்திற்கு நெருக்கமாக இருந்த ஆதவ், அங்கே அரசியல் பற்றிய களப்பணிகளைக் கற்றுக் கொள்வதற்காகவே சென்று இருந்துள்ளார். மேலும் திமுக, பிரசாந்த் கிஷோரின் ஐபாக் நிறுவனத்துடன் இருந்த போது இவரும் அங்கு செயல்பட்டுள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் தேர்தல் வேலைகள் முடிந்த பிறகு பிரசாந்த் கிஷோர் வெளியேறிவிட்டார். அதன்பின்னர் ஆதவ் கைக்கு திமுக ஐடி விங் வந்துள்ளது. அவரே அதில் சூத்திரதாரியாக முக்கிய பொறுப்பை வகித்துள்ளார்.
அவர் திமுகவின் ஐடி விங்கின் மிகப்பெரிய அணியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோது மற்றொரு பக்கம் கனிமொழி, தங்கம் தென்னரசு போன்ற சில அமைச்சர்களின் சமூக வலைத்தளத்தை நிர்வகித்து வந்துள்ளார். அந்த நட்பு மூலம் ஆதவ், விசிக தலைவர் திருமாவை நெருங்கியுள்ளார். முதற்கட்டமாக அவரது சமூக வலைத்தள பக்கங்களை எந்த செலவுமே இல்லாமல் நிர்வகிக்க ஆரம்பித்துள்ளார்.
திமுக ஐடி விங் பொறுப்பிலிருந்து கொண்டே அவர் இன்னொரு பக்கம் காய் நகர்த்தியதை முதல்வரின் குடும்ப வட்டாரத்தின் கவனத்திற்குச் சென்றுள்ளது. உடனடியாக ஆதவ், இருந்த இடத்திற்கு வேறு நபர் நியமிக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து கருத்து வேறுபாடுகளால் வெளியேறிய, ஆதவ் அப்படியே முழு நேரமாக திருமாவுக்கு வேலை செய்ய தொடங்கி இருக்கிறார். திமுகவில் ஐடி விங்கை தன் பொறுப்பில் வைத்திருந்த காலத்தில் பெரிய அளவுக்கான தொகையை ஆதவ் அங்கே செலவிட்டதாகவும் கூறப்படுகிறது. பணம் கொடுத்து பதவியைப் பெற முயன்றபோதுதான் முதல்வர் குடும்பத்துடன் முரண்பாடு ஆதவ்க்கு ஏற்பட்டுள்ளது என்கிறார்கள்.
அதன்பின்னர் அவர் விசிகவுக்கு வந்த கதையைப் பலரும் அறிவார்கள். ஆதவ் விசிகவுக்காக வேலை செய்து வந்தபோது, அவர் ஐபேக் நிறுவனத்தில் பணியாற்றிவிட்டு வெளியேறிய சிலரை வைத்து நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். ஆனால், Voice Of Commons இருந்த தலைமை பெண் நிர்வாகி ஒருவர் விசிக தலைமையை மையப்படுத்தியே பணிகளைச் செய்துள்ளார். அது ஆதவ்க்கு அவ்வளவு ஏற்புடையதாக இல்லை. அவர் தன்னை மையப்படுத்தி செயல்பாடுகள் இருக்க வேண்டும் என விரும்பியுள்ளார்.
ஆனால், டீம் அதற்குப் பெரிய அளவு ஒத்துழைப்பு தரவில்லை. அந்த நேரத்தில் ஆதவ், வாரப் பத்திரிகை ஒன்றில் வேலை பார்த்தவர்களை வேலைக்கு எடுத்து தனியாக சில வேலைகளைச் செய்ய தொடங்கி உள்ளார். இந்தப் போக்கு பிடிக்காத பெண் நிர்வாகி ஒருவரின் தலைமையின் கிழ் இயங்கி வந்த அணி அப்படியே ஆளும் கட்சி அமைச்சர்கள் சிலருக்கு வேலை செய்ய இடம்மாறிவிட்டது. இப்போது ஊடக அனுபவத்திலிருந்து வந்த அணியினர்தான் ஆதவ் அர்ஜுனாவின் நரேடிவ் அனைத்தையும் செட் செய்து காய் நகர்த்தி வருகிறார்கள் என்கிறார்கள்.
திமுகவை உரசுவதன் மூலம், கவனம் தன் பக்கம் திரும்பும் என்றும் அதன் மூலம் தனது செல்வாக்கை அதிகப்படுத்த முடியும் என்று ஆதவ்க்கு ஒரு யோசனை வழங்கப்பட்டுள்ளது. அதை நடைமுறை செய்து பார்த்ததில் சில சாதகமான முடிவுகள் கிடைத்ததால் ஆதவ் புதிய டீம் உற்சாகத்தில் இருக்கிறது என்கிறார்கள்.
தங்களின் மாஸ்டர் பிளான் ஒர்க் அவுட் ஆகி ஆதவ்க்கு விசிகவுக்குள்ளாகவே ஒரு ஆதரவு அணி கிடைத்துவிட்டது என்றும் நம்பி வருவதாகக் கூறப்படுகிறது. மற்றொரு பக்கம் தேவையே இல்லாமல் இவர் உதயநிதியைப் பகைத்துக் கொண்டுவிட்டார். இனி காலத்திற்கு திமுக இவர் வளர்வதை விரும்பாது. ஆகவே, ஆதவ் எதிர்காலம் திமுக கூட்டணிக்குள் விசிக இருக்கும் வரை பெரிய அளவு நன்மைகளை அடையாது என்றும் சொல்கிறார்கள்.
ஆக, Voice Of Commons நிறுவனத்திற்குள் ஏற்பட அணி மாற்றம்தான் இந்த அக்கப்போருக்கு எல்லாம் காரணம் என்று நாம் விசாரித்த வரைத் தெரியவருகிறது. அதை அறிந்துதான் திருமா இதை மவுனமாகக் கவனித்துக் கொண்டுள்ளார். விரைவில் இதற்கு ஒரு முடிவு திமுக பக்கம் இருந்தே கிடைக்கும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications