சிபிசிஐடி பணியில் சுணக்கம்; முதலமைச்சரை முழுமையாக நம்புகிறோம் - கனியாமூர் பள்ளி மாணவியின் தாய்
சென்னை: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக அவரது தாய் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தார்.
மாணவியின் மரணம் தொடர்பான வழக்கில் யார் குற்றம் செய்திருந்தாலும் அவர்கள் விரைவில் கண்டறியப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் உறுதியளித்ததாக மாணவியின் தாய் கூறியுள்ளார்.
அதேபோல இந்த வழக்கு குறித்து சிபிசிஐடி விசாரணை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் தாய் கோரிக்கை வைத்துள்ளார்.

கலவரம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் தனியார் பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்த மாணவி 12ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த மாதம் 13ம் தேதி இறந்தார். மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். இந்த மரணம் தொடர்பாக போராட்டம் நடத்தப்பட்டது. இது கலவரமாக வெடித்தது. பள்ளிக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் பொருட்களை சூறையாடி வாகனங்களை சேதப்படுத்தினர். இது தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விசாரணை
இதற்கிடையே மாணவியின் தாய் அளித்த புகாரின்பேரில் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் சின்னசேலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜாமீன்
இந்நிலையில் கைதான 5 பேரும் ஜாமீன் கோரிய மனுவை விழுப்புரம் மகளிர். சிறப்பு நீதிமன்றம், கடந்த வாரம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து ஜாமீன் கோரி பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரம் இல்லை என்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்து இருந்தனர்.

குற்றச்சாட்டு
இதனைத் தொடர்ந்து, இவர்கள் 5 பேருக்கும் ஜாமீன் வழங்கியது. தற்போது இதனைத் தொடர்ந்து, மாணவியின் தாயார் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தனர். இந்த சந்திப்பையடுத்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் மாணவியின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். மேலும், சிபிசிஐடி விசாரணையில் சுணக்கம் இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

கோரிக்கை
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், "குற்றவாளிகளை தப்பிக்கவிடாமல் விசாரணையை விரைவாக நடத்தி குறுகிய காலத்தில் நீதி கிடைக்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம். அதேபோல இந்த வழக்கு தொடர்பாக பள்ளி மாணவர்கள் மீது கைது நடவடிக்கை தொடர்ந்துகொண்டிருக்கிறது. இது கைவிடப்பட வேண்டும் என்றும், ஏற்கெனவே கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறோம்.

பேட்டி
சமீபத்தில் ஜாமீன் பெற்றுள்ள பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரின் ஜாமீனை எதிர்த்து தமிழ்நாடு அரசு மூலமாக மேல்முறையீடு செய்ய இருக்கிறோம். எங்கள் கோரிக்கையை கேட்டுக்கொண்ட முதலமைச்சர், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நிச்சயம் மாணவியின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் என்றும் குற்றவாளிகளை நாங்கள் தப்பிக்க விடமாட்டோம் எனவும் உறுதியளித்திருக்கிறார்" என்று தாயார் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். அதேபோல மாணவியின் முதல் மற்றும் இரண்டாம் உடற்பரிசோதனை அறிக்கை மட்டுமே கிடைத்திருப்பதாக கூறியுள்ளார்.

மறைக்கப்பட்ட தகவல்கள்
ஜிப்மர் மருத்துவமனையின் இந்த இரண்டு உடற்கூராய்வு அறிக்கையின் மீதான ஆய்வு அறிக்கை மாணவியின் பெற்றோரிடம் இன்று ஒப்படைக்கப்படும் என சொல்லப்பட்ட நிலையில், அம்மாதிரியான ஆய்வு அறிக்கை ஏதும் எங்கள் கைகளில் கிடைக்கவில்லை என்று தாய் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், "எனது மகளின் உடற்கூராய்வை பொருத்த அளவில், முதல் மற்றும் இரண்டாவது என இரண்டு உடற்கூராய்விலும் சில தகவல்கள் மறைக்கப்பட்டிருந்தன.

பள்ளி நிர்வாகம்
உடற்கூராய்வில் நாங்கள் கேட்ட மருத்துவரை கொடுத்திருந்தால் எங்களுக்கு திருப்திகரமாக இருந்திருக்கும். அதேபோல சிபிசிடியும் இந்த வழக்கில் தாமதமாகதான் பணியாற்றுகிறது. ஆனால் இந்த அமைப்பின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. பள்ளியின் நிர்வாகமும் இதுவரை சிசிடிவி காட்சிகளை எங்களுக்கு காண்பிக்கவில்லை. அவர்கள் மீது எந்த தவறும் இல்லையென்றால் ஏன் அதை அவர்கள் மறைக்க வேண்டும்? தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள பள்ளியின் தாளாளர் உள்ளிட்டவர்களை குற்றவாளி என்று நிரூபிப்பேன்" என்று மாணவியின் தாய் தனது பேட்டியில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications