DMDK: நயினார் நாகேந்திரனுக்கே தெரியாமல் பாஜகவில் இப்படியா நடக்கிறது? எல்.முருகன் மறுக்கலையே!
சென்னை: தமிழகத்தில் 2026 சட்டசபைத் தேர்தலையொட்டி கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், தேமுதிக (தேசிய முற்போக்கு திராவிட கழகம்) கட்சியுடன் பாஜக நடத்தி வரும் பேச்சுவார்த்தை குறித்து எழுந்துள்ள குழப்பம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ்அதிலும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கே தெரியாமல் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான திண்டுக்கல் சீனிவாசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசுகையில், "தேமுதிகவுடன் மத்திய இணையமைச்சர் எல்.முருகனும், பாஜக தேசியத் தலைமையும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

மாநில அளவில் தேமுதிகவின் கோரிக்கைகளை முடிவு செய்ய முடியாத நிலையில், தற்போது தேசிய அளவில் பேச்சுகள் நடைபெற்று வருகின்றன" என்று தெரிவித்தார்.
தேமுதிக
அவர் மேலும் கூறுகையில், தேமுதிக, மத்திய அரசில் அமைச்சர் பதவி அல்லது தேர்தல் கூட்டணியில் கணிசமான சலுகைகள் கோருவதாகவும், இதனால் மாநில அளவிலான பேச்சுவார்த்தை சிக்கலான நிலைக்குச் சென்றதாகவும் விளக்கினார்.
"இந்தப் பேச்சுவார்த்தை நல்லபடியாக முடியும் என்று எதிர்பார்க்கிறேன். அதிமுகவுடன் தேமுதிக பேச்சு நடத்தவில்லை; பாஜகவுடன் தான் தற்போது பேச்சு நடக்கிறது" என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
விவாதம்
இந்தக் கருத்து வெளியானதும் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. ஆனால், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இதற்கு உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளார். "தேமுதிகவுடன் இதுவரை எந்தவிதமான கூட்டணி பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை. அது நடக்கும்போது கண்டிப்பாகத் தெரிவிப்பேன்" என்று அவர் தெளிவாகக் கூறியுள்ளார்.
திண்டுக்கல் சீனிவாசனை நம்பலாமா?
இதனால், திண்டுக்கல் சீனிவாசனின் தகவலை நம்புவதா அல்லது நயினார் நாகேந்திரனின் மறுப்பை ஏற்பதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை பாஜக மாநிலத் தலைவருக்குத் தெரியாமலேயே மத்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும் தேசியத் தலைமை இந்தப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறதா என்ற சந்தேகமும் அரசியல் விமர்சகர்களிடையே எழுந்துள்ளது.
மூத்த அமைச்சராக இருந்த திண்டுக்கல் சீனிவாசன், அதிமுகவின் பொருளாளராகவும் உள்ளார். தேமுதிகவுடன் எல்.முருகன் பேசி வருவதை பொதுவெளியில் சொல்லியிருக்கிறார். அதை எப்படி நம்பாமல் இருக்க முடியும் என்பதுதான் பலரது கேள்வியாக இருக்கிறது. ஆனால் நயினார் மறுத்தாலும் இதுவரை எல்.முருகன் மறுக்கவே இல்லை என்பதும் கவனிக்கத்தக்க விஷயமாகும்.
பிரேமலதா என்ன சொல்கிறார்
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தரப்பில் இதுவரை இது குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகவில்லை. முன்னதாக, தேமுதிக பல தரப்புடனும் (திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட) பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறியிருந்த நிலையில், இந்த முரண்பாடான தகவல்கள் தமிழக அரசியலில் புதிய சிக்கலை உருவாக்கியுள்ளன.
அரசியல் பார்வையாளர்கள் கருத்துப்படி, தேமுதிக தரப்பிலிருந்து தெளிவான விளக்கம் வந்தால் மட்டுமே இந்தக் குழப்பத்திற்கு முடிவு கிடைக்கும். 2026 தேர்தலில் தமிழக அரசியல் கணக்குகளை மாற்றக்கூடிய முக்கியமான திருப்பமாக இது இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
14 சீட்
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, திமுக, அதிமுகவிடம் 14 சீட்டுகளை கேட்டதாக சொல்லப்படுகிறது. அத்துடன் ராஜ்யசபா சீட்டும் கேட்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால்தான் தேமுதிக தனது கூட்டணியை இறுதி செய்யவில்லை என சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications