எடப்பாடிக்கு 2 பக்கம் செக்! பாமக மாஸ்டர் ப்ளான்; தேமுதிக ஒரே கல்லில் 2 மாங்காய்!
சென்னை: பாஜக தலைமையிலான தேர்தல் கூட்டணி வருகின்ற 11 ஆம் தேதி இறுதியாகிவிடும் என்று தகவல் கசிந்துள்ளது.
இந்த 2024 மக்களவைத் தேர்தல் மோடியின் செல்வாக்கை மட்டும் நிரூபிக்கப் போகின்ற தேர்தல் மட்டுமல்ல; இது தமிழ்நாட்டில் மரணப் படுக்கையில் உள்ள பல கட்சிகள் மீண்டும் உயிர்பிழைக்குமா? இல்லையா? என்பதையும் உறுதி செய்யப் போகும் தேர்தலாகவே இருக்கப் போகிறது.

எடப்பாடிக்கு 2 பக்கம் செக்!
அப்படியா? அது என்னப்பா? என்று நீங்கள் கேள்வி எழுப்பினால் நீங்கள் அரசியல் பாடத்தில் முட்டை மார்க் வாங்குபவராகவே இருக்க வாய்ப்பு உண்டு. ஆகவே அப்படியானவர்கள் தொடர்ந்து இதைப் படிக்க வேண்டியது கட்டாயம்.
முதலில் எடப்பாடி பழனிசாமியை எடுத்துக் கொள்வோம். அதிமுக பொதுச் செயலாளராக அவர் சந்திக்க உள்ள முதல் மக்களவைத் தேர்தல் இது. கட்சியைப் பல கட்ட வழக்குகளை எதிர்கொண்டு தன்பக்கம் கொண்டுவந்துவிட்டார்.
இரட்டை இலை என்ற செல்வாக்கு மிக்க சின்னமும் அவர் கைக்குக் கிடைத்துவிட்டது. அதிமுக பெரும் தலைகள் அடிக்கடி சொல்வதைப்போல ஒன்றரைக் கோடி தொண்டர்களின் எதிர்காலமும் இதில்தான் உள்ளது.

அதைவிட ஆளும் கட்சியான திமுக, எடப்பாடி தலைக்கு மீது கத்தியைத் தொங்கவிட்டிருக்கிறது. கோடநாடு போன்ற வழக்குகள் அவருக்கு எதிராக எந்த நேரத்திலும் மாறலாம். அப்படி மாறும் போது சட்டம் தன் கடமையைச் செய்கிறது என்று திமுக சொல்லிவிடும்.
அதைத்தாண்டி எடப்பாடிக்கு ஒரு அரசியல் பாதுகாப்பு வேண்டும் இல்லையா? ஆகவே அவர் இந்தத் தேர்தலில் ஏதாவது ஒரு விசயத்தில் காரியம் சாதித்தாக வேண்டும்.
ஒரு வேளை அவர் தோற்றுவிட்டால், அண்ணாமலை அடிக்கடி சொல்வதைப் போல பாஜகதான் எதிர்க்கட்சி என்று ஆகிவிடும். அதிகாரப்பூர்வமாக அதிமுக இருந்தாலும் களத்தில் நாங்கள்தான் என அண்ணாமலை இன்னும் இறங்கி அதிமுகவை விமர்சிப்பார்.

குறுக்கே கலகம் செய்யும் ஒபிஎஸ்!
அதற்காகவே அவர் அதிகம் முயற்சி செய்து வருகிறார். அதிமுக, பாஜக கூட்டணி இருக்க வேண்டும் எனத் தேசிய தலைவர்கள் விரும்புகிறார்கள். ஆனால், அண்ணாமலை இந்தத் தேர்தலில் அதிமுகவைத் தனிமைப்படுத்தி விட்டால், அக்கட்சி காணாமல் போய்விடும்.
கூட்டணி பலத்துடன் சில இடங்களில் பாஜக 2வது இடத்திற்கு வந்துவிடும். அதை வைத்து கட்சியை 2வது இடத்திற்கு நகர்த்திவிட்டார் அண்ணாமலை எனப் பேச வைத்து ஒரு சாதனை செய்து விடலாம் என அவர் நினைக்கிறார்.
ஆகவே, சில மாதங்களாகத் திட்டமிட்டு அதிமுகவை விமர்சித்து அந்தக் கூட்டணியை உடைத்துவிட்டார். அந்தளவில் இது அண்ணாமலைக்கு முதல் வெற்றி என்கிறார்கள். அடுத்த வெற்றி 2வது இடத்தில் உள்ள அதிமுகவைக் கீழே தள்ளுவது. அதிலும் பாதி கிணற்றை அண்ணாமலை தாண்டிவிட்டார்.

இன்றைய தேதியில் அதிமுகவுடன் பாமக அல்லது தேமுதிக இல்லை. கூடவே டிடிவி தினகரன் ஒபிஎஸ் போன்ற எடப்பாடிக்கு ஆகாதவர்களும் பாஜக பக்கமே உள்ளனர். ஆகவே, இந்தத் தேர்தல் 'நித்திய கண்டம் பூரண ஆயிசு' என்றே எடப்பாடி பழனிசாமி நிலை உள்ளது.
அடுத்த பிரச்சினைக்கு வருவோம்.
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில்தான் நிற்போம் என்று ஒபிஎஸ் தைரியமாகச் சொல்கிறார். அப்படி இல்லை என்றால், இரட்டை இலை சின்னத்தை முடக்குவோம் என்கிறார்.

அவர் இப்போது பாஜக பக்கம் உள்ளார். அந்தச் செல்வாக்கைப் பயன்படுத்தி என்ன செய்வார் என்பது மிகப் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. இறுதி வரை அசைந்து கொடுக்காமல் எடப்பாடி இருந்து விட்டால், பாஜக மீண்டு ஆட்சிக்கு வந்தால் எடப்பாடி பழனிசாமி செல்வாக்கைச் சரிக்க சில வேலைகளைச் செய்யும் பாஜக. அதற்குக் கருவியாக ஒபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன், சசிகலா இருப்பார்கள்.
ஆக, தேர்தலுக்குப் பின்பும் மதில் மீது பூனையாகவே எடப்பாடி வாழ வேண்டி வரும். அதையும் அவர் அதிகாரம் எதுவும் இல்லாமல் சமாளிக்க வேண்டும். ஒரே சமயத்தில் திமுகவையும் பாஜகவையும் எதிரியாக வைத்துக் கொண்டு சமாளிக்கும் அளவுக்கு எடப்பாடி மக்கள் தலைவர் இல்லை. அதை ஜெயலலிதா சமாளிக்கலாம். எடப்பாடியால் முடியாது.
தேமுதிகவின் ஒரே இலக்கு!
நாளை அதிகாரப்பூர்வமாக தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் பொதுச்செயலாளர் பிரேமலதாவுக்குக் கூட்டணி அதிகாரத்தைக் கட்சி நிர்வாகிகள் அளிப்பார்கள். இது ஒரு சம்பிரதாயம் தான்.

ஆனால், இந்தக் கட்சி பாஜக கூட்டணியில் இருப்பதையே விரும்புகிறது. விஜயகாந்த்துக்குப் பத்மஸ்ரீ விருது கொடுத்த போதே அது உறுதியாகிவிட்டது.
மேலும் மோடி மீண்டு பிரதமரானால் மகன் திருமணம் மோடி தலைமையில் நடக்க வேண்டும். அதை ஊரே பார்க்க வேண்டும். அதன் மூலம் கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்பது பிரேமலதாவின் திட்டமாக உள்ளது.
இந்த மக்களவைத் தேர்தலில் சீட்டு கிடைக்கவில்லை என்றாலும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் சீட்டை உறுதியாகக் கேட்டுப் பெற வேண்டும் என்பதே தேமுதிக திட்டம். அதன் மூலம் அண்ணியார் மாநிலங்களவைக்குள் செல்ல வேண்டும். அந்தச் செல்வாக்கைக் கொண்டு அடுத்த சட்டசபைத் தேர்தலைச் சந்திக்க வேண்டும். இதுதான் அக்கட்சியின் எளிமையான திட்டம்.

பாமக போடும் மாஸ்டர் ப்ளான்!
ஆனால், பாமக அப்படி அல்ல. அவர்கள் 12 இடங்களில் போட்டியிட விரும்புகிறார்கள். பாஜக 7 இடங்கள் வரை ஒதுக்கிவிட்டார்கள். வடதமிழ் நாட்டில் அதற்கான தொகுதிகளைக் கூட அண்ணாமலை வட்டமிட்டு வைத்துவிட்டார்.
அன்புமணியின் ஆசையோ 12 ஆக உள்ளது. மேலும் ஒரு ராஜ் சபா சீட்டும் கேட்கிறார்கள். இதற்கு உடன்படவில்லை என்றால், அதிமுக பக்கம் பேசவும் ஒரு குழு வேலை பார்த்து வருகிறது.

திருமாவளவன் திமுக பக்கம் உள்ளதால், பாமக தன் பக்கம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார் எடப்பாடி பழனிசாமி. அதற்கு என்ன விலையையும் அவர் தரத் தயாராக இருக்கிறார்.
ஆனால், பாமகவின் பிளான் மீண்டு பாஜக ஆட்சிக்கு வந்துவிட்டால் ஏதேனும் அமைச்சர் பதவியைக்கூடக் கேட்டுப் பெறலாம். அல்லது ஏதேனும் ஒரு துறைக்குள் ஒரு பொறுப்பைப் பெறலாம் என பாமக திட்டமிடுகிறது.
பாமகவை எப்படியாவது சரி கட்டி தன் பக்கம் இருக்க வைக்க வேண்டும் என்று பாஜகவின் தேசிய தலைமை விரும்புகிறது.

இவை போக ஐஜேகே, புதிய நீதிக்கட்சி ஆகியவை சீட்டே இல்லை என்றாலும் பாஜக பக்கம்தான் இருக்க முடியும். அவர்களின் நிலைமை அப்படித்தான் உள்ளது. ஆனாலும் பாஜக பெரிய மனது வைத்து இந்தக் கட்சிகளுக்கு தலா ஒரு சீட்டை ஏற்கெனவே உறுதி செய்துவிட்டது.
ஆக, எப்படிப் பார்த்தாலும் பாஜகவின் திட்டங்கள் 11 ஆம் தேதி ஒரு முடிவுக்கு வந்துவிடும் என்கிறார்கள். எந்தக் கட்சியின் கூட்டணியிலிருந்தாலும் பாஜக 20 முதல் 25 இடங்களில் போட்டியிட்டே ஆக வேண்டும் என ஒற்றைக் காலில் நிற்கிறாராம் அண்ணாமலை.

மேலும் இந்தத் தேர்தலில் வென்று மோடி பிரதமரானால் அதில் தமிழ்நாட்டின் பங்கும் இருந்தது எனக் காட்டுவதற்காகவே காய்களை வேகவேகமாக நகர்த்தி பலரை நம்ப வைத்து வருகிறாராம்.












Click it and Unblock the Notifications