ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. காங். வேட்பாளராக சஞ்சய் சம்பத்.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு?
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் மறைந்த திருமகன் ஈவெராவின் சகோதரரான சஞ்சய் சம்பத்தை களமிறக்க காங்கிரஸ் கட்சி முடிவு என தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவா் காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா. 46 வயதான இவர், கடந்த ஜனவரி 4ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இதனைத்தொடா்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

பொதுவாக தொகுதி காலி என்று அறிவிக்கப்பட்ட 6 மாதங்களுக்குள் அங்கு இடைத்தேர்தல் நடக்கும். அதேபோல் இடைத்தேர்தல்கள் மற்ற முக்கிய தேர்தல்களுடன் நடத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் பிப். 7 என்றும், வேட்புமனு பரிசீலனை பிப்.8ம் தேதி நடைபெறும் என்றும், பிப்.10ம் தேதி வேட்புமனுவை திரும்பபெற கடைசிநாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பிப்.27ம் தேதி பதிவாகும் வாக்குகள், மார்ச் 2ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக போட்டியிட மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தேர்தல் பணிகள், வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட விவகாரங்களில் காங்கிரஸ் கட்சி மும்முரமாக இருக்கிறது. இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதால், காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட நிர்வாகிகள் மத்தியில் போட்டி ஏற்பட்டுள்ளது.

இதற்காக ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் பலரும் சென்னையில் முகாமிட்டுள்ளனர். இதனிடையே ஈவிகேஎஸ் இளங்கோவன் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரையே வேட்பாளராக அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஈவிகேஎஸ் இளங்கோவனே இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் மறைந்த திருமகன் ஈவெரா-வின் சகோதரரும், ஈவிகேஎஸ் இரண்டாவது மகனுமான சஞ்சய் சம்பத் காங்கிரஸ் கட்சி சார்பாக வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் காங்கிரஸ் தலைமை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications