விளவங்கோடு விஜயதரணி.. ஆசையில்லை பேராசை..! தாமரையால் மொத்தமும் போச்சே இப்போ.. குறுக்கே வந்த ஹசீனா!
சென்னை: நானெல்லாம் எங்கே எப்படி இருக்க வேண்டிய ஆளு? என்ற ரேஞ்சில் தான் இருக்கிறது காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு தாவிய விஜயதரணியின் நிலைமை.. காங்கிரஸ் கட்சியில் எம்எல்ஏவாக இருந்த அவர் அந்தப் பதவியை உதறிவிட்டு பாஜகவில் இணைந்த பின்னர் அவருக்கான முக்கியத்துவம் இல்லை என புலம்பி வருகிறாராம்.. அதை வைத்தே விமர்சித்திருக்கிறார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஹசீனா சையத்..
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஜயதரணி தொடர்ந்து மூன்று முறை கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள விளவங்கோடு சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக இருந்தார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி நிலையில் திடீரென அவர் பாஜகவில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து மூன்று முறை எம்எல்ஏவாக இருந்த அவர் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற போது தனக்கு சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தார்.
விஜயதரணி: ஆனால் செல்வப்பெருந்தகை அந்த இடத்தை பிடித்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியையும் அவர் குறி வைத்து காய்களை நகர்த்தி வந்தார். சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் பதவி செல்வபெருந்தகைக்கு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கேஎஸ் அழகிரி வசம் இருந்த காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியும் செல்வப் பெருந்தகைக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் தமிழக சட்டமன்ற குழு தலைவர் பதவி ராஜேஷ்குமாருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
காங்கிரஸில் ஏமாற்றம்: அதுமட்டுமல்லாமல் நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் தான் போட்டியிட வேண்டும் என எதிர்பார்த்தார் விஜயதரணி. ஆனால் காங்கிரஸ் தலைமை அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சி மீது கடுமையான கோபத்தில் இருந்த விஜயதரணி குறித்து அறிந்து கொண்டனர் பாஜக தலைவர்கள். இதை அடுத்து அவரிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி கட்சியில் இணைய வைத்துள்ளனர். இதற்காக பல நாட்கள் டெல்லியில் முகாமிட்டிருந்த விஜயதரணி ஒரு வழியாக பாஜகவில் இணைந்து இருக்கிறார்.
பொன்.ராதாகிருஷ்ணன்: கன்னியாகுமரி தொகுதியில் தனக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் கன்னியாகுமரி தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு வரும் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அந்த சீட்டு வழங்கப்பட்டது. கட்சியின் சீனியரான பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கன்னியாகுமரியில் தனி செல்வாக்கு இருக்கிறது. கடந்த தேர்தலுக்கு முந்தைய தேர்தலில் தமிழகம் முழுவதும் அதிமுக பெரும் வெற்றி வெற்ற நிலையில் கன்னியாகுமரியில் வெற்றி பெற்றதற்கு காரணம் பொன் ராதாகிருஷ்ணன் என்ற தனிப்பட்ட நபரின் இமேஜ் தான் என தேசிய தலைமை நம்பியதால் அவருக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது.
அதிருப்தி: இந்நிலையில் தற்போதைய தேர்தலிலும் பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டியிட்டுள்ளார். நாடாளுமன்ற எம்பி சீட்டு கிடைக்கும் என காத்திருந்த விஜயதரணிக்கு அதிர்ச்சியே கிடைத்தது. அதை தொடர்ந்து விளவங்கோடு சட்டசபை தேர்தலும் நடைபெற இருப்பதால் எம்எல்ஏ சீட்டு விஜயதரணிக்கு வழங்கப்படலாம் என கூறப்பட்டது. ஆனாலும் அதிலும் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் கடுமையான அதிருப்தியில் இருந்த விஜயதரணி இது தொடர்பாக அமித்ஷாவிடமும் பிரதமர் மோடியிடமும் நேரடியாகவே பேசினார்.
ஏமாற்றமே மிச்சம்: தேர்தல் பிரச்சாரங்களுக்காக அவர்கள் தமிழகம் வந்தபோது அவர்களிடம் தனது குறையை கொட்டி தீர்த்து இருக்கிறார் விஜயதரணி. அது மட்டுமல்லாமல் கன்னியாகுமரி வந்த அமைச்சர் அமித் ஷாவிடம் தனிப்பட்ட முறையில் நீண்ட நேரம் உரையாற்றியதோடு தனக்கு நடந்தது குறித்து பேசியதாக கூறப்படுகிறது. பாஜக மாநில தலைமையால் தான் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவதாகவும் பரபரப்பு புகாரினை அவர் முன்வைத்தார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். இந்நிலையில் விளவங்கோடு எம்எல்ஏ பதவி பறிபோனதோடு எந்தவித பதவியும் கிடைக்காமல் விஜயதரணி இருந்த நிலை ஏற்பட காரணம் அவரது பேராசை தான் என விமர்சித்து இருக்கிறார் ஹசீனா சையத்.
ஹசீனா சையத்: தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட அவருக்கு சென்னை விமான நிலையத்தில் மகளிர் அணி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஹசீனா சையத்,"தமிழ்நாட்டை ஒருபோதும் பாஜக ஒரு பொருட்டாகவே நினைத்ததில்லை.. தமிழகத்தின் முன்னெடுப்புகளுக்கு பிரதமர் மோடி ஆதரவாகவும் இருந்தது இல்லை.. அதனால் இந்த தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.. மேலும் காங்கிரஸ் கட்சியில் விஜயதரணிக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ஆனால் அவர் ஆசைப்படாமல் பேராசைப்பட்டார். அதற்காகவே தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். அதற்கான பலனையும் அவர் அனுபவிக்கிறார்" என விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications