விஜய் இருக்காரு.. யோசிச்சு சொல்லுங்க.. திமுகவிடம் ஹீட்டை கூட்டிய காங்கிரஸ்.. ஸ்டன் ஆன ஸ்டாலின்!
சென்னை: 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையில் திமுக மீது இந்திய தேசிய காங்கிரஸ் அழுத்தம் கொடுக்க தொடங்கி உள்ளது. கூடுதல் இடங்களையும், முதன்முறையாக மாநில அமைச்சரவையில் பங்கு கோரியும் காங்கிரஸ் திமுகவிற்கு பிரஷர் போட தொடங்கி உள்ளது.
தி.மு.க. தனது இடப்பங்கீட்டுப் பேச்சுவார்த்தைக் குழுவை இன்னும் அமைக்கவில்லை. பொங்கலுக்கு பின்பே இந்த குழுவை திமுக அமைக்கும் என்று கூறப்படுகிறது. 2021 தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்டு 18ல் வென்ற காங்கிரஸ், தற்போது 35 முதல் 50 தொகுதிகள் வேண்டும் எனக் கோரி வருகிறது.

திமுகவை நெருக்கும் காங்கிரஸ்
எங்களுக்கு எம்எல்ஏ சீட் மட்டும் கிடைத்தால் போதாது. எங்களுக்கு அமைச்சரவை பதவி தேவை. ஆட்சியில் பங்கு தேவை. நீங்கள் மெஜாரிட்டி ஆட்சி அமைத்தால் அது நடக்காது. அதனால் மைனாரிட்டி இடங்களில்தான் நீங்கள் போட்டியிட வேண்டும் என்று திமுகவை காங்கிரஸ் நெருக்கடி கொடுக்க தொடங்கி உள்ளதாம்.
தற்போது தமிழக அமைச்சரவையில் 35 பேர் திமுகவினர், வேறு கட்சிக்கு இடம் இல்லை. ஆனால் அடுத்த முறை திமுக மைனாரிட்டி இடங்களில் போட்டியிட வேண்டும் அல்லது தனிப்பெரும்பான்மை பெற்றாலும் கூட ஆட்சியில் கூட்டணியினருக்கு இடமளித்த ஆந்திரப் பிரதேச மாதிரியை திமுக இங்கே பின்பற்ற வேண்டும் என்று காங்கிரஸ் பிரஷர் கொடுக்க தொடங்கி உள்ளதாம்.
காங்கிரஸ் தலைவர்கள் சிலர் வெளிப்படையாக நம்மிடத்தில் பேசினர். "சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களையும், அதிகாரத்தில் பங்கையும் கேட்பது எங்கள் உரிமை" என்கின்றனர். அதிகாரப் பங்கீட்டின் ஒரு பகுதியாக ஐந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளையும் காங்கிரஸ் கேட்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாங்கள் கேட்பதை எல்லாம் கொடுக்க.. நாங்கள் கேட்டதை விட அதிகமாக கொடுக்க.. விஜயின் தவெக தயாராக இருக்கிறது. எங்களுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க.. எங்களுக்கு அமைச்சர் பதவிகளை கொடுக்க.. எங்களுக்கு மாநிலங்களவையில் பதவிகளை கொடுக்க தவெக ரெடியாக இருக்கிறது. இனி நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும் என்று திமுகவிற்கு காங்கிரஸ் பிரஷர் போடுகிறதாம்.
விசிக
தி.மு.க.வின் முக்கியக் கூட்டணியால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் (VCK) அதிகாரப் பங்கீட்டுக் கோரிக்கையை வெளிப்படையாக முன்வைத்துள்ளது. நிர்வாகத்தில் கூட்டணிக் கட்சிகள் ஏன் புறக்கணிக்கப்படுகின்றன என்று அதன் தலைவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
ஏற்கனவே கூட்டணியில் காங்கிரஸின் நிலைப்பாடு குறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியிடம் தி.மு.க. விளக்கம் கோரியுள்ளது. கூட்டணிக் கட்சிகளின் வளர்ச்சிக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், ஆட்சி மட்டத்தில் தி.மு.க.வை பலவீனப்படுத்தும் முயற்சிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் கூட்டணிக்கு தரும் ஆதரவை சுட்டிக்காட்டி.. ராகுல் காந்தி ஸ்டாலினை அண்ணன் என்று அழைக்கிறார்.. திமுகவை நம்புகிறார். ஆனால் தமிழக காங்கிரஸ் அப்படி இல்லை. தமிழக காங்கிரஸ் கூட்டணியை உடைக்கலாமா என்று நினைக்கிறது. அது சரியில்லை. ராகுல் இதில் தலையிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று திமுக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
முன்பெல்லாம் காங்கிரசுக்கு திமுக தாண்டி பெரிய ஆப்ஷன் இருக்காது. ஒன்று திமுக, இல்லையென்றால் தனித்தே கூட்டணி உருவாக்க வேண்டும். அதிமுக பாஜகவுடன் இருப்பதால் அங்கே செல்ல முடியாது. ஆனால் இப்போது நிலைமையே வேறு.. இப்போது தமிழக வெற்றிக் கழகம் இருக்கிறது.
காங்கிரஸ் பிரஷர் போடுகிறது
இதனால் காங்கிரஸ் கட்சி திமுகவிற்கு பிரஷர் போடுகிறதோ என்று தோன்றுகிறது. இதற்கு காரணம் இல்லாமல் இல்லை.. காங்கிரஸ் கட்சி கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கிய சில நாட்களிலேயே அடித்து ஆட தொடங்கி உள்ளது. ஒரு பக்கம் ராகுல் காந்திக்கு நெருக்கமான பிரவீன் சக்ரவர்த்தி விஜய்யை சந்திக்கிறார். விஜயிடம் பேசுகிறார். அதேபோல் விஜயை பாராட்டி போஸ்டுகளை செய்கிறார்.
திருச்சி வேலுசாமி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் தவெக உடன் ஒரே மேடையில் கிறிஸ்துமஸ் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள். இப்படி தொடர்ந்து காங்கிரஸ் திமுகவிற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் நெருக்கடி கொடுப்பது திமுகவிற்கு பிரஷரை கூட்டி உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications