மோடியுடன் ராகுலை ஒப்பிட முடியாதாம்! கார்த்தி சிதம்பரத்துக்கு பறந்த நோட்டீஸ்
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒப்பிடும் போது, ராகுல் காந்தி நிகரான தலைவர் இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் எம்பி கார்த்தி சிதம்பரம் கூறியிருந்த நிலையில், இது குறித்து விளக்கம் கேட்டு அவருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கார்த்தி சிதம்பரம் அரசியலில் நுழைந்ததிலிருந்து பல்வேறு சிக்கல்களில் சிக்கியிருக்கிறார். குறிப்பாக கடந்த 2015ம் ஆண்டு சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் ஜி 67 என்ற பெயரில் கூட்டத்தை நடத்திய கார்த்தி, அடுத்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க வாய்ப்பில்லை என்று கூறி சலசலப்பை ஏற்படுத்தினார். தமிழகத்தை பொறுத்த அளவில் காங்கிரஸுக்கான பலம் அவ்வளவு இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும் இதை பொதுவெளியில் கூறியிருந்தது பஞ்சாயத்தை கூட்டியது.

இத்துடன் நிற்காமல் பிரதமர் நரேந்திர மோடி குறித்து உயர்வாக பேசியதும் கட்சி தலைமையை முகம் சுளிக்க வைத்தது. எனவே விளக்கம் கேட்டு அப்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவன் கார்த்தி சிதம்பரத்துக்கு நோட்டீஸ் அனுப்பினார். ஆனாலும் கார்த்தி தனது செயல்கள் மூலம் தொடர் சலசலப்பை ஏற்படுத்தி வந்திருக்கிறார்.
கடந்த 2022ம் ஆண்டு உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா என 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில், ஏற்கெனவே பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சிதான் இருந்தது. எனவே பஞ்சாபை தக்க வைத்துக்கொள்ள முடியும், தவிர கூடுதலாக உத்தரகாண்ட் மற்றும் கோவாவில் வெற்றி பெற முடியும் என்று கட்சி நம்பியிருந்தது. ஆனால், காங்கிரஸ் அனைத்து மாநிலங்களிலும் கடும் தோல்வியடைந்தது. இதனால் ஒட்டுமொத்த கட்சி தலைமையே கடும் அதிருப்தியில் இருந்தது.
இப்படி இருக்கும்போது டிவிட்டரில் (x) ஆக்டிவாக இருக்கும் கார்த்தி சிதம்பரம், 'தலைமை பண்பு' குறித்த புத்தகத்தை பரிந்துரைப்பதாகவும், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் என்ன திரைப்படம் பார்க்கலாம் என்றும் பதிவிட்டிருந்தார். இது அக்கட்சி தலைமை மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கட்சியின் எம்பியே இப்படி செய்யலாமா என்று கேள்வி பலரும் கேள்விகளை எழுப்பினர்.
அதன் தொடர்ச்சியாக மற்றொரு சம்பவமும் அரங்கேறியது. அதாவது, 'மோடி' சமூகத்தை இழிவாக பேசியதாக ராகுல் காந்திக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்திருந்தது. இதனால், அவர் எம்பி பதவி பறிபோகும் அபாயம் எழுந்திருந்தது. இது நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மட்டுமல்லாது, ஜனநாயக இயக்கங்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
ஆனால் அன்றைய தினம், கார்த்தி சிதம்பரம் 'wordly' கேம் குறித்து பதிவிட்டு சர்ச்சைகளை ஏற்படுத்தினார். இதை விட, இந்த சம்பவத்திற்காக அவர் கொடுத்த விளக்கம்தான் பெரும் பஞ்சாயத்தை உருவாக்கியது. அதாவது, “நான் wordly கேமை விளையாடியது பெரிய விவகாரம் ஆகும் என்று யார் நினைத்து இருப்பார். இப்படி நடக்கும் என்று நான் நினைக்கவில்லை. நீங்களும் விளையாடி பாருங்கள். அது பெரிய அளவில் உங்கள் மன அழுத்தத்தை குறைக்கும்” என்று கூறியிருந்தார்.
இதன் தொடர்ச்சியாக தற்போது, செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த கார்த்தி சிதம்பரம், பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியிருக்கிறார். “பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒப்பிடும் போது, ராகுல் காந்தி நிகரான தலைவர் இல்லை” என்று அவர் கூறியுள்ளார். இந்நிலையில் கார்த்தி சிதம்பரத்துக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஒழுங்கு நடவடிக்கை குழு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவர் அளிக்கும் பதிலை கொண்டு அவர் மீது நடவடிக்கை பாயும் என்றும் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications