8 மாநிலங்களில் பூஜ்ஜியம்! ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத காங்கிரஸ்?
சென்னை: நடந்து முடிந்த 18 ஆவது மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மொத்தம் 8 மாநிலங்களில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்ற அதிர்ச்சியான தகவல் அக்கட்சியின் தொண்டர்களை நிம்மதி இழக்கச் செய்துள்ளது.
இந்தியப் பிரதமராக மோடி மீண்டும் வருகின்ற 9 ஆம் தேதி பதவியேற்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கு முன்னதாக அவர் வரும் 8 ஆம் தேதி பதவியேற்க உள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால், அந்தத் திட்டம் மாற்றப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இதற்காக ஆந்திர மாநில முதல்வராகப் பதவியேற்க இருந்த சந்திரபாபு நாடு தனது பதவியேற்பு விழாவை ஒத்துவைத்துள்ளார்.
மோடியின் பதவியேற்பு விழாவில் வேறு சில நாடுகளின் தலைவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்க உள்ளனர். பங்களாதேஷ், இலங்கை, நேபாளம் ஆகிய நாட்டுத் தலைவர்கள் பங்கேற்க உள்ளதாகத் தெரிகிறது. கூடவே என்.டி.ஏ கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
மேலும் பார்வையாளர்களாக 8 ஆயிரம் பேர் பங்கேற்கலாம் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த முறை பாஜகவுக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 240 தொகுதிகளில் தான் வெற்றி பெற்றுள்ளது. என்.டி.ஏ கூட்டணிக்கட்சிகளுடன் சேர்த்தால் மொத்தம் 290 சீட்டுகள் கிடைத்துள்ளன.
பெரும்பான்மைக்கு 272 தொகுதிகள் வேண்டும். ஆனால், இந்த முறை எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆகவே கூட்டணிக் கட்சிகளின் உதவியுடன் கூட்டணி ஆட்சியை அமைக்கிறார் மோடி.
இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 2014 இல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் 59 தொகுதிகளில்தான் வெற்றி பெற்றது. 2019 இல் சற்று இந்த எண்ணிக்கை அதிகரித்து 90 ஆக உயர்ந்திருந்தது.
ஆனால், இந்த 2024 தேர்தலில் காங்கிரஸ் 99 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இது கடந்த 2 தேர்தல்களில் கிடைத்த வெற்றியைவிட அதிகமாகும். 'இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் சேர்ந்து மொத்தம் 234 தொகுதிகளை வென்றுள்ளன.
எனவே வலுவான எதிர்க்கட்சிக்கு ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது. கடந்த காலங்களில் பெரியண்ணன் மனப்பான்மையோடு திட்டங்களை நிறைவேற்றி வந்த பாஜக, இந்த முறை அப்படி தனது இஷ்டப்படி நடந்து கொள்ள முடியாது. அதற்காகக் கடிவாளத்தை இந்த 234 என்ற பெரும்பான்மை கொடுத்துள்ளது.
2019இல் மிகப்பெரிய தோல்வியை காங். கட்சி சந்தித்ததற்குப் பொறுப்பேற்று தனது தலைவர் பதவியை ராகுல்காந்தி ராஜினாமா செய்திருந்தார். அதன்பின்னர் அந்தக் கட்சிக்குத் தலைவராகக் கர்நாடகாவைச் சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இப்போது கட்சியின் தலைவராக அவரே இருந்து வருகிறார். 'இந்தியா’ கூட்டணியில் செல்வாக்கு பெற்ற முகமாக ராகுல் மட்டுமே உள்ளார். எனவே அவரை எதிர்க்கட்சி தலைவராக அமர்ந்து திட்டத்தைக் காங்கிரஸ் கையில் எடுத்துள்ளது.
குறிப்பாகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, ராகுலை எதிர்க்கட்சி தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி தலைமைக்கு அனுப்பியுள்ளது.
இருந்தாலும், ராகுல் கட்சியை வளர்ப்பதற்காக பணிகளில் அக்கறை செலுத்த விரும்புவதாகவும், வேறு ஒருவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தர அவர் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிவருகின்றன.
என்னதான் எதிர்க்கட்சி வரிசையில் காங்கிரஸ் உட்காரும் அளவுக்கு வலிமைப் பெற்றிருந்தாலும், அந்தக் கட்சி இந்தத் தேர்தலில் ஒரு சீட்டில் கூட வெல்ல முடியாத சில மாநிலங்கள் உள்ளன.
அது தொடர்பான தகவல்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தின் மூலம் கிடைத்துள்ளது. அதாவது காங்கிரஸ் கட்சி மொத்தம் 8 மாநிலங்களில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்ற அதிர்ச்சியான செய்தி அந்தக் கட்சி தொண்டர்களைச் சோர்வில் ஆழ்த்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத மாநிலங்களில் பட்டியல்:
ஆந்திரப் பிரதேசம் - 0/25
அருணாச்சலப் பிரதேசம் 0/2
இமாச்சலப்பிரதேசம் 0/4
மத்தியப் பிரதேசம் 0/29
உத்தராகண்ட் 0/5
திரிபுரா 0/2
சிக்கிம் 0/1
மிசோரம் 0/1
இந்தப் பட்டியலில் உள்ள இமாச்சலப்பிரதேசத்தில்தான் பிரியங்கா காந்தி மிகப்பெரிய பொதுக்கூட்டங்களை நடத்தினார். பேரணிகளில் கலந்து கொண்டார். இங்கே நடைபெற்ற கூட்டத்தில் 70 ஆண்டுகள் மேலாக ஆட்சியிலிருந்த காங்கிரசைவிடக் கடந்த 10 ஆண்டுகளில் பாஜக உலகில் பணக்கார கட்சியாக மாறி இருக்கிறது. அது எப்படி என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
அந்தப் பேச்சு நாடு முழுவதும் கவனிக்கப்பட்டது. அங்கே பிரியங்கா காந்தியின் அலை வீசி வருவதாகச் சொன்னார்கள். ஆனால், அம்மாநிலத்தில் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியவில்லை.
இந்தச் செய்தி இந்த மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் தொண்டர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications