வங்கி பணிகளில் SC, ST மக்களுக்கு பச்சைத் துரோகம்.. பாஜக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கும் காங்கிரஸ்!
சென்னை: தலித் மக்களுக்கு எதிராகச் செயல்படும் மத்திய பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி துறை சார்பில் மிகப்பெரிய போராட்டம் விரைவில் நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி துறை தலைவா் எம்.பி. ரஞ்சன்குமார் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி அணி தலைவா் எம்.பி.ரஞ்சன்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்தியில் மோடி அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது முதல் எஸ்சி., எஸ்டி., பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினத்தவர் ஆகியோருக்கு தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் வங்கி பணி இடங்களை நிரப்புவதில் வெளிப்படையாக தனது கோர முகத்தை காட்டியுள்ளது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இதில் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு சட்டப்படி வழங்கவேண்டிய இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை.

இதனால் அவர்களுக்கு சமூக நீதி மறுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பாரத ஸ்டேட் வங்கியில் மொத்த 219 பணியிடங்களில் 12 எஸ்சி பிரிவினர் மற்றும் 4 எஸ்டி பிரிவினருக்கு மட்டுமே பணி கிடைத்திருக்கிறது. பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் மொத்தமுள்ள 67 இடங்களில் 1 எஸ்சி பிரிவினருக்கு மட்டுமே பணி கிடைத்திருக்கிறது. எஸ்டி பிரிவினர் ஒருவருக்குக் கூட பணி கிடைக்கவில்லை. பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் மொத்தமுள்ள 39 இடங்களில் 2 எஸ்சி பிரிவினருக்கும் 2 எஸ்டி பிரிவினருக்கு மட்டுமே பணி கிடைத்துள்ளது. பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கியில் மொத்தமுள்ள 21 பணியிடங்களில் 3 எஸ்சி பிரிவினருக்கு மட்டுமே பணி கிடைத்துள்ளது. எஸ்டி பிரிவினருக்கு ஓர் இடம் கூட கிடைக்கவில்லை.
கனரா வங்கியில் மொத்தமுள்ள 49 பணியிடங்களில் 7 எஸ்சி பணியிடங்கள் மற்றும் 2 எஸ்டி பணியிடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியாவில் மொத்தமுள்ள 29 இடங்களில் 3 எஸ்சி பிரிவினருக்கு மட்டுமே பணி கிடைத்துள்ளது. எஸ்டி பிரிவினருக்கு ஓர் இடம் கூட கிடைக்கவில்லை. இந்தியன் வங்கியில் மொத்தமுள்ள 43 பணியிடங்களில் 4 எஸ்சி பிரிவினருக்கு பணி கிடைத்துள்ளது. எஸ்டி பிரிவினர் ஒருவருக்குக் கூட பணி கிடைக்கவில்லை.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மொத்தமுள்ள 18 பணியிடங்களில் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவில் ஒருவருக்குக்கூட பணி கிடைக்கவில்லை. பஞ்சாப் சிந்து வங்கியில் மொத்தமுள்ள 12 இடங்களில் 2 எஸ்சி மற்றும் 1 எஸ்டி பிரிவினருக்கான இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. பஞ்சாப் நேஷனல் வங்கியில் உள்ள 83 பணியிடங்களில் 8 எஸ்சி பிரிவினருக்கும் ஒரு எஸ்டி பிரிவினருக்கு மட்டுமே பணி கிடைத்துள்ளது. யூகோ வங்கியில் உள்ள 22 பணியிடங்களில் 4 எஸ்சி பிரிவினருக்கு 2 பணியிடங்களும் எஸ்டி பிரிவினருக்கு 2 பணியிடமும் கிடைத்துள்ளன.
யூனியன் பாங்க் ஆஃப் இந்தியாவில் மொத்தமுள்ள 55 பணியிடங்களில் 6 எஸ்சி பிரிவினருக்கும் 2 எஸ்டி பிரிவினருக்கும் பணி கிடைத்துள்ளது. இதுதவிர, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் 588 பொது மேலாளர் பதவிக்கு 52 எஸ்சி மற்றும் 14 எஸ்டி பிரிவினர் மட்டுமே பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மத்திய அரசுப் பணிகளில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவிகிதம் , எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 29.5 சதவிகித இட ஒதுக்கீட்டை கட்டாயம் அனைத்து இந்திய அரசு நிறுவனங்களிலும் அமல்படுத்த வேண்டும் என்பது சட்டம்.
அந்த சட்டத்தைத் தூக்கி எறிந்து விட்டு எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு பச்சைத் துரோகம் செய்து கொண்டிருக்கிறது நரேந்திர மோடி அரசு. தலித் மக்களுக்கு எதிரான மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. துறை சார்பில் எனது தலைமையில் மிகப்பெரிய போராட்டம் விரைவில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications