ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "சிறுபான்மை மக்களும், பட்டியலின மக்களும் நிரந்தரமாக தி.மு.க.வுக்கு 'குட்பை' சொல்லிவிடுவார்கள். எனவே மக்கள் தீர்ப்பை ஏற்று, சிறந்த எதிர்க்கட்சியாக தி.மு.க. தனது பணியை தொடர வேண்டும். இல்லையெனில் இனி, எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காது. அரசியலில் தன்னிலை மறந்து, தலைகனத்துடன் ஆட்டம் போடுபவர்கள் மக்கள் தரும் தண்டனையில் இருந்து தப்ப முடியாது" என காங்கிரஸ் அமைச்சர்கள் விஸ்வநாதன், ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளனர்.

தி.மு.க.வினரை விடவும் கடுமையான, மோசமான வார்த்தைகளால் எங்களாலும் பேச முடியும். எழுத முடியும். முரசொலியில் கிறுக்குபவர்களை விடவும் எங்களால் திமுகவை நோக்கி வசை சொற்களை வீச முடியும் எனவும் காங்கிரஸ் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

Congress Warns DMK Minority and Dalit Voters May Permanently Say Goodbye

மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்ள முடியவில்லை

'மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு' என்றார் பேரறிஞர் அண்ணா. ஆனால், கடந்த மே 4-ம் தேதி தமிழ்நாட்டு மக்கள் அளித்த தீர்ப்பை தி.மு.க.வினரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பதை அவர்களது சமீபத்திய பேச்சுகளும், எழுத்துகளும் காட்டுகின்றன. ஜனநாயக நாட்டில், தேர்தல் அரசியலில் வெற்றி தோல்வி என்பது இயல்பானது. தேர்தலில் வென்றால் முழு பதவிக்காலமும் நல்லாட்சியை தர வேண்டும். வெற்றியை தவற விட்டால், அதற்கான காரணங்களை கண்டறிந்து, சரி செய்து அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கான முயற்சிகளில் இறங்க வேண்டும். இதுதான் மக்கள் நலனுக்காக இயங்கும் அரசியல் கட்சியின் நோக்கமாக இருக்கும்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், கட்சி தொடங்கிய 27 மாதங்களில் 108 இடங்களில் வென்று 'தமிழக வெற்றிக் கழகம்' ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. த.வெ.க. தலைவர் திரு. ஜோசப் விஜய் முதலமைச்சராக வேண்டும் என்பதுதான் தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்பு. ஆட்சி அமைக்க 10 இடங்கள் குறைவாக இருந்த நிலையில், 43 இடங்களில் வென்ற அ.தி.மு.க. ஆதரவுடன் த.வெ.க. எளிதாக ஆட்சி அமைத்திருக்க முடியும். ஆனால், தி.மு.க. தலைமையிலான, 'மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி'யில் போட்டியிட்ட காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவற்றின் ஆதரவோடு த.வெ.க . ஆட்சி அமைத்துள்ளது.

எல்லை மீறி காங்கிரசை வசைபாடுகிறார்கள்

இது, ஜனநாயகம், சமூக நீதி, மதச்சார்பின்மை, மாநில உரிமைகள் ஆகிய கொள்கைகளில், முதல்வர் விஜய் அவர்களுக்கு, இருக்கும் உறுதியான நிலைப்பாட்டை காட்டுகிறது. காங்கிரசும், கம்யூனிஸ்ட்களும் இருக்கும் இடத்தில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாஜக இருக்காது. மதவாதத்திற்கு இடமிருக்காது. மதச்சார்பின்மைக்கு எந்த ஆபத்தும் நேராது. மாநில உரிமைகள் பாதுகாக்கப்படும் என்பதை விஜய் புரிந்து கொண்டுள்ளார்.

மதச்சார்பற்ற கொள்கையில் உறுதியாக இருக்கும் த.வெ.க.வுக்கு துணை நிற்பது காங்கிரஸின் கடமை. இதை செய்ததற்காகத்தான் காங்கிரஸ் கட்சியையும், காங்கிரஸ் தலைவர்களையும் தி.மு.க.வினர் எல்லை மீறி வசைபாடி வருகின்றனர். தி.மு.க. தொண்டர்களின் உழைப்பால் வென்று விட்டு, த.வெ.க. ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவளித்து விட்டதாக திமுகவினர் சுடு சொற்களால் விமர்சித்து வருகின்றனர். தி.மு.க. தயவால் காங்கிரஸ் வெற்றி பெற்றது என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அந்த அளவுக்கு, காங்கிரஸ் தயவால் தி.மு.க. வெற்றி பெற்றது என்பதும் உண்மை.

கூட்டணி இல்லாமல் திமுகவால் வெல்ல முடியாது

1967-ல் காங்கிரசில் இருந்து வெளியேறிய மூதறிஞர் இராஜாஜியின் சுதந்திரா கட்சி, 1971-ல் அன்னை இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ், 1996-ல் காங்கிரஸில் இருந்து வெளியேறி திரு. ஜி.கே.மூப்பனார் தொடங்கிய தமிழ் மாநில காங்கிரஸ், 2006, 2021-ல் காங்கிரஸ் என ஏதோ ஒரு வகையில் காங்கிரஸ் தயவில் தான், தி.மு.க., ஆட்சி அமைத்தது. 1989-ல் கூட தி.மு.க. தனி செல்வாக்கில் வெல்லவில்லை. எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு பிளவுபட்ட அ.தி.மு.க.வின் இரு அணிகள், காங்கிரஸ் என நான்கு முனை போட்டியால் தான் தி.மு.க. வென்றது.

ஒரு தேர்தலில் கூட கூட்டணி இல்லாமல் வெல்ல முடியாத தி.மு.க, ஒருமுறை கூட கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுத்தது இல்லை. 2006-ல் 100 இடங்களைக் கூட தி.மு.க. தொடவில்லை. காங்கிரஸ் தயவில்தான் ஆட்சி அமைத்தது. ஆனாலும், காங்கிரசுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்க தி.மு.க.வுக்கு மனம் வரவில்லை. கூட்டணி கட்சிகளின் தயவில் வென்று ஆட்சி அமைத்துவிட்டு, கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும், தி.மு.க, கூட்டாட்சி பற்றி பேசுவது விந்தையிலும் விந்தையாக உள்ளது.

விஜய் செயலில் காட்டியிருக்கிறார்

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில் பேசிய தி.மு.க., தலைவர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள், "கூட்டணி ஆட்சி என்பது தமிழ்நாட்டுக்கு சரிபட்டு வராது" என்றார். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட எந்த ஒரு கட்சியின் தலைவரிடம் இருந்தும் இது போன்ற வார்த்தைகள் வராது. ஆனால், இப்போது 108 இடங்களில் வென்றுள்ள த.வெ.க, ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள காங்கிரசுக்கு இரண்டு அமைச்சர் பதவிகளை தந்துள்ளது. தலா இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு தலா ஒரு அமைச்சர் பதவியை வழங்கியுள்ளது.

இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் அமைச்சரவையில் சேர விரும்பியிருந்தால் அவர்களுக்கும் தலா ஒரு அமைச்சர் பதவி கிடைத்திருக்கும். இப்படி ஆட்சி அமைக்க உதவிய கட்சிகளுக்கும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருவது தான் உண்மையான கூட்டாட்சி. அதை தான் முதல்வர் விஜய் அவர்கள் செயலில் காட்டியிருக்கிறார்.

த.வெ.க. ஆட்சி அமைப்பதை தடுக்க, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் திரு. எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைக்க பா.ஜ.க. சதித் திட்டம் தீட்டியது. அதற்கு தி.மு.க. தலைமையும் உடன்பட்டது. ஆனால், தி.மு.க. கூட்டணியில் இருந்த மதச்சார்பற்ற சக்திகள் உறுதியுடன் நின்று எதிர்த்ததால் பா.ஜ.க.வின் சதித் திட்டம் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது. தமிழ்நாட்டை மறைமுகமாக ஆள பா.ஜ.க. முயற்சிப்பதை தடுக்க, மதச்சார்பற்ற கொள்கையில் உறுதியாக உள்ள காங்கிரஸ் த.வெ.க. ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தது. இது மதச்சார்பின்மையை உயிர்மூச்சாக கொண்டுள்ள காங்கிரசின் கடமையும்கூட.

இதற்காக காங்கிரஸ் கட்சியையும், இந்தியாவின் ஒரே நம்பிக்கையான, மதவெறி கொண்ட பாசிச பாஜகவை உறுதியுடன் எதிர்க்கும் வலிமை கொண்ட ஒரே தேசிய தலைவரான திரு ராகுல் காந்தி அவர்களையும் தி.மு.க. வரம்பு மீறி விமர்சித்து வருகிறது. துரோகம் செய்துவிட்டார், கூட இருந்தே குழி பறித்து விட்டார் என்றெல்லாம் தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளிதழான 'முரசொலி' தினந்தோறும் வார்த்தைகளை அள்ளி வீசுகிறது. இன்னும் பல மோசமான, கொச்சையான வார்த்தைகளை எல்லாம் தி.மு.க.வினர் பயன்படுத்தி வருகின்றனர்.

திமுக இனி எப்போதுமே ஆட்சிக்கு வர முடியாது

தி.மு.க.வினரை விடவும் கடுமையான, மோசமான வார்த்தைகளால் எங்களாலும் பேச முடியும். எழுத முடியும். முரசொலியில் கிறுக்குபவர்களை விடவும் எங்களால் திமுகவை நோக்கி வசை சொற்களை வீச முடியும். ஆனால், நாங்கள் வளர்ந்த கட்சி, எங்களை வளர்த்த தலைவர்கள் அரசியல் எதிரிகளை நாகரிமாக எதிர்கொள்ள கற்றுத் தந்திருக்கிறார்கள். அந்த நாகரிக எல்லையைத் தாண்ட நாங்கள் விரும்பவில்லை. இனியும் தி.மு.க.வினரின் வரம்பு மீறல் தொடர்ந்தால், நாங்களும் வரம்பு மீற வேண்டியிருக்கும். தி.மு.க.வின் வழியிலேயே அவர்களுக்கு பதிலடி கொடுக்க தயங்க மாட்டோம். அந்த நிலைக்கு எங்களை தள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

காங்கிரஸ் கட்சியை எப்படி விமர்சிக்கலாம் என்பதை விட்டு விட்டு, தேர்தல் தோல்விக்கான உண்மையான காரணங்களை தி.மு.க. முழுமையாக கண்டறிய வேண்டும். சிறுபான்மை மக்களும், பட்டியலின மக்களும் ஏன் தி.மு.க.வுக்கு வாக்களிக்கவில்லை என்பதை முதலில் கண்டறியுங்கள். அதை விட்டுவிட்டு கூட்டணி கட்சிகள் மீது பழி சுமத்தி, கொச்சையாக விமர்சித்துக் கொண்டே இருந்தால் தி.மு.க. இனி எப்போதுமே ஆட்சிக்கு வர முடியாத நிலை ஏற்படும்.

சிறுபான்மை மக்களும், பட்டியலின மக்களும் நிரந்தரமாக தி.மு.க.வுக்கு 'குட்பை' சொல்லிவிடுவார்கள். எனவே மக்கள் தீர்ப்பை ஏற்று, சிறந்த எதிர்க்கட்சியாக தி.மு.க. தனது பணியை தொடர வேண்டும். இல்லையெனில் இனி, எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காது. அரசியலில் தன்னிலை மறந்து, தலைகனத்துடன் ஆட்டம் போடுபவர்கள் மக்கள் தரும் தண்டனையில் இருந்து தப்ப முடியாது" என்று கூறியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+