விஜய் உடன் நெருங்கும் காங்கிரஸ்..? தமிழ்நாட்டை விடுங்க.. மேலிட புள்ளிகள் கணக்கே வேறயாம்!
சென்னை: திமுகவில் தாங்கள் எதிர்பார்க்கும் எண்ணிக்கையில் சீட் கிடைக்காததால், டெல்லியில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகள் தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்படுகிறது. கேரள தேர்தலை குறிவைத்து விஜய் உடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் கட்சியின் ஒருதரப்பு விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்து வருகிறது. திமுக கூட்டணியில் கடந்த பல ஆண்டுகளாக தொடரும் காங்கிரஸ் கட்சி, தற்போது திமுகவிற்கு குடைச்சல் கொடுக்க தொடங்கியுள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதி ஒதுக்கீடு என டிமாண்ட் வைக்க தொடங்கியது காங்கிரஸ்.

காங்கிரஸ் டிமாண்ட்
நடிகர் விஜய் தொடங்கிய தவெக தான், ஆட்சியில் பங்கு தருவதாக கூறிய நிலையில், தவெக கொடுத்த ஆஃபரில் திமுகவிடம் டிமாண்ட் வைத்து வருகிறது காங்கிரஸ் கட்சி. ராகுல் காந்திக்கு நெருக்கமான காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி விஜய்யை சந்தித்து கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் ஆட்சியில் பங்கு என திமுகவை சீண்டும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார். திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகி, விஜய்யின் தவெகவுடன் கூட்டணி அமைக்கக் கூடுமோ? என்ற சந்தேகங்களும் எழுந்தன.
திமுக - காங்கிரஸ் கூட்டணி
எனினும், காங்கிரஸ் தலைமை திமுக கூட்டணி என்பதில் உறுதியாக உள்ளது. கூட்டணி சலசலப்புகளுக்கு இடையே திமுக எம்.பி கனிமொழி ராகுல் காந்தியை சந்தித்தும் பேசி இருந்தார். இதையடுத்து திமுக- காங்கிரஸ் கூட்டணி குறித்து பொதுவெளியில் காங்கிரஸ் கட்சியினர் பேசக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் தற்போது திமுக தரப்பில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. 41 தொகுதிகள் வேண்டும் என காங்கிரஸ் கேட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால் திமுகவோ காங்கிரஸ் கட்சிக்கு 27 சட்டசபை தொகுதிகள் மற்றும் 1 ராஜ்யசபா சீட் வரை தரலாம், அதற்கு மேல் வாய்ப்பே இல்லை எனக் கூறி வருகிறது. இதனால் தற்போது வரை கூட்டணி தொடர்பாக திமுக- காங்கிரஸ் இடையே எந்தவித முன்னேற்றம் இல்லாமல் உள்ளது.
தவெக உடன் பேச்சு?
திமுக காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கவில்லையென்றால் தவெக உடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் பரபரக்கிறது. இதற்காக பேச்சுவார்த்தையை காங்கிரஸ் கட்சி ரகசியமாக மேற்கொண்டு வருவதாக கூறப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியின் கிரிஷ் சோடங்கர், அளித்த பேட்டியில் தவெக, காங்கிரஸ் உடன் கூட்டணிக்கு தயாராக உள்ளதாகத் தெரிவித்தார்.
திமுக கூட்டணியில் பேச்சுவார்த்தைக்கு காங்கிரஸ் கட்சி அழைக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்விக்கு இதுவரை திமுகவில் இருந்து காங்கிரஸ் கட்சியை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என அவர் தெரிவித்தார்.
கிரிஷ் சோடங்கர் சொன்ன விஷயம்
விஜய்யின் தவெக உடன் கூட்டணி அமைப்பது குறித்து காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், தவெக எங்களை வெளிப்படையாக அழைத்து, எங்களுடன் கூட்டணி அமைக்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளது என்றார்.
விஜய்யுடன் காங்கிரஸ் உண்மையாக பேச்சுவார்த்தை நடத்தியதா? என்ற கேள்விக்கு அரசியலில் அனைவரிடமும் பேச வேண்டும், தகவல் தொடர்பு ஒருபோதும் நின்றுவிடாது. பரம எதிரிகள் கூட பேசிக் கொள்வார்கள் என பதில் அளித்தார். இதன் மூலம் கூட்டணி தொடர்பான குழப்பங்கள் அதிகரித்தன.
காங்கிரஸ் பிளான் என்ன?
இந்நிலையில் தான் திமுகவில் தாங்கள் எதிர்பார்க்கும் எண்ணிக்கையில் சீட் கிடைக்காததால், டெல்லியில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகள் தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்படுகிறது. கேரள மாநில சட்டசபை தேர்தலை குறிவைத்து விஜய் உடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் கட்சியின் ஒருதரப்பு விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவில் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம். தமிழ்நாட்டில் தவெக உடன் கூட்டணி அமைத்தால் கேரளாவிலும் அந்த ஆதரவை வைத்து விஜய் ரசிகர்களின் ஆதரவைப் பெறலாம் என காங்கிரஸ் மேலிட நிர்வாகிகள் சிலர் கணக்கு போடுவதாகச் சொல்லப்படுகிறது. இதற்கிடையே, காங்கிரஸ் எங்களுடன் தான் கூட்டணிக்கு வரும் என தவெக நிர்வாகிகளும் அடித்துச் சொல்லி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications