தமிழ்நாட்டில் சிறை கைதிகளுக்கு தாம்பத்திய உரிமை.. அரசு பரிசீலிக்க வேண்டும்.. ஹைகோர்ட் நீதிபதி கோரிக்கை
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள சிறைக் கைதிகளுக்கு தாம்பத்திய உரிமை வழங்கும் வகையில் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றங்களுக்கு பொறுப்பு நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் இருக்கிறார். நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கடந்த ஜூலை 8-ந்தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல் மத்திய சிறையில் ஆய்வு நடத்தினார்.

அப்போது சிறையில் பார்த்த விஷயங்கள் மற்றும் கைதிகளிடம் பேசிய விஷயங்கள் தொடர்பாக நீதிபதிகள் மற்றும் அதிகாரிகளுடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் ஆலோசனை நடத்தினார்.
அந்த கூட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பணி ஆணைக்குழு உறுப்பினர் செயலர் நீதிபதி ஏ.நசிர் அகமது, திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.செல்வசுந்தரி, உயர்நீதிமன்ற சட்டப்பணி ஆணைக்குழு செயலர் நீதிபதி கே.சுதா, சிறைத்துறை டி.ஜி.பி. அம்ரேஸ் பூஜாரி, சிறைத்துறை டி.ஐ.பி. கனகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
இந்த கூட்டத்தில், அரசு கோரிக்கை விடுத்து பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, புழல் சிறையில் உள்ள பார்வையாளர்கள் அரங்கில் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் புழல் சிறையில் கைதியாக உள்ளவர்கள் தங்கள் உறவினர்களிடம் பேசக்கூட முடியவில்லை. எனவே, கூடுதலாக பார்வையாளர்கள் அரங்குகளை உருவாக்க வேண்டும் என்று பார்வையாளர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.
மேலும் புழல் சிறையில் பார்வையாளர் அரங்கு அருகே பெண்களுக்கு கழிவறை வசதி இல்லை. ஏற்கனவே அங்குள்ள ஆண்கள் கழிவறையும் சுத்தம் இல்லை. எனவே, அங்கு பெண்கள் கழிவறை கட்டவேண்டும். கழிவறைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும். சிறையில் உள்ள உணவு தரத்தை உயர்த்த வேண்டும்.
புழல் சிறையில் பெண் கைதிகளுடன் உள்ள அவர்களது 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பிஸ்கட், பால் மற்றும் ஆரோக்கியமான பானங்களை வழங்க சிறை அதிகாரிகள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். எனவே அந்த குழந்தைகள் ஊட்டசத்து இல்லாமல் கஷ்டப்படவில்லை என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். அந்த குழந்தைகளுக்கு மழலையர் பள்ளி, விளையாட்டு பொம்மைகள், பொழுதுபோக்கு அம்சங்களையும் அதிகாரிகள் செய்து தர வேண்டும்.
வெளிநாட்டு கைதிகள் தங்கள் உறவினர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளது. சிறை விதிகளின்படி, வெளிநாட்டு கைதிகள், உறவினர்கள் சந்திக்க வழிவகை இல்லை. அதனால், உள்துறை செயலர், இதற்கு அனுமதி வழங்கும் விதமாக விதிகளை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் உள்ளது போல, சிறைக் கைதிகளுக்கு தங்கள் துணையுடன் தாம்பத்திய உரிமை வழங்கும் திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்துவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications