"கோபாலபுரம் டு செந்தில் பாலாஜி.. புள்ளிகளை இணைத்து பாருங்க புரியும்".. விடாத அண்ணாமலை.. பரபர புகார்
சென்னை: மின்சார வாரிய கொள்முதல் மற்றும் ஒப்பந்தத்தில் முறைகேடு நடப்பதாக பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை தொடர்ந்து புகார் வைத்து வருகிறார். இதனால் அண்ணாமலைக்கும் மின்வாரியத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் இடையில் இணையத்தில் கடும் விவாதம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்வாரியத் துறையில் செய்யப்பட உள்ள ஒப்பந்தம் ஒன்றில் முறைகேடு நடக்க உள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை சில நாட்களுக்கு முன் புகார் வைத்தார். சென்னையில் பேட்டி அளித்த அண்ணாமலை, தமிழ்நாட்டில் ஒரு எனர்ஜி நிறுவனம் இருக்கிறது. அந்த நிறுவனம் தற்போது பொருளாதார ரீதியாக வலுவாக இல்லை.
அந்த நிறுவனம் நஷ்டத்தில் இருக்கிறது. நஷ்டத்தில் இயங்கும் அந்த நிறுவனத்தை ஆளும் கட்சி நபர் ஒருவர் வாங்க இருப்பதாக அண்ணாமலை குற்றஞ்சாட்டி இருந்தார்.

குற்றச்சாட்டு என்ன
அந்த நஷ்டப்பட்ட நிறுவனத்தை ஆளும் கட்சி நிறுவனர் வாங்கி அதன்மூலம், தமிழ்நாடு மின்சார வாரியத்துடன் கொள்முதல் ஒப்பந்தங்களை செய்ய இருக்கிறார்கள் . 5000 கோடி ரூபாய் வரை ஆர்டர் எடுக்க அந்த நிறுவனம் திட்டம் போட்டுள்ளது. இப்படி இழப்பில் ஓடும் நிறுவனங்களை வாங்கி அதன் மூலம் ஒப்பந்தங்களை செய்து லாபம் செய்ய பார்க்கிறார்கள். இது திமுகவிற்கு கை வந்த கலை.

ஒப்பந்தம்
அந்த ஒப்பந்தம் போட போகும் நிறுவனம் யார், திமுக பிரமுகர் யார் என்ற விவரத்தை இப்போது வெளியிட மாட்டேன். ஆனால் திமுக அரசு அந்த பாதையில் சென்றால், அந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டால், நான் ஆவணங்களை ஆதாரத்தோடு வெளியிடுவேன் என்று எச்சரிக்கை விடுகிறேன் என்று அண்ணாமலை குறிப்பிட்டார். இதற்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பதில் அளித்தார்.

பதில்
அமைச்சர் செந்தில்பாலாஜி அளித்த பதிலில், அண்ணாமலை தனது இருப்பை காட்டிக்கொள்ள இப்படி செய்திகளை வெளியிடுகிறார். அவர் தன்னிடம் எதோ ஆதாரம் இருப்பதாக கூறுகிறார். அவரிடம் அப்படி ஆதாரம் இருந்தால் வெளியிடட்டும். அவர் ஆதாரத்தை வெளியிட்டு விவாதிக்க அழைத்தால் நான் செல்ல தயார். அவருக்கு 24 மணி நேரம் அவகாசம் தருகிறேன். இல்லையென்றால் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி அண்ணாமலைக்கு காலவகாசம் கொடுத்தார்.

அண்ணாமலை ட்வீட்
இதற்கு நேற்று ட்வீட்டரில் விளக்கம் அளித்த அண்ணாமலை, மின்சாரத்துறை அமைச்சர் முறைகேடு நடந்ததற்கு ஆதாரமும் என்ன என்று கேட்கிறார். அவருக்கு ஒரு சாம்பிள் காட்டுகிறேன். தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் ஒப்பந்ததாரர்களுக்கு பணம் வழங்காமல் இருந்துள்ளனர். ஆனால் இப்போது திடீரென்று ரூ.29.64 கோடி பணம் செலுத்தப்பட்டது. பில் அனுமதிக்கு 4% கமிஷனை எடுத்துக் கொண்ட பின் திடீரென இப்படி பணம் வழங்கப்பட்டுள்ளது, இதற்கு பதில் சொல்லுங்கள். இந்த 4 சதவிகித கமிஷன் எங்கே சென்றது என்று அவரின் வீட்டில் இருக்கும் 5 ஆலோசகர்களுக்குத்தான் தெரியும்.

டேட்டா
கடந்த வாரம் ஒரு யூனிட் மின்சாரம் ரூ. 20.00 வரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது! உற்பத்தி செய்யும் அனல் மின்சாரத்தின் உற்பத்தி செலவை விட 5 மடங்கு இது கூடுதலான விலை.. என்று புள்ளி விவரங்களை வெளியிட்டு அண்ணாமலை குற்றஞ்சாட்டி இருந்தார். இதற்கான டேட்டா ஷீட்களையும் அண்ணாமலை வெளியிட்டு இருந்தார்.

செந்தில் பாலாஜி விளக்கம்
இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த விளக்கத்தில், செப் 24 - அக் 19 வரை பயன்படுத்திய மின்சாரம் 6200 மில்லியன் யூனிட். அதில் இந்திய மின் சந்தையில் வாங்கியது 397 மி.யூ. அதிலும் ரூ. 20/-க்கு வாங்கிய மின்சாரம் 65 மி.யூனிட் மட்டுமே. ரூ.20/-க்கு குஜராத் கொள்முதல் செய்த மின்சாரம் 131 மி.யூனிட்கள். கடந்த ஆட்சியில் புதிய மின் உற்பத்தி திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது.

மின் சந்தை விலை
அக் 18 அன்று இந்திய மின் சந்தையில் தமிழகம் வாங்கியது 7.66 மி.யூ. குஜராத் வாங்கியது 45 மி.யூ, மஹாராஷ்டிரா வாங்கியது 18 மி.யூ. ஹரியானா வாங்கியது 14 மி.யூ. இந்திய மின் சந்தையில் அக் 18 அன்று விலை, குறைந்தபட்சம் ரூ.1.99/- யூனிட். அதிகபட்ச விலை ரூ 8.50/- யூனிட், சராசரி ரூ.6.00/- யூனிட். அதிமேதாவிகளும், ஆர்வக்கோளாறுகளும், வாட்ஸப் வீரர்களும் IEX இணையதளத்தை பார்த்து அறிந்து கொள்ளவும்.

பதில் என்ன?
மின்வாரிய துறையில் முறைகேடு நடந்துள்ளதென திரு.அண்ணாமலை கூறியதற்கு ஆதாரத்தை கேட்டால், வாரிய அலுவலகத்திற்கு அனுப்பிய நிதியை, யாருக்கு அனுப்பியது என்பது தெரியாமல், திருட்டுத்தனமாக எடுக்கப்பட்ட அந்த Excel கையில் இருந்தும்,அந்த தொகையையும் 29.99 கோடியென சரியாக எழுத கூட தெரியாமல், (1/4) All purpose அதிமேதாவியாக எண்ணி, 4% கமிஷனென மீண்டும் பொய் புகார் கூறி கழக ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தப்பார்க்கும் அண்ணாமலை இதற்கான ஆதாரத்தையும் இன்றே வெளியிடவேண்டும். இல்லை, அவர்களது வழக்கப்படி மன்னிப்பு கேட்க வேண்டும்.

அண்ணாமலை செந்தில் பாலாஜி மோதல்
2021 மார்ச் மாதம் முதல் 06.05.2021 வரை, மின் கொள்முதல், தளவாட கொள்முதல் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு சேர வேண்டிய ரூ. 15541 கோடி நிலுவையில் இருந்தது. அக். 1ல் PFC & REC நிறுவனங்களிடமிருந்து நிதி வந்த பின், தலைமை நிதி கட்டுப்பாட்டு அலுவலகத்தில் நிலுவை தொகைகள் சரி பார்க்கப்பட்டு, அந்தந்த மின் பகிர்மான மற்றும் மின் உற்பத்தி வட்டத்திற்குரிய மேற்பார்வை மற்றும் தலைமை பொறியாளர்கள் அலுவலக வங்கி கணக்குகளுக்கு அனுப்பப்பட்டு, பின்னர் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. இதுவே வழக்கமான நடைமுறை, என்று குறிப்பிட்டார்.

அண்ணாமலை மீண்டும் புகார்
இதற்கு எதிராக அண்ணாமலை மீண்டும் அளித்துள்ள புதிய புகாரில், கோபாலபுரம் - பிஜிஆர் எனர்ஜி - மின்சார அமைச்சகம் - V. செந்தில் பாலாஜி இந்தப் புள்ளிகளை இணைத்து பாருங்கள்.. விடை எளிதில் புரியும் !, என்று குறிப்பிட்டுள்ளார். எனர்ஜி நிறுவனத்தின் பெயரை குறிப்பிட்டு இந்த முறை அண்ணாமலை புகார் வைத்துள்ளார். அதோடு மின்சார துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் டேக் வெளியிட்டு இருக்கிறார்கள். இணையத்தில் இவர்களுக்கு இடையில் நடக்கும் வாதம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications