வீணை வடிவில் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் கட்டுமானம்! கடல் அலை வடிவில் பாலம்! ருசிகரத் தகவல்!
சென்னை: கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் கடலுக்கு நடுவே அமைக்கப்படவுள்ள நிலையில், அதன் முழுக் கட்டுமானமும் வீணை வடிவில் உருவாக்கப்படவுள்ளது.
தமிழின் பண்பாட்டு அடையாளங்களை வெளிப்படுத்தும் விதமாக இயல், இசை, நாடகம் மற்றும் கருணாநிதி பயன்படுத்திய பொருட்களை பிரதிபலிக்கும் வகையில் திட்டப்பணிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே கடலுக்கு மத்தியில் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பாக வரும் ஜனவரி 31ஆம் தேதி பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தவுள்ளது தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியம்.

கருணாநிதி பேனா
சென்னை மெரினா கடலில் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் அமையவுள்ள இடம், நில அதிர்வு மண்டல வரைப்படத்தின் படி மிதமான ஆபத்து மிக்க பகுதி என்பது வரைவு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பிடு அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. ரூ.81 கோடி செலவில் 42 மீட்டர் உயரத்தில் அமைக்கப்படவுள்ள கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னமானது, சென்னையின் புதிய அடையாளமாக உருவாகும் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம்.

வீணை வடிவில்
அந்தளவுக்கு பார்த்து பார்த்து அதற்கான கட்டுமானப் பணிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கருணாநிதி நினைவிடத்தில் இருந்து பேனா சிலை அமையவுள்ள இடம் வரை கடல் அலை வடிவில் உயர்மட்ட பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல் கருணாநிதி நினைவிடத்தில் தொடங்கி பேனா சிலை அமையவுள்ள இடம் வரையிலான மொத்த கட்டுமான உருவமும் வீணை வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

மிதமான ஆபத்து
இதேபோல் இந்திய நிலையான நில அதிர்வு மண்டல வரைபடத்தின் படி பேனா சிலை அமையவுள்ள ஆய்வுப்பகுதி மிதமான ஆபத்து பகுதியின் கீழ் வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டமைப்புகளை வடிவமைக்கும் போது முறையே கிடைமட்ட மற்றும் செங்குத்து திசைகளில் பொருத்தமான நில அதிர்வு குணக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் மேலும், அந்த இடம் புயல், சூறாவளி, சுனாமி ஏற்பட வாய்ப்புள்ள இடம் எனவும் தெரிய வந்திருக்கிறது.

இந்தி மொழி
கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னத்தில் இடம்பெறும் அவசர கால எச்சரிக்கைகள் தமிழ், ஆங்கிலம், இந்தி என மூன்று மொழிகளில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரைவு அறிக்கையில் மட்டுமே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் இது தொடர்பாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தாத நிலையில், வரும் ஜனவரி 31ஆம் தேதி இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.












Click it and Unblock the Notifications