வாஞ்சிநாதனுக்கு எதிரான நடவடிக்கை.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனுக்கு முன்னாள் நீதிபதிகள் எதிர்ப்பு
சென்னை: நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீது உச்சநீதிமன்றத்தில் புகார் அளித்த வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை உடனே கைவிட வேண்டும் என்று 8 முன்னாள் நீதிபதிகள் கூட்டறிக்கை விடுத்துள்ளனர். புகார் மனு தலைமை நீதிபதி முன்பு நிலுவையில் உள்ள நிலையில், இந்த விவகாரத்தை சுவாமிநாதன் விசாரிக்க கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 8 நீதிபதிகள் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு எதிராக, மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிக்கு ஜி ஆர் சுவாமிநாதன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொண்டது நீதித்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வழக்கறிஞர் சங்கம் தரப்பில் இந்த விவகாரத்தில் கடுமையான எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உட்பட்ட நீதிபதிகள் சந்துரு, நீதிபதி ஹரி பரந்தாமன், நீதிபதி சி.டி செல்வம், நீதிபதி கலையரசன், நீதிபதி சசிதரன், நீதிபதி அக்பர் அலி, நீதிபதி விமலா, நீதிபதி எஸ்.எஸ். சுந்தர் ஆகிய 8 நீதிபதிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். வாஞ்சிநாதன் அனுப்பிய புகாருக்கு இந்திய தலைமை எடுக்கும் முடிவு வரை நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் இதனை கைவிட வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இது தொடர்பாக 8 நீதிபதிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, ஒரு நீதிபதியின் நடவடிக்கைக்கு எதிராக யாராவது மனு அளிக்க விரும்பினால், அதனை நேரடியாக இந்திய தலைமை நீதிபதிக்கு அனுப்ப வேண்டும் என்று சுட்டிக்காட்டப்படுள்ளது. இந்திய தலைமை நீதிபதி தான் உண்மைத் தன்மை மற்றும் வேறு விதமான விசாரணை தேவைப்படும் என்று கருதினால் நீதிபதிக்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து உள் விசாரணை செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கூறப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்கிறது என்பதை அந்த குழு சொன்னால் மட்டுமே விசாரணை நடத்த முடியும் அல்லது உத்தரவிட முடியும். இதுவே தற்போது உள்ள நடைமுறை என்று தெரிவித்துள்ளனர். இதே நடைமுறைதான் அலகாபாத் நீதிமன்றத்தில் சமீபத்தில் பின்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அனுப்பிய மனு மீது இந்திய தலைமை நீதிபதி அத்தகைய நடவடிக்கை எடுக்காத நிலையில், சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுப்பது முன்கூட்டியே எடுக்கப்படும் நடவடிக்கை என்று கருதுவதாக தெரிவித்துள்ளனர். ஜூலை 29 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது என்பது உண்மை தான் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.
வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீதான இந்த காலக்கட்டத்தில் எடுக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். இந்திய தலைமை நீதிபதி எடுக்கும் நடவடிக்கைகளுக்காக காத்திருக்க வேண்டும் என்றும், கற்றறிந்த நீதிபதிகள் என்ற முறையில் இந்த அறிக்கையை வெளியிடுவதாகவும் அதில் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications