ஆர்எஸ் பாரதி குற்றச்சாட்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்காக எடுக்கப்படுமா? நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பதில்
சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் திமுக அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு விடுவிக்கப்பட்டதற்கு எதிராக தாமாக முன்வந்து உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்கிறார். இதனை விமர்சித்த திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படுமா? என்ற கேள்விக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பரபரப்பான விளக்கம் அளித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் அமைச்சர்களாக உள்ளனர். இவர்கள் 2006 முதல் 2011 வரை நடந்த திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சர்களாக இருந்தனர். அப்போது வருமானத்தை மீறி சொத்து குவித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் தான் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என அவர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் தான் சமீபத்தில் 2 அமைச்சர்களையும் கீழமை நீதிமன்றம் விடுதலை செய்தது.
மேலும் இந்த வழக்கை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை. இந்நிலையில் தான் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இவ்வழக்குகளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார். எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி என்ற வகையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இதனை விசாரித்தார்.
இதற்கு முன்பு அமைச்சர் பொன்முடி வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த நிலையில் அதன் தொடர்ச்சியாக கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோரின வழக்குகளை அவர் எடுத்து விசாரித்தார். இந்த வேளையில் அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோரை விடுவித்ததற்கு அவர் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
கடந்த 2021ம் ஆண்டு இந்த வழக்குகளில் விடுவிக்க கோரிய மனுக்களுக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த புலன் விசாரணை அதிகாரி, ஆட்சி மாற்றத்துக்கு பின், மேல் விசாரணைக்கு அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்துள்ளனர் என்றார். இந்த வழக்கில் தவறான நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் மனசாட்சியை உலுக்கிய இந்த விவகாரத்தில் நீதிமன்றம் கண்மூடிக் கொண்டிருக்க முடியாது. நீதிமன்றம் என்பது குறிப்பிட்ட ஒரு கட்சிக்கோ, அதில் தொடர்புடையவர்களுக்கோ, அரசுக்கோ உரித்தானது அல்ல. ஆனால் இந்த நாட்டில் வாழும் குப்பனுக்கும், சுப்பனுக்கும் உரித்தானது என தெரிவித்தார்.
அதோடு தீர்ப்பை படித்து பார்த்தவுடன் 3 நாள் வரை தூக்கம் வரவில்லை என கூறினார். மேலும் இந்த வழக்குகள் தொடர்பாக செப்டம்பர் 20ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் உள்ளிட்டோருக்கும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார். நீதிபதி ஆனந்த் வெங்கடேசின் இந்த நடவடிக்கைக்கு திமுகவின் அமைப்பு செயலாளரான ஆர்எஸ் பாரதி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‛‛எனக்கு கூடத்தான் 7 நாட்களாக தூக்கம் வரவில்லை. தூக்கம் வரவில்லை என்றால் என்ன நோய் என்று மருத்துவரை தான் பார்க்க வேண்டும்'' என நீதிபதியின் பெயரை குறிப்பிடாமல் அவர் கூறியது விவாதத்தை கிளப்பியது. மேலும் நீதிமன்றம் மீது திமுகவுக்கு நம்பிக்கையும், மரியாதையும் உள்ளது என்றும் நீமன்றம் மூலம் பல வெற்றிகளை பெற்ற இயக்கம் திமுக எனவும் குறிப்பிட்டார்.
இந்நிலையில் தான் திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வலியுறுத்தினார். இதுபற்றி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ‛நீதிபதியாக பதிவேற்ற நிலையில் சட்டப்படியான கடமையை தான் செய்தேன். பொது வாழ்க்கையில் இருப்பவர்களை பற்றி யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் கூறுவார்கள்.
அந்த கருத்துகளால் நான் கலக்கம் அடைவது இல்லை. அதனை கருத்தாகவும் எடுத்து கொள்வது இல்லை. ஏனென்றால் நான் நிலை தவறினால் நீதிபதியாக செயல்படும் திறமையை இழந்துவிடுவேன். இதனால் ஆர்எஸ் பாரதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்க விரும்பவில்லை'' என்றார்.












Click it and Unblock the Notifications