பாஜகவின் பிரசார பீரங்கியா சர்ச்சை சாமியார் அன்னபூரணி? ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவருடன் திடீர் சந்திப்பு!
சென்னை: தமிழகத்தின் சர்ச்சைக்குரிய சாமியார் "அன்னபூரணி அரசு அம்மா", ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான இந்தரேஷ் குமாரை சந்தித்து பேசியுள்ளார். இந்த படங்களை தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சர்ச்சை சாமியார் அன்னபூரணி. இதனால் விரைவில் தமிழக பாஜகவில் இணைந்து சட்டசபை தேர்தலில் அக்கட்சிக்காக பிரசாரம் செய்வாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
டிவி நிகழ்ச்சி ஒன்றில் கள்ளக் காதல் விவகாரத்தில் பேசப்பட்டவர் அன்னபூரணி. ஏற்கனவே திருமணமான அன்னபூரணி, திருமணமான அரசு என்பவருடன் சேர்ந்து வாழ்ந்த சர்ச்சையால் இந்த டிவி விவாதத்தில் பங்கேற்றார். இதன் பின்னர் அரசு உயிரிழந்துவிட, அன்னபூரணி அரசு என பெயரை மாற்றிக் கொண்டு தம்மை அம்மனின் அவதாரம் என அறிவித்தார்.

திருவண்ணாமலை அருகே தமக்கு தாமே ஒரு கோவிலை கட்டி தாமே அம்மன் அவதாரம்; தாமே அம்மன் சாமி என கூறிவந்தார் அன்னபூரணி அரசு. அவரை நம்பி பக்தர்களும் படையெடுக்க தொடங்கினர். பின்னர் சமூக வலைதளங்களிலும் "அன்னபூரணி அரசு அம்மா" வெகுபிரபலாமானார்; தம்மை பற்றிய விமர்சனங்களை எல்லாம் கடந்தும் "ஆன்மீக" பாதையில் பயணித்த அன்னபூரணி அண்மையில் 3-வதாக திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தை ஆன்மீக திருமணமாகவும் அறிவித்தார். தம்மை போலவே 3-வது கணவரும் பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்குவார் என அறிவித்தார்.

இந்த ஆன்மீக திருமண தம்பதி, தேனிலவுக்காக வெளிநாடுகளுக்கும் சென்று திரும்பியது. பின்னர் யூ டியூப் சேனல்களிலும் அதிரடியாக பேட்டி கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி வந்தார் சர்ச்சை சாமியார் அன்னபூரணி.

இந்த நிலையில் தமது ஃபேஸ்புக் பக்கத்தில், "With RSS leader Mr. Indresh Kumar Ji at the Sindhu Yatra event. | Annapurani Arasu Amma" என்ற தலைப்பில் சில படங்களை பதிவிட்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர்களில் ஒருவரான இந்தரேஷ் குமாருடன் வெகு இயல்பாக சர்ச்சை சாமியார் அன்னபூரணியும் அவரது 3-வது கணவரும் உரையாடும் படங்கள், நிகழ்ச்சி ஒன்றில் அன்னபூரணி அரசு சாமியார் பேசும் படங்கள் இடம் பெற்றுள்ளன.

இதனால் ஆர்.எஸ்.எஸ். மூலம் பாஜகவில் அன்னபூரணி அரசு அம்மா இணையக் கூடும் எனவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் சர்ச்சை சாமியார் அன்னபூரணி அரசு அம்மாள், பாஜகவுக்காக பிரசாரம் செய்ய களத்துக்கு வந்தாலும் ஆச்சரியமில்லை என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.













Click it and Unblock the Notifications