Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சர்ச்சைக்குரிய சேது சமுத்திரத் திட்டம் - அரசாங்க உண்மைகளை புட்டுப் புட்டு வைத்த டி.ஆர்.பாலு!

உண்மையில் சேது கால்வாய் ஏன் அரசியலாக்கப்பட்டது என புட்டுப் புட்டு வைக்கிறார் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மீண்டும் சூடு பிடித்திருக்கிறது சேது சமுத்திரத் திட்டம். அனல் பறக்கும் பிரச்சாரத்தைக் கையில் எடுத்துள்ளது திமுக கூட்டணி. இந்தத் திட்டம் ஏதோ இன்று தொடங்கியதல்ல; 'சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்' என்று குறைந்தது 100 ஆண்டுகள் முன்பே பாரதி பாடிவிட்டார்.

ஆனால் அதற்கும் மேலான வரலாறு உண்டு என்கிறார் புதுமடம் ஜாபர் அலி. இந்தக் கனவுத் திட்டம் 1760 பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே தொடங்கிவிட்டது என்கிறார் அவர்.

2001ல் பாஜக மற்றும் அதிமுகவின் தேர்தல் அறிக்கையிலும் இந்த திட்டத்தை நிறைவேற்றுவோம் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்ததை திமுக எம்.பி டி.ஆர் பாலு முன்வைக்கிறார்.

சேது சமுத்திர திட்டத்தால் என்ன பலன்?

சேது சமுத்திர திட்டத்தால் என்ன பலன்?

புதுமடம் ஜாபர் அலி, "இந்தியாவில் ஏறத்தாழ 7500 கி.மீ. நீளத்திற்குக் கடற்கரையானது பரந்துவிரிந்துள்ளது. ஆகவே பல பகுதிகளை நாம் கடல்வழியாகக் கடந்தாக வேண்டி உள்ளது. ஆனால் அந்த வழித்தடங்கள் கூட நேர்வழியில் அமைந்தவை அல்ல. பல பயணங்களை நாம் இலங்கையைச் சுற்றித்தான் செல்லவேண்டி உள்ளது.

கிட்டத்தட்ட கடலில் 400 மைல்கள் வரை கடக்க வேண்டும். அதற்கான பயண நேரம் சுமார் 30 மணிநேரம். நேரத்தைவிட ஆகும் செலவும் எரிபொருளும் அதிகம். அதைத் தவிர்க்கவும், சரக்குப் போக்குவரத்தை லாபமடையச் செய்யவும்தான் இந்த சேது சமுத்திரத் திட்டம் தேவையாகிறது" என்கிறார்.

அத்துடன், "இத்திட்டம் 1760களில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் முதன்முதலாக முன்வைக்கப்பட்டது. அதற்காக 1838 வரை ஆய்வுப் பணிகள் நடந்தன. அப்போதே ஒரு கால்வாய்கூட தோண்டப்பட்டு சின்ன கப்பல்கள் அதன் வழியே பயணித்தும் உள்ளன. ஆனால் வெற்றிகரமாகச் செயல்படவில்லை. மீண்டும் 1860இல் ஏ.டி. டெய்லர் இதனை முன்வைத்தார். 1922 வரை பிரிட்டிஷ் அரசு முயற்சி செய்தது. அதற்கான குறிப்பு பிரிட்டிஷ் கலைக்களஞ்சியத்தில் உள்ளது" என்கிறார்.

இந்திய விடுதலைக்குப் பின் சேது வரலாறு

இந்திய விடுதலைக்குப் பின் சேது வரலாறு

இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பின்னால் 1955இல் டாக்டர் ஏ.ராமசாமி முதலியார் தலைமையில் ஒரு குழு சேதுவை ஆராய அமைக்கப்பட்டது. அதற்காக 21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு அரசினால் 1963இல் ஒரு திட்டம் தயாரானது. அதனை நாடாளுமன்றத்திற்கும் அனுப்பியது தமிழ்நாடு அரசு. அதன்பின் 1983இல் லட்சுமி நாராயணன் குழு சேதுவை ஆராய்ந்தது. ஆனால் அதை அன்றைய பிரதமர் இந்திரா காந்தி ஏற்கவில்லை. இதுவே சேது சமுத்திரத் திட்டத்தின் சுருக்கமான கடந்தகால வரலாறு.

அதன்பின் இதனை மிகத் தீவிரமாகச் செயல்படுத்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி தலைமையிலான அரசு முயன்றது. அதற்கான தொடக்க விழாவும் நடந்தேறி பணிகளும் தொடங்கின. ஆனால், பாஜக உள்ளிட்ட சில மதவாத அமைப்புகள் 'ராமர் பால'த்தை உடைப்பதாகக் கூறி சர்ச்சையில் இறங்கினர். திட்டம் முடக்கப்பட்டது. திமுக ஆட்சி போய் அதிமுக ஆட்சி வந்ததால் காட்சிகள் மாறின. இப்போது மறுபடியும் திமுக தீவிரம் காட்டத் தொடங்கி உள்ளது.

உண்மையில் சேது கால்வாய் ஏன் அரசியலாக்கப்பட்டது. அதற்கான பின்புலத்தைப் புட்டு வைக்கிறார் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு. இந்த விவகாரத்தில் அதிகம் அறிந்தவர் இவர்தான்.

அரசாங்க ரகசியங்களை புட்டுப் புட்டு வைத்த டி.ஆர்.பாலு, "ஒரு மிகப்பெரிய பிரச்சினை இந்தச் சேது சமுத்திர திட்டம். இது 5 ஆண்டுகளுக்கு முன்பாகவே நிறைவேறி இருக்கவேண்டிய திட்டம். இன்றைக்கு மக்களுக்கு இந்தத் திட்டம் குறித்த அறிவுப்பூர்வமான தெளிவு இருக்கிறது.

ஆகவே அதைக் குறித்து அதிகம் விளக்கம் தேவையில்லை. விழிப்புணர்வோடு சிந்திக்கக் கூடிய தமிழ்நாட்டு மக்களுக்கு இத்திட்டம் எதற்காக முடக்கப்படுகிறது என்பது தெரியும். அந்தச் சதியை உடைத்து தமிழ்நாட்டு மக்களின் முகத்தில் புன்னகையை திமுக விரைவில் உண்டாக்க இருக்கிறது.

2001 தமிழ்நாடு பாஜகவின் தேர்தல் அறிக்கையிலேயே 'ஆதம் பாலம்' வழியாகவே சேது சமுத்திர கால்வாய்த் திட்டம் நிறைவேற்றப்படும் என்று மிகத் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. அன்றைக்கு மாநில பாஜகவின் தலைவராக ஜனா கிருஷ்ணமூர்த்தி இருந்தார். இதுவே முதல் சான்று.

ஆதரித்த ஜெயலலிதா, பின்னால் எதிர்த்தது ஏன்?

ஆதரித்த ஜெயலலிதா, பின்னால் எதிர்த்தது ஏன்?

அடுத்து 2001இல் ஜெயலலிதா வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இரண்டு மூன்று பக்கங்கள் அளவில் இத்திட்டம் நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது. அதற்கு மேலாகப் பிரதமர் வாஜ்பாய்க்கே அவர் கடிதமும் எழுதி இருக்கிறார். இது இரண்டாவது சான்று. மூன்றாவது சான்று. நான் இதைச் சொல்லக் கூடாது. அமைச்சராக சில விஷயங்களை வெளியிடக்கூடாது என்று உறுதிமொழி எடுத்துள்ளோம்.

ஆனாலும் எனது கடமை, ஆகவே சொல்கிறேன். எனது துறைசார்ந்த அமைச்சரவைக் கோப்பில் அருண் ஜேட்லியே கையெழுத்துப் போட்டுக் கொடுத்துள்ளார். அந்தக் கோப்பில் 'ஆதம் பாலம்' வழியாகத்தான் இத்திட்டம் நிறைவேற்றப்பட்ட வேண்டும். ஆகவே இதனைச் சீக்கிரம் முடிக்கவேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.

அதேபோல ராஜ்நாத் சிங் கையெழுத்துப் போட்டுள்ளார். அதன்பின் நிதிஷ்குமார் அமைச்சரவைக்கு வந்தார். அவரும் கூறியிருக்கிறார். பியூஷ் கோயலின் தந்தை வி.பி.கோயல் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துள்ளார். அதற்கு அடுத்து வந்த அமைச்சர் திருநாவுக்கரசுகூட கையெழுத்துப் போட்டுள்ளார். ஆக, அனைத்து அமைச்சர்களும் இத்திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

மறைந்துவிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சங்கரலிங்கம், அன்றைக்கு இருந்த கப்பல்துறை மத்திய அமைச்சர் சத்ருகன் சின்ஹாவுக்கு கடிதம் எழுதுகிறார். அதற்கு அவரும் 'ஆதம் பாலம்' வழியே வரும் காலத்தில் பாலத்தைக் கட்ட இருக்கிறோம் என்று பதில் எழுதியுள்ளார்.

அதே மாதிரி ராணுவ அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னாடஸ், 'தேசியப் பாதுகாப்புக்காகவாவது இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்' என்று கடிதம் எழுதி இருக்கிறார்.

இப்படிப் பாதுகாப்பு மந்திரி மட்டுமல்ல; அந்தத் துறையின் செயலாளர் விளக்கம் எழுதியிருக்கிறார். உள்துறை அமைச்சக அலுவலகத்திலிருந்து விளக்கம் அளித்து கடிதம் எழுதப்படுகிறது. அனைத்து தரப்புகளிலிருந்தும் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அரசாங்க ரகசியம் கருதி முழுக் கடிதங்களில் உள்ள விஷயங்களை நான் வெளிப்படுத்தாமல் தவிர்க்கிறேன்.

என்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு நான் உண்மையை விளக்கவேண்டி, இத்தனை தகவல்களையும் வெளியே சொல்கிறேன். அவர்களுக்கு பணிசெய்யத்தான் எங்களைத் தேர்ந்தெடுத்தார்கள். அவர்களுக்கு நாங்கள் உண்மையாக இருக்க வேண்டும் என்பதாம் சொல்லவேண்டிய கட்டாயம் உள்ளது.

உமாபாரதி சேது கால்வாயில் போட்ட துளைகள்

உமாபாரதி சேது கால்வாயில் போட்ட துளைகள்

நாங்கள் 2.7.2005இல் மதுரையில்தான் மிகப்பெரிய விழா நடத்தினோம். அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் பொத்தானை அழுத்தியதும் பணி தொடங்கியது. இருபத்து மூன்றரை கி.மீட்டர் வரையான பணிகள் முடிந்தேவிட்டது. இன்னும் 23.5 கி.மீட்டர் தான் பாக்கி. கொஞ்சம் விட்டு இருந்தால் முடித்திருப்போம்.

ராமர் பாலத்தை உடைக்கக் கூடாது என்கிறார்கள். அப்படி என்றால் 81 இடங்கள் போர் ஹோல் போட்டாரே உமாபாரதி? அப்போது அவர் அமைச்சராக இருந்தார். அப்போது அந்தப் பாலம் உடையாதா? சேதமாகாதா? அந்த ராமர் பாலம் இருந்த பகுதியில் தானே 100 மீட்டருக்கு ஒரு போர் ஹோல் போட்டார்கள்? மண்ணை எடுத்துச் சோதித்துப் பார்த்தார்கள்.

அந்தச் சோதனையின் முடிவில் டிசம்பர் 2002இல் என்ன சொன்னார்கள்? Geological Survey of India சொன்னது என்ன தெரியுமா? கடல் மட்டத்தின் ஏற்றத் தாழ்வைத்தான் இந்தப் பகுதி வெளிப்படுத்துகிறதே ஒழிய, அந்தப் பகுதியிலிருந்து வேறு எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றார்கள்.

அந்தச் சோதனையில் கல், மணல், கட்டடம் இருந்தன என்று எதையுமே சொல்லவில்லை. ரகசியமாக வாஜ்பாய்க்கு ரிப்போர்ட் சொன்னார்கள். உமாபாரதி ஒரு சந்நியாசி. அவரே அங்கு பாலம் இருந்ததற்கான சான்று இல்லை என்று என்னிடம் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டார்.

அடுத்து விஷயத்திற்கு வருகிறேன். வின்சென்ட் ஸ்மித் தான் முதன்முதலாக இந்தியாவின் வரலாற்றை எழுதியவர். அதேபோல வரலாற்று ஆய்வாளர் ரோமிலா தாப்பர் சொல்லி இருக்கிறார். அவரிடம்தான் நான் அடிக்கடி சென்று சந்தேகம் கேட்டுப்பெறுவேன்.

நான் செய்வது சரியா? தவறா? விளக்கம் பெறுவேன். பலமுறை கடிதம் எழுதி எழுதி விளக்கம் வாங்கிய ஒரே அமைச்சர் நான் தான். சரியான தகவலைத் தெரிந்துகொள்ள நாட்டின் மிகச்சிறந்த வரலாற்று ஆசிரியரிடம் கேட்டு விளக்கம் வாங்கியவன் நான்.

ரோமிலா தாப்பருக்கு எழுதிய கடிதங்கள்

ரோமிலா தாப்பருக்கு எழுதிய கடிதங்கள்

அதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். ரோமிலா தாப்பர், 'மனிதர்களால் கட்டப்பட்ட ஆதம் பாலம் என்ற ஒன்று இல்லை' என்று சொன்னார். வின்சென்ட் ஸ்மித் சொல்லி இருக்கிறார்.

ஜவஹர்லால் நேரு மிகமிக நம்பிய மனிதர் சத்தியநாத அய்யர். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருவர். அந்த சத்தியநாத ஐயர் சொல்கிறார், 'மனிதர்களால் கட்டப்பட்ட பாலம் அங்கு இல்லை' என்று கூறியிருக்கிறார். இவை கட்டுக்கதை என்று அவரும் விளக்கி இருக்கிறார். இந்து மதத்தைப் பற்றி அதிகம் தெரிந்த ராஜாஜியே சொல்லி இருக்கிறார். அவரைவிட இந்து மதம் குறித்து அறிந்தவர் வேறு யாராவது இருக்கிறார்களா?

ஆகவே மக்கள் அறிவியல் ரீதியாக சிந்திக்க வேண்டும். அரசியல் சாசனம் 51 ஏ சொல்கிறது. ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள் அரசியல் சட்டம் சொன்னதைக் குழிதோண்டிப் புதைக்கிறீர்கள். ஆறு மாவட்டங்களில் சேது சமுத்திரத் திட்டம் குறித்து கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 2 வருடங்கள் நடத்தப்பட்டது. அப்படி நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் யாராவது ஒருவர் 'இங்கு ராமர் பாலம் இருக்கிறது, ஆகவே இதைக் கட்டாதே' என்று சொல்லி இருக்கிறார்களா?

ஜெயலலிதா சொன்னாரா? பாஜக சொன்னதா? அல்லது வேறு கட்சிகள் சொன்னதா? அப்போது எல்லாம் சும்மா இருந்துவிட்டு, திட்டம் செயல்வடிவம் பெற்று நடந்து கொண்டிருந்தபோது பாதியிலேயே நிறுத்தினீர்களே அது நியாயமா? தமிழர்களின் பாவம் பொல்லாதது. அது உங்களை சும்மா விடாது.

இதற்காக நீதி கேட்டு, எங்கெல்லாம் முறையிட்டு இருக்கிறேன் தெரியுமா? தமிழ்நாடு சுற்றுச்சூழல் குழுமத்திற்குச் சென்று முறையிட்டேன். காட்டு இலாக்காவைச் சந்தித்து முறையிட்டுள்ளேன். மேலாண் கடல்வாரிய குழு அதிகாரிகளைச் சந்தித்துப் பேசி இருக்கிறேன். இந்திய அரசின் சுற்றுச்சூழல் துறை, பாதுகாப்புத் துறை , கப்பல்துறை, வெளி விவகாரத்துறை, இறுதியாக இலங்கை அரசு வரை இதற்காக முறையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறேன். ஆகவே இதற்கு எல்லாம் மதச்சாயம் பூசக்கூடாது என்பதே என் கருத்து.

140 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த ஆய்வு:

140 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த ஆய்வு:

இந்த புராதன சின்னமான ஆதம் பாலத்தை ஆய்வு செய்வதற்காக ஜெர்மனியில் உள்ள ஜெனா பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ஜான்ஸ் வால்டர் 140 ஆண்டுகளுக்கு முன்னால் வந்தார். அவர் 1891 ஆம் ஆண்டு ஆதாம் பாலம் குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டார். அந்த ஆய்வின் முடிவில் அவர், "ஆதாமின் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டதல்ல. இங்கே மணலும் கூழாங்கற்களும்தான் உள்ளன" என்று கூறினார். மிகப் பெரிய நிலவியல் அறிஞரே சொன்ன உண்மை இது.

நாசா எடுத்த புகைப்படத்தை மேற்கோள் காட்டி வாதம் செய்தார்கள். நாங்கள் நாசாவுக்கு அனுப்பி விளக்கம் கேட்டோம். அதற்கு அவர்கள், 'இந்தப் படம் சரியானதுதான். ஆனால் ஆதம் பாலம் எனச் சொல்வதற்கும் இந்தப் படத்திற்கும் தொடர்பு இல்லை. நாங்கள் எடுக்கின்ற போது கிடைத்த படத்தை வெளியிட்டுள்ளோம். அது கட்டுக்கதை என விளக்கம் அளித்தார்கள்' என்றார்கள்.

ஆகவே சொல்கிறேன். புராதன சின்ன பாதுகாப்பு சட்டத்தின் படி இதைத் தடுக்கவே முடியாது. ஏனெனில் அதற்கான வரலாற்றுச் சான்றுகளே கிடையாது. அப்படி வந்தால் சட்டப்படி அதைத் தடுத்து நிறுத்துவோம்.

ஜெயலலிதா 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்தப் பாலம் கட்டப்பட்டது என்கிறார். அறிவியல் படி மனித இனம் தோன்றியே 5 லட்சம் ஆண்டுகள் ஆகிறது. அப்படி என்றால் 17 லட்சம் எப்படி வரும் என்று கேட்டால், அது எங்களின் நம்பிக்கை என்றார். அறிவியல் முக்கியமா? நம்பிக்கை முக்கியமா?" என்கிறார் பாலு.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+