கொரோனா.. தெர்மல் சோதனை முதல் ஷிப்ட் முறை வரை.. அலுவலகங்களுக்கு புதிய விதிமுறைகளை விதித்த மத்திய அரசு
சென்னை: ஊரடங்கு நேரத்தில் செயல்படும் நிறுவனங்கள் மற்றும் துறைகளுக்கான விதிமுறைகளை மத்திய அரசு கடுமையாக்கி உள்ளது. அலுவலகங்களில் எப்படி இருக்க வேண்டும் என்று கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
Recommended Video
இந்தியா முழுவதும் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நேற்றோடு முடிய வேண்டிய ஊரடங்கு மே 3 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்த கட்டுப்பாடுகள் தொடர்பான விதிமுறைகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதாவது ஊரடங்கிற்கு இடையில் எந்த நிறுவனங்கள் எல்லாம் செயல்படலாம், எதெல்லாம் செயல்பட முடியாது என்று விவரங்கள் மத்திய உள்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

ஊரடங்கு விலக்கு
அதன்படி மத்திய அரசின் ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள துறைகளின் விவரங்கள் பின்வருமாறு: ரேஷன் கடைகள், காய்கறி, மளிகை கடைகள், பால், கறி, மீன் கடைகள் எப்போதும் போல செயல்படும். இவர்கள் வீட்டிற்கே பொருட்களை டெலிவரி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், ஏடிஎம்கள், வருமான வரித்துறை நிறுவனங்கள் எப்போதும் போல இயங்கும். மீடியா துறை எப்போதும் போல செயல்படும்.

வீட்டில் இருந்து வேலை பார்க்கலாம்
அதேபோல் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், இன்டர்நெட் சர்வீஸ் நிறுவனங்கள், கேபிள் நிறுவனங்கள், முக்கியமான ஐடி துறை நிறுவனங்கள் எப்போதும் போல செயல்படும். ஆனால் ஐடி நிறுவனங்கள் வீட்டில் இருந்து வேலை பார்க்கும் வாய்ப்பை வழங்க வேண்டும். அதேபோல் உணவு, மருந்துகள், மருத்துவ சாதனங்களை டெலிவரி செய்யும் பணிகள் எப்போதும் போல நடக்கலாம்.

முக்கியமான துறைகள்
பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் நிறுவனங்கள் எப்போதும் போல இயங்கலாம். மின்சார துறை எப்போதும் போல செயல்படும். பொதுவாக இப்படி பணிகளை செய்யும் நிறுவனங்கள் கடுமையான விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான விதிமுறைகளை மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது. அதன்படி பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள் தங்கள் நிறுவன வளாகத்தை மொத்தமாக கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

மொத்தமாக சுத்தம் செய்ய வேண்டும்
அதேபோல் கேன்டீன்களை மொத்தமாக சுத்தம் செய்ய வேண்டும். மீட்டிங் அறைகள், கான்பிரன்ஸ் அறைகள், திறந்த வெளி அரங்குகள் ஆகியவற்றை சுத்தம் செய்ய வேண்டும். பார்க்கிங், லிப்ட் பகுதிகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். கழிப்பறைகள், சுவர்கள் என்று அனைத்தையும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

ஷிப்ட் முறைகள்
அலுவலகங்களில் 30-40% பேர் மட்டுமே பணியாற்ற அனுமதிக்கப்பட வேண்டும். அலுவலகத்திற்கு உள்ளே வரும் வாகனங்களை முழுமையாக கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்த பின்தான் அனுமதிக்க வேண்டும். அலுவலகத்தில் தெர்மல் சோதனைகளை கட்டாயமாக்க வேண்டும். மருத்துவ காப்பீடு எல்லோருக்கும் கட்டாயமாக்கப்பட வேண்டும்.

புகையிலை பொருட்கள்
லிப்ட்களில் செல்வதை விட படிகளில் செல்வதை ஊக்கிவிட வேண்டும். குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும். அவசியமற்ற நபர்கள் அலுவலகம் வருவதை தடுக்க வேண்டும். அலுவலகத்தில் எல்லோரும் மத்திய அரசின் ஆரோக்ய சேது செயலியை பயன்படுத்த வேண்டும். பணியாளர்களின் ஷிப்டுகளுக்கு இடையில் ஒரு மணி நேரமாவது இடைவெளி இருக்க வேண்டும்.

ஒரே நேரத்தில் வேலை செய்ய கூடாது
ஒரே நேரத்தில் எல்லோரும் வேலை செய்ய கூடாது. உணவு இடைவேளை ஒரே நேரத்தில் வழங்கப்பட கூடாது. 65 வயதுக்கும் அதிகமான நபர்கள் வீட்டில் இருந்து வேலை பார்க்க அனுமதிக்கப்பட வேண்டும். பணியாளர்கள் எல்லோர்க்கும் மாஸ்க் மற்றும் கிருமிநாசினிகள் வழங்கப்பட வேண்டும். அலுவலக கூட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும்.












Click it and Unblock the Notifications