கோவில் சொத்துக்களின் வருவாயை வசூலித்தாலே.. பற்றாக்குறையில்லா பட்ஜெட் கிடைக்குமே! உயர்நீதிமன்றம்
சென்னை: ‛‛கோவில் நிலங்களை மீட்பதில் சுணக்கம் கூடாது. அறநிலையத்துறை கோவில்களுக்கு சொந்தமான சொத்துகள் மூலம் வரும் வருவாயை முறையாக வசூலித்தால் தமிழகத்தில் பற்றாக்குறை இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்ய முடியும்'' என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறினர்.
கோவில் சிலைகள் மற்றும் நகைககள் பாதுகாப்பு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது. இதில் 75க்கும் மேற்பட்ட வழிகாட்டுதல்களை வழங்கி உத்தரவிட்டது.
இந்த உத்தரவில் 35 அமல்படுத்தப்பட்டதாகவும், 5 உத்தரவுகள் மாநில அரசு தொடர்பில்லாதது என்றும், 32 உத்தரவுகளில் மறு ஆய்வு செய்ய வேண்டுமென தமிழக அரசு தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு விசாரணை
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் வழக்கறிஞர் அருண் நடராஜன் ஆஜராகி வாதாடினார். உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், ‛‛பழமையான கோவில்கள் புனரமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணியில் கோவில்களின் செயல் அலுவலர்கள், பொதுப்பணித் துறையினர் நேரடியாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் கோவில்கள் புனரமைப்பிற்கான மாவட்ட மற்றும் மாநில குழுக்களின் ஆலோசனை படி செயல்பட்டு வருகின்றனர். ஒரு கால பூஜை நடைபெறும் கோவில்களுக்கான நிதி, ஒரு லட்ச ரூபாயில் இருந்து, 2 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. கோவில்களின் கணக்குகளை தணிக்கை செய்ய தமிழக தணிக்கை துறை தலைவர் தலைமையில் 5 நபர்கள் கொண்ட குழுவை அமைக்கப்பட்டுள்ளது.

நிலம் மீட்பு பணி
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமாக 5,82,039 ஏக்கர் நிலங்களில் 3,79,000 ஏக்கர் நிலங்கள் கண்டறியப்பட்டு விபரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள நிலம் கண்டறியப்பட்டு வருவதாகவும், நாளொன்றுக்கு 2000 ஏக்கர் வீதம் மீட்கப்பட்டு வருகிறது. கோவில்களில் ஸ்ட்ராங் ரூம்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டு வருகிறது.சிலவற்றை மறு ஆய்வு செய்யக்கோரும் மனுவை பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்'' என வாதிட்டார்.

நிதி வசூலிக்க அனுமதி கூடாது
இதனை கேட்ட நீதிபதிகள் சில அறிவுரைகளை வழங்கினர். கணக்கு தணிக்கைக்கு ஒரே ஒருவர் தலைமையில் மற்ற 5 அலுவலர்கள் கொண்ட குழு போதாது என்றும், குறைந்தபட்சம் 15 தணிக்கையாளர்கள் உள்ள குழுவை அமைக்க வேண்டுமென அரசிடம் தெரிவிக்கும்படி கூறினர். மேலும் அறநிலையத்துறை கோவில்களின் பணிகளுக்காக இணையதளங்கள் வாயிலாக தனியார் அறக்கட்டளைகள் நிதி வசூலிப்பதை அனுமதிக்கக் கூடாது. இதை மீறும் இணையதளங்கள் முடக்கி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். கோவில் நிலங்கள் மீட்பதில் சுணக்கம் கூடாது. ஆக்கிரமிப்பாளர்கள் இருந்தால் உடனடியாக வெளியேற்றி கட்டிடங்களை பூட்டி சீல் வைக்க வேண்டும். மறுத்தால் அவர்களின் தனிப்பட்ட சொத்துக்களை முடக்க அறநிலையத்துறைக்கு அதிகாரம் உள்ளதாக கூறினர்.

பற்றாக்குறை இல்லாத பட்ஜெட்
அதோடு அங்கீகரிக்கப்படாத குத்தகைகள் இருந்தால் அவற்றை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், உடந்தையாக உள்ள அதிகாரிகளுக்கு எதிராக புகார்கள் வருவதாகவும், அவற்றில் உரிய நடவடிக்கை எடுக்கவும் அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர். குறிப்பாக அறநிலையத்துறை கோவில்களுக்கு சொந்தமான சொத்துகள் மூலம் வருகின்ற வருவாயை முறையாக வசூலித்தால், தமிழக அரசால் பற்றாக்குறை இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியும் என்றும் நீதிபதிகள் உறுதிபட தெரிவித்தனர். இதையடுத்து வழக்கு விசாரணை மூன்று வாரங்ளுக்கு தள்ளி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications