தேவநாதன் யாதவுக்கு மீண்டும் போலீஸ் கஸ்டடி.. தோண்டித் துருவக் காத்திருக்கும் பொருளாதார குற்றப்பிரிவு!
சென்னை: நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத் தலைவர் தேவநாதன் யாதவை 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு அனுமதி வழங்கியுள்ளது சென்னை சிறப்பு நீதிமன்றம்.
சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 144 முதலீட்டாளர்களிடம் 24 கோடியே 50 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அந்த நிதி நிறுவனத்தின் இயக்குநர் தேவநாதன் யாதவ் உள்பட 5 பேரை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவுக்கு மீண்டும் போலீஸ் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேவநாதன் யாதவை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனையடுத்து, தேவநாதன் யாதவை 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
செப்டம்பர் 23 ஆம் தேதி மாலை 4 மணிக்கு மீண்டும் தேவநாதனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம், மீண்டும் போலீஸ் காவலுக்கு சென்றுள்ளார் தேவநாதன். அவரிடம் போலீசார் நடத்தும் விசாரணையில் புதிய தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை மயிலாப்பூரில் தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி நிறுவனத்தை இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் தேவநாதன் யாதவ் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்புத்தொகை உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நிறுவனத்திற்கு சென்னையில் மட்டும் 5 கிளைகள் உள்ளன.
இந்த நிதி நிறுவனத்தில் குறைந்தபட்ச நிரந்தர வைப்பு நிதியாக ரூ.1 லட்சம் முதல் எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தலாம். செலுத்தும் பணத்திற்கு 8 முதல் 12 சதவீத வட்டி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதனை நம்பி தமிழ்நாடு முழுவதும் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 கோடி வரையிலும் ஏராளமானோர் முதலீடு செய்துள்ளனர்.
இந்நிலையில், முதலீடு செய்தவர்களுக்கு முதிர்வுத் தொகை மற்றும் வட்டிப் பணம் முறையாக வழங்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தினமும் மயிலாப்பூர் பகுதியில் உள்ள நிதி நிறுவனத்திற்குச் சென்று பணத்தைக் கேட்டு முறையிட்டனர். மேலும், காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் பொருளாதார குற்றப்பிரிவிலும் புகார் அளித்தனர்.
இந்நிலையில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.525 கோடி பெற்று ஏமாற்றியதாக தெரியவந்தது. இதனை அடுத்து, திருச்சியில் வைத்து இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் தேவநாதன் யாதவை கைது செய்தனர். மேலும், இதே மோசடி வழக்கு தொடர்பாக அந்நிறுவனத்தின் இயக்குனர்களான குணசீலன், மகிமைநாதன், தேவ சேனாதிபதி, சுதிர் சங்கர் ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
மயிலாப்பூர் நிதி நிறுவனத்தின் மீது ஏகப்பட்ட புகார்கள் வந்த நிலையில், தேவநாதன் பெயரில் உள்ள 5 வங்கிக் கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கினர். இதுவரை 27 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. இதில் நிதி நிறுவனத்தின் பெயரில் இருந்த 18 வங்கிக் கணக்குகள், தேவநாதனின் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றும் செய்தியாளர் குணசீலனின் 2 வங்கிக் கணக்குகள், ஒளிப்பதிவாளர் மகிமைநாதனின் 2 வங்கிக் கணக்குகளையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கி உள்ளனர்.
தேவநாதன் யாதவ் செய்ய முறைகேடு விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களை அழைத்து புகார் கொடுக்க மயிலாப்பூரில் போலீசார் சார்பில் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி தொடர்பாக இதுவரை 4 ஆயிரத்திற்கும் அதிகமான புகார்கள் பெறப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications