அதிக வட்டி தருவதாக பல கோடி ரூபாய் மோசடி.. ஐஎப்எஸ் நிறுவன நிர்வாகிகளுக்கு பிடிவாரண்ட்
தங்களிடம் முதலீடு செய்வோருக்கு 10 முதல் 25 சதவீதம் வரை மாதந்தோறும் வட்டி தருவதாக ஐஎப்எஸ் நிறுவனம் சார்பில் கவர்ச்சிகரமான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை நம்பி ஏராளமானோர் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.
சென்னை: அதிக வட்டி தருவதாகக் கூறி ரூ.56 கோடியே 82 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், ஐஎப்எஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், நிர்வாகிகள் உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடியைத் தலைமையிடமாகக் கொண்டு 'இன்டர்நேஷனல் ஃபைனான்சியல் சர்வீஸ்' (IFS) என்ற பெயரில் ஒரு நிறுவனம் செயல்பட்டு வந்தது. தங்களிடம் முதலீடு செய்வோருக்கு 10 முதல் 25 சதவீதம் வரை மாதந்தோறும் வட்டி தருவதாக ஐஎப்எஸ் நிறுவனம் சார்பில் கவர்ச்சிகரமான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை நம்பி ஏராளமானோர் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். இவ்வாறு ரூ.6000 கோடி வரை அந்நிறுவனம் வசூலித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சொன்னது போல யாருக்கும் இந்நிறுவனம் வட்டித்தொகை செலுத்தவில்லை. இதுதொடர்பாக 200 முதலீட்டாளர்கள் அந்நிறுவனத்தின் மீது புகார் அளித்தனர். இதன் அடிப்படையில், ரூ.56 கோடியே 82 லட்சம் மோசடி செய்ததாக, ஐஎப்எஸ் உட்பட 6 நிறுவனங்கள் மற்றும் அவற்றின் இயக்குநர்கள், நிர்வாகிகள், ஊழியர்களுக்கு எதிராகப் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு சம்பந்தமாக நிறுவன இயக்குநர் மோகன்பாபு, நிர்வாகிகள் சரவணகுமார், குப்புராஜ், ஜெகனநாதன் உள்ளிட்ட 13 பேரைப் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், சென்னையில் உள்ள நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 3 பேர் மட்டும் ஆஜராகினர். 10 பேர் ஆஜராகவில்லை. இவர்களைக் கைது செய்து பிப்ரவரி 28-ம் தேதி ஆஜர்படுத்துமாறு, வழக்கின் புலன் விசாரணை அதிகாரிக்கு உத்தரவிட்ட நீதிபதி, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பித்தும் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications