அஜித் படத்தில் அனுமதியின்றி பாட்டு.. சும்மா இல்லாத இளையராஜா! இப்போ அவருக்கே உத்தரவு போட்ட நீதிமன்றம்
சென்னை: சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியாகியிருந்த 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் தன்னுடைய பாட்டை அனுமதியின்றி படக்குழு பயன்படுத்தியிருப்பதாக இளையராஜா நீதிமன்றத்தை நாடியிருந்தார். இந்நிலையில், இது தொடர்பான வழக்கில் தற்போது இளையராஜாவுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய 'குட் பேட் அக்லி' திரைப்படம் ஏப்ரல் 10 அன்று திரையரங்குகளில் வெளியானது. இதில் அஜித் தனது ஸ்லிம்மான தோற்றத்தால் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றார். திரைப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு, சுனில் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் அஜித்துடன் இணைந்து நடித்தது, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்திருந்தது. ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்த இந்தப் படத்தில், இளையராஜாவின் பாடல்கள் முக்கிய அம்சமாக இருந்தன.

குறிப்பாக, 'ஒத்த ரூபா தாரேன்', 'என் ஜோடி மஞ்ச குருவி', 'இளமை இதோ இதோ' போன்ற இளையராஜாவின் புகழ்பெற்ற பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. ஆனால், இந்தப் பாடல்கள் தனது அனுமதியின்றி படத்தில் சேர்க்கப்பட்டதாக இசையமைப்பாளர் இளையராஜா குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து, தயாரிப்பாளரிடம் ₹5 கோடி இழப்பீடும், மன்னிப்பும் கோரி இளையராஜா வழக்குத் தொடர்ந்தார்.
பதிப்புரிமை மீறல் தொடர்பான இந்த வழக்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமீபத்திய விசாரணையின்போது, 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் இளையராஜா பாடல்களை மியூட் செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த சட்டச் சிக்கல்கள் இருந்தபோதிலும், 'குட் பேட் அக்லி' மே 8 அன்று நெட்ஃபிளிக்ஸில் வெளியானது.
திரையரங்குகளில் படம் பார்க்கத் தவறியவர்கள் ஓடிடியில் படத்தைப் பார்த்து ரசித்தனர். பல மாதங்களாக ஓடிடியில் ஒளிபரப்பாகி வந்த திரைப்படம், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென டிஜிட்டல் தளத்திலிருந்து இன்று நீக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் குழப்பமடைந்தனர். இளையராஜாவின் சட்டப் போராட்டமே இந்த திடீர் நீக்கத்திற்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும், ஓடிடி தளம் இது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ விளக்கத்தையும் இன்னும் அளிக்கவில்லை.
இந்நிலையில், அஜித்குமாரின் 'குட் பேட் அக்லி' படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீது செப். 24ம் தேதி பதிலளிக்க இளையராஜாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications